Skip to main content

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன்.

ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான்.



இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம்.

தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாவலின் நாடக வடிவம் என அறிவிப்பில் பொதுவாக போட்டிருந்தாலும்  நாவலில் இடம்பெறும் குறிப்பிட்ட மூன்று நாடகீய தருணங்களை மட்டுமே இணைத்து நாடகத்தை அமைத்திருந்தார்கள். காரு மாமா சவரம் செய்யும் பணியில் இருக்கையில் தன் மனைவி ராசம்மா செட்டியுடன் ஓடிப்போய்விட்டாள் என்ற செய்தியை கேள்விப்படுவது முதல் தருணம். காலடித்தடங்களைக் கொண்டு மனைவியுடன் சேர்ந்து குழந்தைகளும் போய்விட்டார்கள் என்பதையறிந்து ஒரே நாளில் தன் உலகம் நிர்மூலமாகிவிட்டதை உணரும் கணம்.

அடுத்தக் காட்சி பனிரெண்டு ஆண்டுகள் கழித்து காரு மாமா  இறந்த பின்பு அவரின் சாவுக்கு வந்துசேரும் மனைவி ராசம்மாவும் வயதுக்கு வந்த பெண் ஈஸ்வரியும். நீண்ட தன்விளக்கமும், ஒப்பாரியும், தற்போதைய கையறுநிலையும் அரங்கேறும் இக்காட்சியில் ராசம்மாவாக தோன்றியவர் சிறப்பாக நடித்திருந்தார்.



நாவலின் இறுதியில் நடைபெறும் பகடை விளையாட்டு, நாவலை வாசித்தவர்கள் யாரும் மறக்க முடியாத பகுதி. ஒரு காதலும், இருவரின் வாழ்வும் மொத்த குடும்பத்தின் எதிர்காலமும் ஓர் எளிய பகடையாட்டத்தில் விளையாட்டாய் முடிவாகப்போவதாய் வரும். ஆனால் யோசித்துப் பார்த்தால் அத்தருணம் விளையாட்டானது அல்ல. எந்த மனித வாழ்விலுமே வாழ்வை தீர்மாணிக்கும் முக்கிய முடிவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நம் கரங்களாலோ அல்லது ஏதோவொன்றின் கரங்களாலோதான் எடுக்கப்படுகிறது. அந்த பகடையாட்டக் காட்சியை சுமார் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாக எடுத்திருந்தார்கள். எனவே அக்காட்சிக்கான போதிய 'அழுத்தம்' உருவாகமல் போய்விட்டதாக உணர்ந்தேன். அருகிலிருந்த விக்ரமும் தான் இதுவரை நாவல் வாசிக்காததால் இறுதிக்காட்சியில் எந்த எழுச்சியும் உருவாகவில்லை என்றார்.

நாடகம் முடிந்ததும் அதைக் குறித்த உரையாடல் பகுதி என்று அமைத்திருந்தார்கள். எழுத்தாளர் தேவிபாரதியும் அரங்குக்கு வந்திருந்ததால் அவருடன் வாசகர்கள் தங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளும் பகுதியாக அது மாறிப் போனது. தேவிபாரதி சார் சென்ற ஆண்டு பார்த்ததை விடவும் தற்போது உற்சாகமாகவும் உடல்நிலை முன்னேறி நன்கு பேசக் கூடியவராகவும் இருந்தார்.

நாடகம் குறித்த தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நாவலில் வரும் வாழ்க்கை எந்தளவு தன் சொந்த வாழ்வுடன் தொடர்புடையது என்று சொனார். காரு மாமாவையும் அந்த நிலத்தையும் அவர் தினமும் பார்த்து வளர்ந்திருக்கிறார். ஒருவகையில் அவர் நெருங்கிய சொந்தம் என்றார். ஆனால் நாவலில் புனைவம்சம் உள்ளது. புனைவு இல்லாமல் எதுவும் உண்மையோ முழுமையோ ஆவதில்லை. 'ஆதியாகமம்' நாவலையும் முடிக்க வேண்டிய இன்னும் இரு நாவல்களையும் முடித்தே தீருவேன் என்றார். 

அதன்பிறகு அவர் தான் பேசுவதை விடவும் பார்வையாளர்களிடம் உரையாடவே விரும்பினார். வாசகர்கள், நெருங்கிய நண்பர்கள் என மேடைக்கு பேச வந்த அனைவரின் கைகளையும் பற்றிக் கொண்டார். அனைவருமே அவரை நீண்டநாள் கழித்து நல்ல நிலையில் பார்ப்பதால் மொத்த அரங்குமே ஒருவித நெகிழ்ச்சியுடன் இருந்தது.

அவரின் நீண்டநாள் நண்பர் ஒருவர், அவருடன் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் தேவிபாரதியுடன் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். சினிமா பிரபலங்களுடன் நட்பில் இருப்பவர் எப்படி தன்னுடனும் எளிமையாக பழகுவார் என வியந்து வியந்து சொல்லிக் கொண்டிருந்தார். நண்பர் நல்ல நோக்கில் சொன்னாலும் எனக்கு எரிச்சலாக இருந்தது. நிழலின் தனிமையும், பிறகொரு இரவும், நட்ராஜ் மகராஜ்ஜும் எழுதியவரிடம்  நமக்கு வியப்பதற்கு வேறெதுவுமே இல்லையா? அவர் சினிமா பிரபலங்களிடம் விடியவிடிய இலக்கியம் பேசுவார் என்று எழுத்தாளர்களை குறித்து 'பெருமையாக' சொல்வதை இனிமேலும் தமிழ் கலைச்சமூகம் தொடரக்கூடாது. யோசித்துப் பாருங்கள் சிவக்குமாரோ, நாசரோ இருக்கும் மேடையில் அவர்களின் நண்பர்கள் யாராவது தேவிபாரதி சாருக்கே நாசரை அடையாளம் தெரியும் என்று பெருமையாக சொல்வார்களா என்ன?



நான் சென்று நண்பரின் இந்தக் கருத்துக்கான என் மறுப்பை அவையில் தெரிவித்தேன். மேலும் நாடகத்தில் காரு மாமாவும் ராசம்மாவாக நடித்தவரும் நன்றாக நடித்தார்கள் என்றும் இறுதிக் காட்சியின் அழுத்தம் மட்டும் போதவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்தேன்.

நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு அமைப்பாளர்கள் குறியாய் இருந்தனர். மாதாமாதம் மகரந்தம் வாசிப்பு இயக்கம் நடத்தும் இலக்கிய கூடுகைகளிலும் இந்த நேர ஒழுங்கு கடைபிடிக்கப்படுவதாய் சொன்னார்கள். பிரதி மாதம் மூன்றாம் சனி மாலை 5 முதல் 8 ஒரு புத்தகம் குறித்து இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாடகத்தை முன்னெடுத்ததோடு தொடர்ந்து வாசிப்பையும் முன்னெடுக்கும் ஈரோடு மகரந்தம் வாசிப்பு இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

***

தேவிபாரதி தமிழ் விக்கி

ந. முத்துசாமி தமிழ் விக்கி



மேலும் படங்கள்:





Comments

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...