முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.” ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...