Skip to main content

நீலக்குறுநிலவு


"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது.


"ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா"


"ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல கண்டிப்பான ஆணையானு புரிஞ்சிக்கமுடியாம பல இரவுகள் கேட்டுகிட்டு இருந்திருக்கேன். அழைப்பா இருந்தாலும் ஆணையா இருந்தாலும் திரும்ப திரும்ப முன்வைக்கப்படும் போது அது பொருளிழந்து போகுதோன்னு எனக்குத் தோனும்"


"ம்ம்ம். ஒருவேளை தொடர்ந்து கேட்டா எனக்கும் அப்டி தோணலாம். இதோட தமிழ் பேர் என்ன?"


"அக்காக்குயில். ஆங்கிலத்திலும் சரியான பெயர் Common Hawk Cuckoo. Brain fever bird ங்குறது பட்டப் பேர்தான்."


"ஓ சரிதான். நேத்து மெர்லின்ல அந்தப் பேர் காட்டுச்சு. ஆனா என்னால நேர்ல பாக்க முடியல."


"ஆமாக்கா. இந்தப் பறவைய வெளிய எங்கேயும் அதிகமா பாக்க முடியாது, ஆனா குரல் மட்டும் எல்லா திசையிலேர்ந்தும் கேட்டுட்டே இருக்கும். எனக்குத் தெரிஞ்சு பொதுவா குயில் இனமே அப்டிதான். ஓசைய மட்டும் காத்துல பரவவிட்டுட்டு ஒளிஞ்சிட்ருந்து நம்மள பாத்து பரிகாசம் பண்ணுதுங்கன்னு நினைக்கிறேன். தங்களோட குரல் மேல அதுங்களுக்கு கர்வம் அதிகம். அத வச்சு நம்மல அலய விடுதுங்க," சொல்லிக் கொண்டிருக்கும் போதே  யோகேஸ்வரன் அண்ணா ‘எங்கே என்னோட குயில்’ என்று உற்சாகத்துடன் வந்து அருகில் அமர்ந்தார். அவரிடம் அதுவரை கண்ணில் பட்டிருந்த கரிச்சான், மலபார் கிளிகள் மற்றும் வால்காக்கைகளைக் காண்பித்தோம். அவர் ஒவ்வொன்றையும் பைனாகுலரில் பார்த்துவிட்டு மனதிற்குள்ளும் ஒருமுறை சொல்லிக் கொண்டார்.


அதற்குள் அஜிதன் தன்யா வந்து இணைய அஜிதன் பைனாகுலரை வாங்கி சிறிது நேரம் காற்றில் துழாவினான். அவன் முகத்தில் ஆர்வமும் சிரிப்பும் தெரிந்தது. ஏதோ அரிய பறவை ஒன்றை எங்களுக்கு காட்டப் போகிறான் என்கிற ஆர்வத்தில் நாங்கள் அவனைப் பார்த்தோம்.


"இந்த பைனாகுலர் நல்லாருக்கே. எதிர்ப்பக்கம் தூரத்துல இருக்க மலையில ஒரு கிராமம் இருக்குல்ல.. அங்க இருக்க வீடுங்க எல்லாம் இதுல தெளிவா தெரியுது. அக்கா ஒருத்தவுங்க ஒரு கைல குழந்தையோட இன்னொரு கைல மாட்ட பத்திட்டு தொழுவத்துப் பக்கம் போறாங்க" என்றான்.


"அடப்பாவி, பட்சி பாத்து சொல்வேனு பாத்தா அக்காவ பாத்துட்ருக்கியா. விட்டா நீ இங்க இருந்தே அந்த கிரமத்துல புரணி கிளப்பி விட்ருவ.." என்று நவீன் இடைபுகுந்து அஜிதனின் தோளில் கைபோட்டார். நானெல்லாம் மலை இருவாச்சியத் தவிர வேற எந்தப் பறவையும் பாக்குறதில்ல பாத்துக்க என்கிற ரீதியில் பைனாகுலரை தன்வசப்படுத்தினார். அதற்குள் ஆசிரியர் ஜெவும் அந்த ஏரியாவுக்கு வந்துவிட, கூட்டம் கூடியதில் பேச்சு வேறு திசைக்கு சென்று விட்டது.


அப்போதே யோகா அண்ணா என்னைத் தனியாக அழைத்து இன்று மாலையோ அல்லது நாளை காலையோ பறவை பார்க்க போகலாம் என்றார். வகுப்பின் மனநிலைக்கு இடையில் மாலைநேரம் பறவைப் பார்த்தல் வேண்டாம்னா, வேணும்னா நாம நாளைக்கு விடியற்காலையே மடம் போயிரலாம். அங்க குளத்தங்கரைய ஒட்டி அருமையான இடம் ஒன்னு இருக்கு. நமக்கும் காலை நேரத்துல மடம் கோயிலுக்கு போன மாதிரி இருக்கும் என்றேன். 


சுந்தர பாண்டியனும் முந்தின தினமே என்னிடம் சந்தர்ப்பம் அமைகையில் பறவைப் பார்க்க போகலாம் என்று சொல்லியிருந்தார். அவர் இதற்காகவே பைனாகுலர், கைபேசியுடன் இணைக்கக் கூடிய கேமரா லென்சுகள் என இரண்டு பைகள் நிறைய விதவிதமான தளவாடங்களை சுமந்து வந்திருந்தார். நாங்கள் மூவரும் ஞாயிறு காலை ஐந்தரை மணிக்கு மடத்திற்கு புறப்படுவதாக முடிவானது.


**


மூவருமே குறித்த நேரத்தில் கிளம்பியிருந்தோம். கொஞ்சம் பனிமூட்டம் இருந்தது. புளியமரத்திடியில் இருந்த வெள்ளையன் மட்டுமே அந்நேரத்தில் விழித்திருந்து எங்களை வாலாட்டி வழியனுப்பினான். நாங்கள் காரை எடுத்துக்கொண்டு புளியமரத்தை கடக்கையில் இரண்டு சிலம்பன்கள் பாதையின் ஓரத்தில் வந்தமர்ந்தன. ஈரோட்டின் மாவட்டப் பறவையாக அறிவிப்பதற்கு என்னிடம் யாராவது கேட்டால் நான் யோசிக்காமல் தவிட்டுச் சிலம்பனை (Yellow-Billed Babbler) சொல்லிவிடுவேன். பறவைப் பார்க்க துவங்கியது முதல் இதுநாள் வரை இவற்றின் சிலம்பொலியை கேளாமல் ஒருநாளும் கடந்ததில்லை. “இது தவிட்டுக் குருவி தான?” முன் சீட்டில் அமர்ந்திருந்த யோகா அண்ணா கேட்டார்.

“ஆமாண்ணா. இதுங்க தான் ஏழு சகோதரிகள் (Seven sisters), ரெண்டு எண்ணம் இங்க இருக்குன்னா மத்ததும் பக்கத்துல தான் இருக்கும். கொஞ்ச நேரம் பாப்பம்,” காரை நிறுத்திவிட்டு சில நொடிகள் காத்திருந்தோம். சகோதரிகள் ஒவ்வொருவராக மெல்லிய சிணுங்கல் ஒலியுடன் பாதையைக் கடந்து மறுபக்கம் சென்றனர். “தனித் தனியா போகும் போது சத்தம் கம்மியாயிருக்கும்னா. சகோதரிங்க ஒன்னுகூடிட்டா ஒரே சச்சரவுதான்.”


“ஆமாப்பா ஊர்லயும் மாடிக்குப் போனா ஒரே அடாவடி சத்தமா கேக்கும். இதுங்க தானா. இனிமே கவனிச்சுக்குறேன்,” அப்படியே மெதுவாக நகர்ந்து டார்மென்ட்ரி வரை சென்றிருந்தோம். அங்கு ஒரு நண்பர் குறுக்கிட்டு சுந்தர பாண்டியனிடம் வண்டி எங்கே போகிறது என விசாரித்தார். பறவைப் பார்க்க மடத்திற்கு என்றதும் அவரும் பின்சீட்டில் ஏறிக்கொண்டார். முன்சீட்டில் யோகா அண்ணனின் எடைக்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிதாக சேர்ந்திருந்த திண்டுக்கல் மருது அண்ணன் பின்சீட்டில் அமர்ந்ததால் வண்டி ஒரு சமநிலைக்கு வந்தது. நித்யவனத்தின் நுழைவாயிலை கடக்கும்போது பாண்டியன் ஒரு ஜோடி புள்ளி ஆந்தைகளை காட்டித் தந்தார்.


வழக்கமாக கண்ணில் படும் பறவைகளாக இருந்தாலும் யோகா அண்ணன் அவற்றின் விவரங்களையும் விரிவாக கேட்டுக் கொண்டார். உண்மையில் அதுவொரு நல்ல பயிற்சி. அரிய பறவைகளை தேடி அடைவது சுவாரசியமானது தான். அதேசமயம் நாள்தோறும் காண நேரும் பறவைகள் மீதான கவனத்தை தக்க வைப்பதும் அதேயளவு அவசியம் என நினைக்கிறேன். உதாரணமாக மைனா பறக்கும் போது மட்டுமே சிறகுகளில் வெண்ணிறம் தெரிவதை யோகாவே கண்டு சொன்னார். எனக்கு காற்றில் சரேலென திசை மாற்றும் மைனாவின் லாவகம் பிடிக்கும். அதைவிட அலகுடன் சேர்ந்து அதன் கண்கள் வரை நீண்டு கவனத்தை ஈர்க்கும் மஞ்சள் நிறத் தீற்றல் பிடிக்கும். அதன் தழல் சூழ் கண்களை அருகில் பார்ப்பதற்காகவே ஓரிடத்தில் நிறுத்தினோம். மைனா குடும்பத்தை சேர்ந்த இன்னொரு பறவையும் அப்போது எங்கள் பார்வை வட்டத்திற்குள் வந்தது. நான் முதலில் அதை சூரைக்குருவி (Rosy Starling) என்று தவறாக சொல்லிவிட்டேன். பாண்டியன்தான் கூர்ந்து பார்த்துவிட்டு இல்லை அது கருந்தலை மைனா (Brahminy Starling) என்று திருத்தினார். அதன் பிறகு நீளவால் கீச்சான் (Long tailed Shrike), மணிப்புறாக்கள், கரிச்சான்கள் என பயணம் தொடர்ந்தது. வழியில் கொத்துக் கொத்தாக பூத்திருந்த பலாப்பழங்களை பார்த்தும் மானசீகமாக அவற்றை சுவைத்துவிட்டு கடந்தோம்.



அடுத்ததாக வெள்ளிமலையில் அதிகம் காணப்படும் இருவகை சின்னான்களும் - சின்னான் (Red vented Bulbul), செம்மீசை சின்னான் (Red whiskered Bulbul) அடுத்தடுத்து கண்ணில் பட்டன. சின்னான்களிடம் எப்போதும் தலையில் கிரீடம் வைத்தாற்போன்ற பெருமிதத்தப் பார்வை உண்டு. அதிலும் கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்கும் கொண்டை வைத்த Red-Whiskered Bulbul க்கு எப்போதும் இளவரச பாவனை தான். காரை மெதுவாக செலுத்தியபடியே ஒவ்வொன்றின் அசைவுகளையும் கவனித்தபடியே நகர்ந்தோம். பக்கவாட்டில் வந்த ஒரு லண்டானா புதர் நடுவே இரு கொண்டை சின்னான்கள் (Whiskered) கூடிக்கூடி ரகசியம் பேசிக் கொண்டிருந்தன. ஆனால் அளவில் சிறிதாகவும் அதன் அடிப் (Vent) பகுதியில் சிகப்புக்கு பதில் லேசான மஞ்சள் நிறமும் தெரிந்தது. கொண்டை தெளிவாகவே இருந்தது, அவை சின்னான்கள் என்பதில் ஐயமில்லை. குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அவற்றின் தாய்ப் பறவை வந்து உணவூட்டியதும் காரில் எங்கள் அனைவருக்கும் குதூகலமாகிவிட்டது. இத்தனை நேரமும் சின்னான் குஞ்சுகளை பார்த்திருக்கிறோம். இந்த ஆண்டின் முதல் பறவை குஞ்சுகளை இரண்டு வாரம் முன்பு அன்பரசி காட்டித் தந்தார். இதுவரை நான் பறவை குஞ்சுகளை தனியே அடையாளம் கண்டு பார்த்ததில்லை. எங்கள் வீட்டருகே மாலைநடை சென்ற போது மரக்கிளையில் அமர்ந்திருந்த மூன்று எண்ணம் கரிச்சான் குஞ்சுகளை அவர்தான் அடையாளம் காட்டினார். அன்பரசி சொன்னார் “பொதுவாக ஏப்ரல் மே மாதங்கள் நிறைய உள்ளூர் பறவைகள் குஞ்சு பொறிக்கும் காலம். இந்தப் பருவத்தில் பறவை பார்த்தலின் போது அதிக குஞ்சுகளை எதிர்பார்க்கலாம்,” அதன் பிறகு அவர் சொன்னபடியே நெல்லியம்பதி பயணத்தில் காட்டுக் கோழி குஞ்சுகளையும் (Grey Jungle fowl) மலை இருவாச்சி (Great hornbill) குஞ்சுகளையும் பார்த்தோம். நான் சென்ற வாரம் வீட்டருகே தூக்கனாங்குருவி (Baya Weaver) குஞ்சுகளைப் பார்த்தேன்.


மடம் கோயிலுக்கு செல்லும் பாதையின் இறுதியில் குளத்தங்கரையை ஒட்டி ஒரு முச்சந்தி வரும். அங்கு சென்று காரை நிறுத்தும் போதே மறுபக்கத்தின் கரையில் தத்தி தத்தி செல்லும் வெண்மார்பின் அசைவுகளை பார்த்துவிட்டோம். கரையின் முடிவில் இந்த வெண்மார்பு இன்னொரு வெண்மார்புடன் கூடிக் குலாவியது, கானாங்கோழிகள் (White breasted Waterhen). தகைவிலான்கள் (Swallow) அவ்வப்போது தாழப்பறந்து வந்து குளக்கரையின் சேற்றுப் பகுதியில் அமர்ந்து சென்றன. அவை கூடு கட்டும் பொருட்டு சேற்று மண்ணை சேகரிப்பதாக அன்பு கூறியிருந்தார்.


குளத்திற்கு அப்பால் தரிசாக விடப்பட்டிருந்த வயல்வெளியில் வேப்பமரத்தைச் சுற்றி சில பெண்மயில்கள் அலைந்தன. அறுவடை முடிந்த பின்பும் தன் விசுவாசத்தை நிலைநாட்டும் பொருட்டு அந்நிலத்தின் காவல்நாய் மயிற்கூட்டத்திற்குள் புகுந்து புழுதியைக் கிளப்பியது. இந்த சலசலப்பினால் அப்பகுதியில் இருந்த ஆட்காட்டி இணை (Red-Wattled Lapwing) ஒன்று தூண்டுப்பட்டுவிட்டது. மாறி மாறி ஒரே சத்தம். நாயைக் குறி வைத்து காற்றில் தாழ்ந்து வருவதும் மீண்டும் எதிர் பக்கம் காற்றில் உயர்ந்து, திசைமாற்றி மீண்டும் நாயை நோக்கி வருவதும் என பெண்டுலத்தின் ஊசல் போல வான்வெளி தாக்குதல் நடத்தின. “ஐயைய்யோ, என் வீட்டுக்கு வந்துட்டானே! என் முட்டைய பாத்துட்டானே!” என்று இரு ஆட்காட்டிகளும் ஒரே புலம்பல். மருது அண்ணனிடம் சொன்னேன், “அண்ணா, ஆங்கிலத்தில் இதுக்கு அருமையான பேர் உண்டு. இது போடுற சத்தம் தான் அந்தப் பேரு. Did you do it!”. மருது அண்ணனுக்கு அந்தப் பெயர் பிடித்துப் போயிற்று. வாய் நிறைய Did you do it!, Did you do it!, என்று சொல்லிப் பார்த்தார். அவரின் கணீர் குரல் ஆட்காட்டிகளுக்கே கேட்டிருக்க வேண்டும். ‘நான் எதுவும் செய்யலீங்க எசமான்’ என்கிற தொனியில் அவை சற்று நேரத்தில் ஓய்ந்தன.



குளத்திற்கு எதிரே சாலையின் இந்தப்பக்கம் அமைந்திருப்பது மனதிற்கு மிகப்படித்த ஆலமரம். மரம் என்று சொல்வதை விட விழுதுகள் காலூன்றி நிற்பதன் தொகை என்றே சொல்ல வேண்டும். சடைவிரித்து முச்சந்தியில் வீற்றிருக்கும் மூதாதையைப் போல அவ்வாலமரம் அப்பகுதி முழுக்க நிறைந்திருக்கும். ஆலமரத்தின் இலைச்செறிவுக்குள் மாங்குயிலையும் (Golden Oriole) தெற்கத்தி மின்சிட்டுகளையும் (Orange Minivet) கண்டுகொண்டோம். 


நடையை தொடர்ந்த போது பறவையியலாளர்களால் OMR (Oriental Magpie Robin) என்று அன்போடு அழைக்கப்படும் குண்டு கரிச்சான் முதலில் கண்ணில் பட்டது. அதன் பிறகு சற்று தூரத்திலேயே ராபின் இனத்தின் இன்னொரு பறவையான கருஞ்சிட்டைப் (Indian Robin) சாலை நடுவில் பார்த்தோம். ராபின் இனப் பறவைகளுக்கு தங்கள் அழகை பறைசாற்றிக் கொள்ளும் விசேஷ குணமுண்டு. நன்றாக பார்வையில் படும் இடமாக பார்த்து அமர்ந்துகொண்டு வாலைத் தூக்கி ஆட்டியாட்டி நாலாபக்கமும் காட்டும். ஆண் கருஞ்சிட்டிற்கு தன் மின்னும் கார்வண்ண மேனியின் அழகை அடித்துக் கொள்ள ஆளில்லை என்ற எண்ணம். அதற்கு டிக்கிப் பகுதியில் சிகப்பு நிறத்தில் குஞ்சம் போன்ற அமைப்பு உண்டு. அதையும் எப்படியாவது நம் பார்வையில் படும்படி தூக்கிக் காட்டிவிடும். அடுத்ததாக கல்லுக்குருவியை (Pied Bushchat) பார்த்ததும் சுந்தர பாண்டியன் ஓர் ஐயத்தை எழுப்பினார். கல்லுக்குருவியையும் கருஞ்சிட்டையும் அடையாளம் காண்பதில் அடிக்கடி குழப்பம் நேர்வதாக குறிப்பிட்டார். எனக்கும் அக்குழப்பம் முதலில் இருந்தது. “வாலைத் தொங்கப்போட்டபடி அடியில் வெண்ணிறம் தெரிந்தால் அது கல்லுக்குருவி, வாலை நன்றாகத் தூக்கி ஆட்டியாட்டி காண்பித்தால் அது கருஞ்சிட்டு. அதேபோல சிவப்பு குஞ்சமும் கருஞ்சிட்டிடம் மட்டுமே உண்டு,” என்றேன் எனக்குத் தெரிந்த வகையில்.



நான் அதிகம் எதிர்பார்த்து வந்திருந்த சாம்பல் இருவாச்சி, துடுப்புவால் கரிச்சான் போன்ற பறவைகளை யோகா அண்ணனுக்கு காட்ட இயலவில்லை. கிட்டத்தட்ட சாலையின் முடிவுக்கு வந்திருந்தால் திரும்பும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தோம். அப்போது சற்று தூரத்தில் சாலையோரம் இருந்த மொட்டை மரத்தில் ஒரு மரங்கொத்தி (Black-rumped Flameback) மேல்நோக்கி ஏறுவதை அனைவருமே ஒரே கணத்தில் பார்த்துவிட்டோம். தெளிந்த வானின் பின்னணியில் மொட்டை மரத்தில் இருந்ததால் அதன் நிழலுரு தெளிவாகத் தெரிந்தது. இன்னும் அருகில் காணும் பொருட்டு சத்தம் போடாமல் நெருங்கினோம். அருகில் செல்ல செல்ல அது திசையை மாற்றி மரத்தின் பின்பக்கம் சென்று போக்குக் காட்டியது. நாங்கள் மரத்தின் மறுபக்கம் சென்று சேர்வதற்கும் மரங்கொத்தி மரக்கிளையின் மீது ஏறி நின்று எங்களுக்கு காட்சியளிப்பதற்கும் சரியாக இருந்தது. என்ன நினைத்ததோ தெரியவில்லை, நாங்கள் அருகிருப்பதை உணர்ந்தும் எங்களை கண்டுகொள்ளாமல் அதுபாட்டுக்கு மொட்டை மரக்கிளையில் ஒவ்வொரு இடமாக கொத்திக் கொண்டிருந்தது. எங்கள் நால்வருக்குமே மரங்கொத்தியை அத்தனை அருகிலென அத்தனை நேரம் பார்ப்பது அதுவே முதன்முறை.


மரங்கொத்தி நல்ல பெயர்தான், ஆங்கிலத்திலோ இன்னும் அழகான பெயர். தழல் முதுகினன் (Flameback). விடியலின் பொன்னொளி அதன் தழல் முதுகில் பிரதிபலிக்கும் காட்சியில் திளைத்திருந்தோம். அதன் சிவப்புக் கொண்டை உடலின் அசைவுகளுக்கேற்ப சுருங்கி விரிவதை கண்டோம். சற்று நேரம் கிளையின் உச்சியிலமர்ந்து வான்நோக்கி மோனத்தில் ஆழ்ந்திருந்தது. முதுகில் அனலை ஏந்தியவன் அமைந்திருப்பது எங்கனம்? மரத்தின் அருகே இருந்த புதர்வெளியில் சிறிய பறவைகளின் கீச்சொலி கேட்டு திரும்பிப் பார்த்தோம். மருது அண்ணன் பரவசத்துடன் “வெள்ளைக் கண்கள்!” என்றார். என் மனம் படபடத்தது. அதே தான்! சிட்டுக் குருவியின் அளவிலோ அல்லது அதைவிட சிறிதாகவோ இருக்கும் வெள்ளைக் கண்ணிகள் (Indian White-eye). அழகிய மஞ்சள் நிற பட்சிகள். உச்சியில் வீற்றிருந்த தழல் முதுகிலிருந்து மஞ்சள் நிறம் கீழே சிதறி பரவிட்டதோ?. நாங்கள் கிளம்பும் வரை மரங்கொத்தி அங்கேயே தான் இருந்தது. இந்தக் காலைக்கு இத்தனை இனிமை போதும் என்று நிறைவுற்றவர்களாய் திரும்பினோம்.



மடத்திற்கு சென்றால் விரைவாக தரிசனத்தை முடித்துவிட்டு நித்யவனத்திற்கு திரும்பிவிடலாம் என்ற திட்டத்தில்தான் வந்திருந்தோம். மடத்தில் காரை நிறுத்தும்போதே தலைமை சுவாமியான அசோக ராஜேந்திர சுவாமிகள் தன் புன்னகை மாறா முகத்துடன் எங்களை வரவேற்றார். சுவாமிகள் இனிமையானவர். மடத்தின் சுவாமிகள் என்றால் ஆசாரவாதியாக இருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு இவரை முதன்முறை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. அனைவரையும் ஏற்றுக் கொள்ளக்கூடியவராகவும் எதையும் திறந்த மனத்துடன் அனுகுபவராகவும் தெரிந்தார். நித்யவனத்தின் முதல் நிகழ்வை ஊட்டி குருகுலத்தின் சுவாமி வியாசப் பிரசாத்தும் இவரும் சேர்ந்துதான் தொடங்கி வைத்தனர்.


காலை பூசனை நிறைவடைந்ததும் தரிசனத்திற்காக நாங்கள் சன்னதிக்குள் அழைக்கப்பட்டோம். வணங்கி முடித்து மலர் பிரசாதங்களை பெற்றுக் கொள்ளும் போது சுவாமிகள் எங்களைப் பார்த்து “இன்னைக்கு ரொம்ப விசேஷமான நாளுங்க. நேத்து மதியம் ரெண்டு மணியிலிருந்து இன்னைக்கு மதியம் ரெண்டு மணி வரை ப்ளூ மூனுங்க. அதாவது ஒரே மே மாசத்துல ரெண்டு பௌர்ணமி. அதுவும் இப்ப நிலா தூரத்துல இருக்குறதால சின்னதா தெரியுமுங்க. இனி இருபத்தி ஏழு வருஷம் கழிச்சுதான் இப்டி நடக்கும்னு சொல்றாங்க. இதுக்காக சிறப்பு பூஜை, அன்னதானம் எல்லாம் ஏற்பாடு பன்னிருக்கு. நீங்க அல்லாரும் கண்டிப்பா இருந்து சாப்டுதான் போகணு,” என்றார். கிருஷ்ணன் சார் சனிக்கிழமையே மைக்ரோ ப்ளூ மூன் என்கிற இந்த அரிய நிகழ்வைப் பற்றி சொல்லியிருந்தார். ஆனால் மடத்தின் சுவாமிகள் இத்தனை தெளிவுடன் இதை அறிந்திருப்பார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. மீண்டும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார், வகுப்பு குறித்த நேரத்தில் தொடங்கிவிடும் என்பதால் எங்களுக்கு அதிக நேரமில்லை என்றோம். தேநீராவது அருந்திவிட்டுதான் கிளம்ப வேண்டும் என்று எங்களுக்காக ஐந்து நிமிடத்தில் தயாரித்து அளித்தனர். அருந்திவிட்டு விடைபெற்றோம்.


நாங்கள் திரும்பும் வழியில் பிரபுவும் பவித்ராவும் முதல் பிறந்தநாளை கொண்டாடும் தங்கள் குழந்தை சிவாத்மிகாவுடன் எதிரே பொலிரோ வாகனத்தில் வந்தனர். சிவா ஆர்வத்துடன் ஜன்னல் வழியாக தாவப் பார்த்தாள். கார் ஜன்னலின் வழி குழந்தைக் கைகளிலிருந்தே இனிப்புகளை பெற்றுக் கொண்டோம். சிவாத்மிகாவுக்கு சிவனிடம் ஆசி வாங்கும் பொருட்டு அவர்கள் மடம் கோயிலுக்கு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.


சிவாத்மிகாவை தலையில் சூடிய பிரபு


சிவாத்மிகா நல்லாசிகள் பெற்ற குழந்தை, தன் முதல் பிறந்தநாளை நித்யவனத்தில் கொண்டாடியிருக்கிறது. இந்த மூன்று நாட்களும்  வகுப்பின் இடைவேளைகளில் அவளின் இருப்பு இனிமை சேர்த்திருந்தது. அவளை அழைக்கும் சாக்கில் அனைவரும் சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர். இத்தனை அழைப்புகளைக் கேட்டு அந்தக் குளிர்நிலவனே இறங்கி வந்திருக்க வேண்டும்.


இந்த மே மாதத்தில் வெள்ளிமலையில் நடந்த இரண்டு வகுப்புகளில் பங்கெடுத்திருக்கிறேன். முதலாவது ஆசிரியர்கள் கீதா, லலிதா நடத்திய ஓவியப் பயிற்சி வகுப்பு. இரண்டாவது ஆசிரியர் ஜெ நடத்திய சிறுகதை, நாவல் பயிற்சி வகுப்பு. இரண்டு வகுப்புகளுமே உள்ளடக்க ரீதியிலும் அக அனுபவம் சார்ந்தும் எனக்கு முக்கியமானவை. ஒரே மாதத்தில் இரு முழுநிலவுகள் என்பது அரிய நிகழ்வுதான். அதேசமயம் மனது வைத்தால் அரியனவற்றை நமக்கு நாமே நிகழ்த்திக் கொள்ள முடியும் என்றும் படுகிறது. நிலவை ஞானத்தின் பித்தின் குறியீடாக வகுத்துள்ளது மானுடம். ஆம், இம்மாதம் இருமுறை முழுநிலவை தரிசித்திருக்கிறேன். விண்ணை நோக்கிய தொடர் விளிகள் எதுவும் வீண் போவதில்லை.



தொடர்புடையவை:

நிலவின் தொலைவு - இடாலோ கால்வினோ



Comments

  1. அருமையான பதிவு, நேரில் கண்ட அனுபவத்தை கொடுத்தது. ஆரம்ப நிலை Birders மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திகேயன்:)

      Delete
  2. இத்தனை இனங்களாய் விரியும் பறவைகளை படித்து கொண்டிருந்த பொழுது, ஏதோ ஒரு அசௌகரியம் கரு கொண்டு விட்டது உள்ளத்தில்.

    பரந்த வெளியில் சஞ்சரிக்கும் பறவை வலைக்குள் சிக்கியது போலானேன்.
    தொடர்ந்து ரசித்து வாசிக்க முடியாததானது.

    எரிச்சலலித்த இவ்விடையூறிலிருந்து மீள, அக அகழ்வராய்ச்சியே ஆக சிறந்த அறுவை சிகிச்சை.
    இந்த OCD தன்மை ஆசிர்வாதமா சாபமா என்று இதுவரை புரியவில்லை.

    சிந்தித்த பொழுதில் மேலெழுதிய பத்தி இல்லாது, நேரே கூற்றாய்வு செய்ய ஆரம்பித்திருந்தேன்.

    சூரியோதயம் போலே மெல்ல துலங்க ஆரம்பித்து, வெளுத்து வாங்கி விட்டது கண்டறிந்தது.

    குடும்பம் பொருள் ருசி கேளிக்கை சுற்றம் நட்பு என்று நீளும் பட்டியலில்,
    வெறும் மனிதர்கள் மட்டும் சூழ்ந்த மனதால்,
    "நான்" "என்" என்ற இரண்டே சொற்களில் உழன்று,
    குறுகி விட்டிருக்கிறேன் என்றுணர்ந்தேன்.

    முடிவிலி வெளியில் சிறகடிக்கும் சிறு பறவைகளின் பெரு வாழ்வு உங்கள் எழுத்தில் வாசிக்கப்பட்ட பொழுது,
    ஆழத்திலிருந்த ஆற்றாமை கரை தட்டிவிட்டது.
    ஆழ் கடல் அமைதியுடன் முழுதாய் வாசித்து முடித்து எழுதியும் விட்டேன். பிரசவித்த மனதிலிருந்து நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கரண்ட் மரம்

  அப்படியொரு மரத்தின் பெயரை இத்தனை நாளும் கவனிக்காமல் இருந்து விட்டோமே என எனக்கே வெட்கமாக இருந்தது. இத்தனைக்கும் வீட்டை விட்டு இறங்கினாலே முதலில் தென்படுவது அந்த மரமாகத்தான் இருக்கும். தள்ளுவண்டிக்கார அக்கா சொல்லும் வரையில் அதை ஒரு ‘மரமாக’ பார்க்க வேண்டும் என்ற பார்வைதான் இதுவரையில் தோன்றாமல் போய்விட்டது. மதியம் பனிரெண்டு மணி வெயிலில் இறங்கி சென்று இங்கு ஈரோடு பகுதியில் வார வாரம் புதிதாக திறக்கப்படும் பேக்கரிகள் ஏதேனும் ஒன்றில் அரைச்சக்கரை இட்ட சுமாரான கருப்பு டீயை குடித்துவிட்டு வருவது என்ன ரசனை என்று எனக்கேத் தெரியவில்லை. ஆனால் அதை தினமும் செய்து வருகிறேன். உண்மையில் டீ முடித்தக் கையுடன் வீட்டுக்கு வரும் வழியில் உள்ள தள்ளுவண்டிக்கடையை பார்த்ததும் தான் மனம் எதை எதிர்பார்த்தது என எனக்கேத் தெரிய வரும். கோடையின் துவக்கத்தில் பலாச்சுளையில் ஆரம்பமான வாடிக்கை. கால் கிலோ ஐம்பதில் தொடங்கி அரை கிலோவை ஐம்பதுக்கு வாங்கும் அளவுக்கு வண்டிக்கார அக்காவின் தொடர் வாடிக்கையாளனாக மாறியிருந்தேன். பலாப்பருவம் முடிவதற்கு முன்பே இடையிடையே நுங்கு, அதைத் தொடர்ந்து மாம்பழம், தற்போது கொய்யா நவா என வியாபாரம்...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

நனவிலியின் காலடித்தடம் - மணிபல்லவம்

  வாரவாரம் ஞாயிறு மாலை நடைபெறும் சிறுகதைக்கூடல் இந்த ஞாயிறுடன் தன் 49 ஆவது கூடுகையை நிறைவு செய்துள்ளது. பாண்டிச்சேரியை சேர்ந்த நாகராஜன் சார் இக்கூடலை தொடர்ந்து உற்சாகத்துடன் ஒருங்கிணைத்த நடத்தி வருகிறார். தொடர்ந்து எழுத்தாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து இதில் பங்கெடுக்க செய்கிறார். நான் இதுவரை சில வாரங்கள் கலந்து கொண்டிருக்கிறேன். என் பார்வையில் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் இயல்பாகவே கதையை முழுமையாக வாசித்தவர்களாகவும் பெரும்பாலும் கதையின் வாசிப்பு சாத்தியத்தை நோக்கி மட்டும் பேசுபவர்களாகவும் உள்ளனர். எனவே கூட்டு வாசிப்பின் நிறைவான அனுபவங்கள் அமைகின்றன. சிறுகதைக்கூடல் இந்த ஆகஸ்ட் மாதத்தை தொன்மக் கதைகளின் வாரமாகக் கொண்டாடியது. அதில் இந்த வாரத்தின் கதையாக மணிபல்லவம் விவாதிக்கப்பட்டது. கூடலுக்கு அழைக்கப்பட்டிருந்த நான் என் வாசிப்பை பகிர்ந்து கொண்டேன். அதன் எழுத்து வடிவை இங்கு பகிர்கிறேன் * மணிபல்லவம் சிறுகதை மணிபல்லவம் ஒரு தீவிரமான பயணத்தின் கதையும் கூட என்பதால் என் பயண நினைவு ஒன்றிலிருந்து இந்த உரையாடலை தொடங்குகிறேன். சென்ற ஆண்டு ஆந்திரா பயணத்தின் போது இந்தியாவின் இரண்டாவத...

மான் செவி கள்ளி

இரண்டு வாரங்களாக குறிப்பிடத்தக்க பயணங்கள் எதுவும் அமையாததால் மனதில் ஒருவித தவிப்பு. எனவே  இன்று மாலை குறைந்தபட்சம் ஒரு புதிய இடத்தையாவது கண்டடைவோம் என கூகுள் ஆண்டவரிடம் தேடினேன். வீட்டிலிருந்து ஒருமணி நேர தொலைவில் ஆதியூர் அருகே மிகப்பெரிய பரப்பளவில் குளம் ஒன்று இருந்தது. நீரும் பசுமையும் இருப்பதுபோல் ஆண்டவர் படம் காட்டினார். வண்டியை விட்டோம். சென்று பார்த்தால் குளத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் முள் மரங்களாலும் தாவரங்களாலும் ஆக்ரமித்து இருந்தது. பாதி அளவு உள்ளே சென்று பார்த்தோம். பார்த்தவரை நீர் இல்லை. பெரிய குளம் என்பதால் மறுபக்கத்தில் இருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டோம். செம்போத்தில் துவங்கி பஞ்சுருட்டான், வால்காக்கை என வழக்கமான பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வானில் உயரத்தில் எந்த அலட்டலுமில்லாமல் வேட்டையாடி பறைவையை (raptor) போல பறந்த பறவையை கவனித்தேன். பாம்புத்தாரா (Darter). அதன் நீள் கழுத்து தெளிவாகவேக் காட்டியது. அதிக உயரத்தில் பறந்து இன்று தான் பார்க்கிறேன். எப்போதும் நீருக்குள்ளோ நீரருகிலோ பார்த்தப் பறவை. அருகில் நீர்நிலை தேடி பறந்திருக்க வேண்டும். திரும்பும் வழியில...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

கண்டங்கருவளை - எஞ்சும் நஞ்சு

இன்று அந்த துளிக் கருமைக்கான நாள் போலும். தினசரி காலைநடையில் நான் கண்களைப் பார்த்து முகமன் உரைப்பது அந்தப் பெரியவரிடம் மட்டும்தான். முகமன் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு தலையசைப்பு, பதிலுக்கு அவரும் ஒரு தலையசைப்பு. அவர் தன் வயலோரமாக சாலையை ஒட்டி அமைந்திருக்கும் மாமரத்தின் அடியில் சிமெண்ட் கல்வெர்ட்டில் அமர்ததிருப்பார். ஊன்றுகோல் எப்போதும் துணையிருக்கும். எப்போதாவது “மாங்கா வேணுமா, சொரக்கா வேணுமா?” எனக் கேட்பார். வீட்ல செஞ்சிருப்பாங்களே ஐயா என்று கடந்து விடுவேன். இன்றைய நடையின் போது தூரத்திலிருந்தே பார்த்துவிட்டேன், அவர் கோழிக்கொண்டை வயலுக்கு நடுவே தன் ஊன்றுகோலின் கவட்டை பகுதியில் ஒரு காட்சிப்பொருளைப் போல அதை தூக்கிக் கொண்டு வந்தார், ஓர் அரவு. அவர் தூக்கி வந்த நிதானத்தையும் முகத்திலிருந்த பெருமிதத்தையும் பார்க்கும் போது பாம்பு பெரும்பாலும் இறந்துவிட்டது என்பது தெரிந்தது. நான் ஆர்வத்தில் முதலில் வேகமாக சென்றாலும் ஒருவேளை உயிர் எஞ்சியிருக்குமோ என்ற ஐயம் எழுந்தவுடன் கால்கள் தயங்கின. அந்த நேரத்தில் சாலையில் நான் மட்டுமே இருந்ததால் அவர் நேராக தூக்கிக் கொண்டு என் கிட்டத்திலேயே வந்துவிட்டார...