Skip to main content

கண்டங்கருவளை - எஞ்சும் நஞ்சு

இன்று அந்த துளிக் கருமைக்கான நாள் போலும்.


தினசரி காலைநடையில் நான் கண்களைப் பார்த்து முகமன் உரைப்பது அந்தப் பெரியவரிடம் மட்டும்தான். முகமன் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு தலையசைப்பு, பதிலுக்கு அவரும் ஒரு தலையசைப்பு. அவர் தன் வயலோரமாக சாலையை ஒட்டி அமைந்திருக்கும் மாமரத்தின் அடியில் சிமெண்ட் கல்வெர்ட்டில் அமர்ததிருப்பார். ஊன்றுகோல் எப்போதும் துணையிருக்கும். எப்போதாவது “மாங்கா வேணுமா, சொரக்கா வேணுமா?” எனக் கேட்பார். வீட்ல செஞ்சிருப்பாங்களே ஐயா என்று கடந்து விடுவேன்.


இன்றைய நடையின் போது தூரத்திலிருந்தே பார்த்துவிட்டேன், அவர் கோழிக்கொண்டை வயலுக்கு நடுவே தன் ஊன்றுகோலின் கவட்டை பகுதியில் ஒரு காட்சிப்பொருளைப் போல அதை தூக்கிக் கொண்டு வந்தார், ஓர் அரவு. அவர் தூக்கி வந்த நிதானத்தையும் முகத்திலிருந்த பெருமிதத்தையும் பார்க்கும் போது பாம்பு பெரும்பாலும் இறந்துவிட்டது என்பது தெரிந்தது. நான் ஆர்வத்தில் முதலில் வேகமாக சென்றாலும் ஒருவேளை உயிர் எஞ்சியிருக்குமோ என்ற ஐயம் எழுந்தவுடன் கால்கள் தயங்கின.



அந்த நேரத்தில் சாலையில் நான் மட்டுமே இருந்ததால் அவர் நேராக தூக்கிக் கொண்டு என் கிட்டத்திலேயே வந்துவிட்டார். நான் சற்று பின்னடைந்ததும் அவர், “அட இளசா இருந்துட்டு இதுக்குப்போயி பயப்புடுறியே.. மயிலுக் கொத்தி ஏற்கனவே செத்துப்போச்சு” என்றார். ஆம் கொடியில் தொங்கப்போட்ட இடுப்புவாரைப் போல எந்த அசைவுமின்றி கிடந்தது. கருப்பு உடலில் வெள்ளை வரிகளைக் கண்டதும் கட்டு வரியனோ (விரியன் அல்ல, வரியன் என்பதே சரியான பெயர்) என யோசித்தேன். அவர் “கண்டங்கருவளை!” என்றார் கம்பீரமாக. கட்டு வரியனின் உள்ளூர் பெயர். “என்னென்னமோ வைத்தியம் இருக்குன்னு சொல்வாங்க.. ஆனா எதுவுமே வேலைக்கு ஆவாது, கடிச்ச ஆறு மணி நேரத்துல ஆள் காலி. பொழைக்க வழியில்ல” என்றார் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் அழகிய புன்னகையுடன்.


அதற்குள் அவரது எருமைகள் குரலெழுப்ப வரியனை சாலையிலேயே கிடத்திவிட்டு சென்றார்.


தீட்டப்பட்ட வாள் குருதியை அடைந்தே தீரும் என்பார்கள். எனில் தேக்கிய நஞ்சு என்னவாகும்? வேறொரு உலகில் வேறொரு யதார்த்தத்தில் அது உமிழப்படுமா? தான் இறந்த திசையை வெறித்து நோக்கியபடி சாலையில் கிடந்தது அரவம். அது கிடந்த விதத்தைப் பார்க்கும் போது அதற்கு உயிர் பிரிந்ததா அல்லது வந்தாதா தெரியவில்லை.


 


Comments

  1. தீட்டப்பட்ட வாள் குருதியை அடைந்தே தீரும் என்பார்கள். எனில் தேக்கிய நஞ்சு என்னவாகும்? வேறொரு உலகில் வேறொரு யதார்த்தத்தில் அது உமிழப்படுமா?

    என்றும் நினைவில் நிற்கும் வரிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?  ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,  “முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு. இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் ...