Skip to main content

One more Bottle!

எங்களை விட உயரம் குறைவாக இருந்தாலோ என்னவோ அவள் கண்களுக்குத்தான் பறவைகள் அதிகம் தட்டுப்பட்டன. அகல்யா. உயரத்தின் காரணத்தால் பார்வைகோணம் மாறுபடுவது மட்டுமல்ல, பொதுவாகவே இப்பயணத்தில் பல பறவைகளை முதலில் அடையாளம் காட்டியது அவளே. அதுவும் குறிப்பாக பார்வைக்கு அதிகம் சிக்காத குயிலனங்களை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் (Cuckoo Spotter!).

மொத்தம் மூன்று ஜோடிகள் விஜயபாரதி-கெளசல்யா, கோபி-சரண்யா, திரு-காயத்ரி ; மூன்று பேச்சிலர்கள் (பயணத்தின் போது மட்டும்) ஈஸ்வரமூர்த்தி, ஞானவேல், நான்; நிறைய குழந்தைகள் ஆதித்யா, அகல்யா, அன்பரசி, மகிழ், மஞ்சரி என அந்த சிறுமலை பயணத்திற்கான குழு அமைந்திருந்தது. நாங்கள் முதல் நாள் சனி காலை கொடைக்கானல் ஏறும் பாதையில் ஒரு திருப்பமெடுத்து அங்கு பெருமாள்மலை என்ற பகுதியை ஒட்டி நிலைகொண்டோம். பகல் முழுக்க அங்கு பறவை பார்த்து முடித்துவிட்டு அங்கிருந்து சிறுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மொத்தம் மூன்று கார்களில் எங்கள் கார் முன்னரே அடிவாரத்தை அடைந்திருந்தது. இருபுறமும் மாந்தோப்புகள் தென்பட தொடங்கியிருந்தன. இவ்வருடம் மழை மற்றும் காற்றின் ஒத்துழைப்பில் பூக்கள் அதிகம் உதிராத்தால் நல்ல விளைச்சல் என்றார்கள். ஆனால் தோப்பின் வேலையாட்கள் யாரும் கண்ணுக்குப் படவில்லை. திருட்டு மாங்காய் அடித்தாலென்ன என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது. காரை மெதுவாக விட்டிருந்தேன். அப்போதுதான் அக்குயிலோசையை தெளிவாகக் கேட்டோம். ஒற்றை கூவல் எழுப்பும் வழக்கமான ஆசியக் குயில் அல்ல. இது நான்கு சொற்களை ஒலிக்கும் இந்தியக்குயிலின் (Indian Cuckoo) பாடலோசை. ஓசை நிற்கவில்லை. நாங்கள் காரை நிறுத்தினோம். பறவை பார்த்தலின் இனிய இன்பங்களில் ஒன்று இது. அன்றைய கடைசி பறவையும் பார்த்தாயிற்று என மனமில்லாமல் திரும்பும் பொழுதுகளில் ஏதேனும் ஒரு பறவை அழைப்பொலி எழுப்பும். வடிந்து வரும் பயணத்தின் உற்சாகத்தை மீண்டும் உயிர்ப்பித்துவிடும்.


ஓசை வரும் திசை தெளிவாகவே இருந்தது. கிட்டத்தட்ட எந்த மரம் என்றுகூட கணிக்க முடிந்தது. நானும் ஈஸ்வரும் விஜய்யும் வேலுவும் சாலையில் படுத்தும் தோப்புக்குள் பாய்ந்தும் பார்த்துவிட்டோம். கால்மணி நேரமாக கண்களுக்கு ஒன்றும் அகப்படவில்லை. அதற்குள் அடுத்த கார் வந்துசேர அதிலிருந்து அகல்யா இறங்கி வந்தாள். நடந்து வரும்போது வெறும் கண்களாலேயே கிளைகளின் சந்து வழியாக பார்த்துவிட்டாள். மாமரங்களின் நடுவே நின்றிருந்த உயரமான வேறொரு மரத்தின் உச்சிக் கிளையில் அது பாட்டுக்கு எங்களை பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தது. மொத்தக் குழுவும் பார்த்து முடிக்கும் வரையிலும் அது தன் பாட்டை நிறுத்தவில்லை. கூடவே மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் ஆசிய நீலச்சிட்டு (Fairy bluebird) ஒன்று காட்சியளித்து எங்களுக்கான அன்றைய அந்தியை முடித்து வைத்தது.



இதற்குள் விஜயபாரதியின் இளைய மகள் மஞ்சரி தூக்கத்திலிருந்து எழுந்து காரில் தான் மட்டும் தனியாக இருப்பதாக நினைத்து பயந்துவிட்டிருந்தாள். நாங்கள் நால்வரும் காருக்கு வெளியே அருகில்தான் நின்றிருந்தோம். விஜயபாராதி சென்று அவளை மடியில் வைத்துக் கொண்டதும்தான் சற்றே சமாதானம் ஆனாள்.


“நாங்க எங்கயும் போகலடா, இங்க பக்கத்துல தான் நின்னுட்டு இருந்தோம். பார் இங்க ஜன்னலுக்கு வெளியே ஒரு மரம் தெரியுதில்லையா அங்க ஒரு பறவை குரலைக் கேட்டு வண்டிய நிறுத்தினோம். நீ தூங்கிட்டு இருந்ததால உன்ன எழுப்பி உன்கிட்ட சொல்லிட்டுதான போனோம். மறந்துட்டியா.. சரி பரவால்ல. பாரு அக்கா, மாமா எல்லாரும் இங்கதான இருக்கோம்,” என்றார் விஜயபாரதி.


அண்ணனின் மார்பில் சாய்ந்துகொண்டு அவள் சிறிது நேரம் எங்கள் எல்லோரையும் ஆராய்வதுபோல பார்த்தாள். அவளின் உள்ளம் அமைவது தெரிந்தது. “அப்பா, எனக்கு தூக்கத்துல Indian Cuckoo குரல் கேட்டுச்சு. அதத்தான் நீங்க பாக்க போனிங்களா?”


ஐந்து வயது குழந்தை அந்தப் பறவைக்குரலை அத்தனைத் துல்லியமாக கண்டறிவாள் என்பதை காரிலிருந்த நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. “ஆமாடா, உனக்கு எப்படி அந்த சத்தம் Indian Cuckoo ன்னு தெரியும்?”


“அக்காதான் அன்னிக்கு சொல்லிக் கொடுத்தாளே.. Indian Cuckoo பேர்ட் வந்து Greater coucal ன்னு கத்தும்.” எனக்கு முதலில் ஒன்றும் பிடிபடவில்லை. இந்தியக் குயில் எதற்காக செம்போத்தை அழைக்க வேண்டும்? 


அவளே மீண்டும் வலியுறுத்தினாள் “எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அக்கா சொன்ன மாதிரியே grea-ter-cou-cal (குக்-குக், குக்-கூ) அப்டின்னு கத்துச்சு” என்று பறவையைப் போலவே பாடிக் காட்டினாள். அவள் பாடிக் காட்டியதும்தான் குயிலின் பாடலோசை  அச்சொற்களின் உச்சரிப்புடன் ஒத்திருப்பதை புரிந்து கொண்டேன். அகல்யா அக்கா அருகிலேயே இருந்ததால் அவளிடம் ஈஸ்வரமூர்த்தி இதுபற்றி விரிவாக சொல்ல முடியுமா எனக் கேட்டார். கோடை விடுமுறையில் Young Birders Workshop சார்பில் குழந்தைகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட வகுப்பு ஒன்றில் தான் பங்கேற்றதாகவும் அதில் பறவைக் குரல்களை அடையாளம் காண்பது குறித்து ஒரு வகுப்பு எடுக்கப்பட்டதாகச் சொல்லி எங்களிடம் விளக்கினாள்.


“ஒவ்வொரு பறவைக் குரலையும் தனித்தனியா நினைவில் வைத்துக்கொள்வதை விட ஒட்டமொத்தமா பறவைக் குரல்களை தொகுத்து பிரிச்சுப் பார்க்க நிறைய வழிமுறைகள் இருக்கு. அதுல அடிப்படையான பிரிவினைகள் இரண்டு. பறவையோட குரல் High pitchஆ Low pitchஆன்னு சொல்றது. அடுத்ததா பறவையோட குரலில் எத்தனை நோட்ஸ் (notes) இருந்ததுன்னு சொல்றது. ஒன்னு, ரெண்டுன்னு பொதுவா நாலு நோட்ஸ் வரைக்கும் சொல்றது வழக்கம். உதாரணமா இப்ப நாம கேட்ட இந்தியக் குயில் பாடுனதுல நாலு நோட்ஸ் இருந்துச்சு. இப்படி வகைப்படுத்திக்கிட்டாதான் நம்மால இன்னொருத்தர் கிட்ட அந்தப் பறவையோட குரலை பகிர்ந்துக்கவே முடியும்.”


அவள் தெளிவாக வகுத்துரைத்த விதம் அதுபற்றி மேலும் அறிந்துகொள்ள எங்களைத் தூண்டியது. “இன்னைக்கு நாம பார்த்த பறவைகள் வச்சோ இல்ல நமக்கு தெரிஞ்ச பறவைகள் வச்சோ இந்தப் பிரிவினைகள் எல்லாத்துக்கும் ஒவ்வோர் உதாரணம் சொல்ல முடியுமா? எல்லாரும் சேர்ந்து ட்ரை பண்ணி பாக்கலாம்” என்றேன். அகல்யாவே அதற்கும் தயாராக இருந்தாள். “அங்கிள், ஹை பிட்ச் லோ பிட்ச் பிரிவினை பறவைக்குரலோட சத்தத்தை (volume) வச்சு சொல்றது மட்டும் இல்ல. அது நம்ம காதுக்கு எப்படி ஒலிக்குதுங்கறது பொருத்தும் முடிவாகும். உதாரணமா சீகாரப் பூங்குருவி (Malabar Whistling thrush) அழைப்பொலி எழுப்பும்போது நாம பக்கத்துல இருந்தா சத்தம் நல்லாவே கேட்கும். ஆனா அந்த ஓசை காதுகளுக்கு இசைவா இருப்பதால் அதை லோ பிட்ச்ன்னு சொல்லலாம். சரியா சொல்லனும்னா செண்பகப் பறவை எழுப்பும் ஆழமான ‘உப்.. உப்.. உப்..’ ஒலி லோ பிட்ச். தையல்சிட்டின் ‘டவீக்’ ஒலி ஹை பிட்ச்.”


“அடுத்ததா நோட்ஸ் எண்ணிக்கை வச்சு சொல்றதுக்கு குயிலினத்துலயே எல்லா உதாரணமும் இருக்கு. அடிக்கடி கேட்கும் ஆசியக் குயிலின் கூவலோசை சிங்கிள் நோட். அக்காகுயில் கத்துவது டபுள். சுடலைக்குயில் அதிகமும் ட்ரிபிள் நோட்டில் பாடும். இப்ப நாம கேட்ட இந்தியக் குயில் எப்பவுமே நாலு நோட்.”


“எல்லா பறவைக்குரலையும் இப்படி நோட்ஸ் பிரிச்சு சொல்லீர முடியுமா பாப்பா?” என்று கேட்டார் ஈஸ்வர் அண்ணா.


“இல்ல அங்கிள். நோட்ஸ் அடிப்படையான பிரிவினைதான். இதுக்குள்ள வராத பறவைகளும் உண்டு. குக்குறுவான்கள் மாதிரி தொடர் ஒலி எழுப்பும் பறவைகள் இந்த பிரிவினைக்குள்ள வராது. அப்ப அடுத்தகட்டமா பறவையொலியின் இயல்பை வச்சு ஒரு வகைப்படுத்தல் இருக்கு. அதுல மொத்தம் நாலு வகை. Melodious, Harsh, Series, Trilling ன்னு சொல்றாங்க. ஹார்மோனியஸ், இசைவான குரலுக்கு குண்டுக் கரிச்சானோட பாடலை சொல்ல முடியும். அண்டங்காக்கை கத்துவது நாராசம், ஹார்ஷ். நம்மால எண்ணிக்கை கணக்கு வைத்துக்கொள்ள முடியும் வகையில் மெதுவான தொடர் ஒலிகள் கொண்ட பறவைக்குரல்களை Seriesன்னு சொல்றோம். சரியான உதாரணம் செம்மார்பு குக்குறுவானின் குக்-குக்-குக்... ஒலி. கவுண்ட் பண்ண முடியாத வேகமான அதிர்வொலிகளுக்கு (Vibrating) ட்ரில்லிங்னு பேரு. வெண்மார்பு மீன்கொத்தி கத்திக்கிட்டே பறந்து போறது ட்ரில்லிங் சவுண்ட்.”


பேச்சு மீண்டும் இந்தியக் குயிலின் ஓசையை மஞ்சு கண்டுபிடித்த விதம் குறித்து திரும்பியது. அதாவது பறவையொலிகளை நமக்கேற்ற வகையில் சொற்றொடர்களாக (phrases) மாற்றிக் கொள்வது அவற்றை நினைவில் நிறுத்துவதற்கும் அவற்றுடன் உரையாடுவதற்கும் உகந்த வழி என்றாள் அகல்யா. பிரபலபமான பல பறவை சொற்றொடர்களை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். ஆட்காட்டியின் Did we do it?, அக்காகுயிலின் brain-FEVER போல இந்தியக்குயிலின் பாடல் grea-ter-cou-cal. இதே குரலுக்கு பிரபலமான இன்னொரு சொற்றொடரும் உண்டு one-more-boh-tul (திருப்தியுராத ஏதேனும் வெள்ளைக்கார துரை நள்ளிரவில் போட்ட பெயராக இருக்கும்). இம்மாதிரி ஏற்கனவே இருக்கிற சொற்றொடர்களைதான் பயன்படுத்தனும்னு இல்ல. பறவைக்குரல் நம் மனதிற்கு என்னவாக ஒலிக்குதோ அச்சொற்களை போட்டுப் பார்ப்பது நல்ல பயிற்சியாக இருக்கும் என்றாள். நான் யோசித்த வரையில் புழக்கத்தில் உள்ள சொற்றொடர்கள் யாவும் ஆங்கிலத்தில் இருந்தன. அவ்வாறெனில் நம் முன்னோர்கள் பறவைகளுடன் பேசிய மொழியெல்லாம் என்ன ஆனது? எனக்குத்தான் தெரியவில்லையா. இதுகுறித்து தேடிப் பார்க்க வேண்டும். தற்போது இந்த இந்தியக்குயில் தமிழ் நிலத்தில் பாடும் சொற்கள் என்னவாக இருக்கும்? குக்.குக்,குக்.கூ.. இங்-க-பாத்-தியா! கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் குயிலின் இயல்புக்கு ஏற்ற சொற்றொடரே எனத் தோன்றியது.




சிறுமலையில் நாங்கள் பதிவு செய்திருந்த விடுதிக்கு வந்துசேர இரவு பத்துமணி ஆகிவிட்டது. அறைக்குள் நுழைந்ததுமே வேலு பரபரப்பானார். “ப்ரோ இங்க நிறையா அந்துப் பூச்சிகளும் பட்டாம்பூச்சிகளும் இருக்கு ப்ரோ” என ஒவ்வொன்றையும் அருகில் சென்று படமெடுக்க தொடங்கிவிட்டார். அவருக்கு பூச்செடிகள், பூச்சிகள், ஊர்வன, பறப்பன என உயிரினங்கள் அனைத்தின் மீதும் நல்ல கண்கள் உண்டு. ஒரு அந்துப் பூச்சியை படமெடுத்து வந்து காண்பித்தார். அவர் காட்டிய படத்தில் அதன் உணர்கொம்புகளில் அரசிலையின் நரம்பிழைகள் போல அத்தனை நுட்பமான அமைப்புடன் இருந்தன. வெறும் கண்ணில் பார்த்தால் இழைகள் எதுவும் தெரியவில்லை, எதோ பாவும் பூச்சிபோல இருந்தது. இவர் கேமராவில் ஏஐ வைத்து ஏமாற்றுகிறார் என்று நினைத்தேன். இல்ல ப்ரோ நிஜாமாத்தான் என்று ஒவ்வொரு பூச்சியாக அருகில்சென்று படமெடுத்துக் காண்பித்தார். அப்படியாக அந்துப் பூச்சிகளுடன் அன்றைய இரவு கழிந்தது.


அடுத்த நாள் ஞாயிறு முழுவதும் சிறுமலையில் வெவ்வேறு இடங்களிலாக பறவை பார்க்க சென்றோம். போகும் இடங்களிலெல்லாம் கோபி சார் எந்த சுணக்கமும் இன்றி குழந்தைகளை மேய்க்கும் பொறுப்பை அவராகவே எடுத்துக் கொண்டார். குழந்தைகள் சமர்த்தா அல்லது அவரது மேய்க்கும் திறனாத் தெரியவில்லை, பயணம் முடியும் வரையில் தளிர்களின் புன்னகை முகங்களை மட்டுமே நாங்கள் பார்த்து வந்தோம். மேலும் திண்டுக்கல், சிறுமலை பகுதி கோபி-சரண்யாவின் ஏரியா என்பதால் மொத்த அணியையுமே அவர்கள்தான் மேய்த்தனர்.


எனக்கு இப்பயணத்தில் அதிகம் கவர்ந்த விஷயம் வெல்வெட் நெற்றி பசையெடுப்பான் (Velvet-fronted Nuthatch) பறவைகளை அதன் வாழிடத்தில் வைத்து அதிக நேரம் பார்க்க முடிந்தது. மரத்தண்டுகளில் தலைகீழாக நடந்து சென்று பட்டைகளுக்கு இடையே உள்ள பூச்சிகளை, பிசினை கொத்தி உண்ணும் பறவை. இதுபோக முதன்முறையாக ஆசிய நீலச்சிட்டை பார்த்ததும், வீட்டுத் தோட்டத்தில் பார்த்த கருந்தலைச் சில்லைகளும், விதவிதமான குயிலோசைகளும் இனிய தருணங்கள்.


பயணத்திற்கிடையே காடோடி நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் நக்கீரனை சந்ததித்தும், சிறுமலையில் விளைந்த தமிழ் நிலத்தின் முக்கனிகளையும் ஒரேநாளில் அடுத்தடுத்து சுவைத்துக் கொண்டே இருந்ததும் மனதில் நிற்பவை.


பயணம் முடித்து வீட்டுக்கு வந்த அடுத்தநாள் யதேச்சையாக காரை திறந்தபோது உள்ளே குழந்தைகள் எவரோ விட்டுச் சென்றிருந்த செண்பக மலர்களின் சருகைப் பார்த்தேன். சிறுமலையின் தெக்கத்திமலையில் பறித்து வந்த மலர்கள் அவை. மலர்கள் வாடிவிட்டாலும் கண்களை மூடி எஞ்சியிருக்கும் அதன் நறுமணத்தை நுகர்ந்தபடி பயணத்தின் நினைவுகளில் அமர்ந்திருந்தேன்.


பகல்பொழுதில் கூடிக்கூடி வந்த வெக்கை தணிந்து மாலை முதலே வெளியே வானம் இருட்டி வந்தது. மண்வாசத்துடன் குளிர்காற்று வீச எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பிலிருந்து அக்காகுயிலின் (hawk cuckoo) மாற்றில்லாத சொற்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தன, "மழை-மேகம்!".


படம் எடுப்பவர் கோபி


மேலும் படங்களுக்கு:


சிறுமலை பயணம் - படங்கள்

Comments

  1. மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை. இயல்பான உரையாடல் போன்ற உங்கள் எழுத்து நடை, வாசிப்பதை ஒரு பெரும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுகிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே:)

      Delete

Post a Comment

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...