Skip to main content

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்


நாகரிகத்திலிருந்து தப்பித்தல்


நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை நான் வாழ்ந்துவந்த பில்கோரே கிராமமோ தப்பித்து ஓடிவரும் அளவுக்கு போதுமான நாகரிகத்தைக் கொண்டிருக்கவில்லை. பின்னாட்களில் நான் வார்சாவுக்குச் (போலாந்தின் தலைநகர்) சென்றபோது மீண்டும் பில்கோரேவுக்கு திரும்பி வருவதை மட்டுமே என்னால் செய்யமுடிந்தது. நியூயார்க் நகருக்கு வந்துசேர்ந்த பின்னரே இவ்வெண்ணம் ஓரளவு பொருள் கொண்டதாக மாறியது. இங்குதான் ஒருவித ஒவ்வாமையால் நான் அவதிப்படத் துவங்கினேன் – தூசிக் காய்ச்சல், வேனில் ஒவ்வாமை போன்ற ஒன்று.. யாருக்குத் தெரியும்? குப்பிநிறைய மாத்திரைகளை எடுத்துக் கொண்டபோதும் பெரிய பலனேதும் ஏற்படவில்லை. வசந்த காலத்தின் துவக்கமோ ஆகஸ்டு மாதத்தைப் போன்று தீவிரமான வெப்பம் கொண்டிருந்தது, நான் குடியிருந்த மேற்கு பக்க அறையின் புழுக்கம் தாங்கமுடியவில்லை. நான் பொதுவாக மருத்துவமனைக்குச் செல்லும் வகையினன் அல்ல. இருப்பினும் டாக்டர். நிஸ்டட்காவை ஒருமுறை பார்வையிடச் சென்றேன், அவரை நான் வார்சாவிலிருந்தே அறிவேன், எட்டிஷ் பத்திரிக்கைகளில் அவ்வபோது என்னால் பிரசுரமாக்க முடிந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் வாசித்து விடுவார்.

டாக்டர். நிஸ்டட்கா என் நாசித்துவாரங்களின் உள்ளும் வாயினுள்ளும் சில சோதனைக் கருவிகளை விட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னார், “மோசம்.”

“நான் என்ன செய்ய வேண்டும்?”

”எங்காவது கடற்கரைக்கு அருகே சென்றுவிடுவது நல்லது.”

”கடல் எங்கே இருக்கிறது?”

”ஸீகேட்டுக்குச் செல்லுங்கள்.”

டாக்டர். நிஸ்டட்கா அப்பெயரை உச்சரித்த கணமே, இறுதியில் ஒருவழியாக நாகரிகத்திலிருந்து தப்பிசெல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன், ஹைட்டி அல்லது மடகாஸ்கரின் குறிக்கோளை ஸீகேட் நிறைவேற்றும் என நம்பலாம். அடுத்தநாள் காலை வங்கிக்குச் சென்று எனது சேமிப்பான எழுபத்தி எட்டு டாலர்களை எடுத்தேன், அறையை காலிசெய்துவிட்டு உடைமைகள் அனைத்தையும் ஒரு மரப்பெட்டியில் திணித்து எடுத்துக்கொண்டு சுரங்கவழியில் நடந்தேன். கிழக்கு பிராட்வேயில் உள்ள ஒரு உணவு விடுதியிலிருந்த யாரோ ஒருவர், ஸீகேட்டில் வசதியான அறைகள் கிடைப்பது மிகவும் சுலபம் என்றார். நாகரிகத்திலிருந்து அகன்றிருக்கையில் என் ஆன்மிகத் துணையாக சில புத்தகங்களை எடுத்துச் சென்றிருந்தேன்: பைபிள், ஸ்பினோஸாவின் அறவியல், ஷோப்பனோவரின் விருப்பம் மற்றும் எண்ணமாக இவ்வுலகம், இவைபோக கணித சூத்திரங்கள் அடங்கிய பாடநூல் ஒன்று. அப்போது நான் ஒரு தீவிர ஸ்பினோஸா பற்றாளன், ஸ்பினோஸாவைப் பொருத்தவரை தன்னளவில் முழுமையான கருத்துகளை தியானம் செய்வதால் மட்டுமே ஒருவன் அமரத்துவத்தை அடைய முடியும், அதாவது கணிதவியல் மூலம்.

நியூ யார்க் நகரின் வெப்பம் காரணமாக கோனி தீவில் கூட்டம் அதிகமாக இருக்குமென்றும் கடற்கரை குளிப்பவர்களால் நிறைந்திருக்கும் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் நான் இரயில் விட்டு இறங்கிய ஸ்டில்வெல் அவென்யூவில் இன்னும் பனிக்காலமாக இருந்தது. மன்ஹட்டனிலிருந்து தீவுக்கு வரும் ஒருமணி நேரத்தில் வானிலை மாறிவிட்டது ஆச்சர்யமானதுதான். வானம் மேகமூட்டத்துடன் இருந்தது, ஒரு குளிர்காற்று வீசியதில் ஊசிமுனைபோன்ற மெல்லிய மழைத்துளிகள் விழத் துவங்கின. சாலை காலியாக இருந்தது. ஸீகேட்டின் நுழைவில் அப்பகுதியின் தனிமையை பாதுகாக்கும் பொருட்டு ஒரு வாயிற்கதவு உள்ளது. அங்கு நின்றிருந்த இரு போலீஸ்காரர்கள் என்னை நிறுத்தி நான் யாரென்றும் ஸீகேட்டில் எனக்கு என்ன வேலையென்றும் விசாரித்தனர். நான் கிட்டத்தட்ட, “நாகரிகத்திலிருந்து தப்பித்து ஓடி வருகிறேன்,” என்று சொல்லியிருப்பேன், ஆனால் சமாளித்து, “ஓர் அறை வாடகைக்கு எடுக்க வந்தேன்” என்றேன்.

”உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டா?”

சுதந்திரமான நாடு எனச் சொல்லப்படுகிற இந்நிலத்தில் இம்மாதிரி விசாரணைகள் என்னை அவமதித்தன, நான் கேட்டேன், “அது தடை செய்யப்பட்டுள்ளதா?”

ஒரு போலீஸ்காரன் மற்றொருவனின் காதில் ஏதோ கிசுகிசுக்க இருவரும் சிரித்தனர். நுழைவாயிலைக் கடப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றேன்.

மழை வலுத்தது. அறை எங்கு கிடைக்கும் என்று யாரிடமாவது விசாரிக்கலாம் என எதிர்பார்த்தால் விசாரிப்பதற்கு அங்கு ஒரு ஆள்கூட இல்லை. கைவிடப்பட்டதுபோல் காட்சியளித்த ஸீகேட், இன்னமும் குளிர்காலத்தின் உறக்கத்தில் ஆழமாக அமிழ்ந்திருந்தது. தைரியத்திற்காக நான் சிலரை நினைவுகூர்ந்தேன் – ஸ்வென் ஹெடின், நான்சென், கேப்டன் ஸ்காட், அமுன்ட்ஸென் மற்றும் பல பயணிகள்.. உலகத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ளும் பொருட்டு தங்கள் நகரங்களின் செளகரியத்தை விட்டு வத்துள்ளனர். என் மரப்பெட்டியின் மீது சரமாரியாக ஆலங்கட்டிமழை விழுந்தது. பலத்த காற்றினால் தலையிலிருந்து தூக்கி வீசப்பட்ட என் தொப்பி தரையில் உருண்டு பறந்தது. திடீரென பெண்ணொருத்தி ஒரு வீட்டின் முகப்பிலிருந்து என்னை நோக்கி சைகை காட்டுவதை மழையினூடே பார்த்தேன். அவள் உதடுகள் அசைந்தன, எனினும் காற்று அவளின் குரலை எடுத்துச் சென்றதில் ஏதும் கேட்கவில்லை. மழை மற்றும் காற்றின் விசையிலிருந்து தற்காத்துக் கொள்ள அங்கு வந்துவிடுமாறு என்னை சைகையில் அழைத்தாள். நான் சென்று நின்ற அவ்வீடு ஆடம்பரமான முக்கோண வடிவ கூரையும், தூண்களும், அலங்கரிக்கப்பட்ட கதவும் கொண்டிருந்தது. முகமண்டபத்தினுள் நுழைந்து என் பெட்டியை வைத்தேன் (புத்தகங்களும் கைப்பிரதிகளும் பெரும் சுமைமிக்கவை), கைகுட்டையால் முகத்தைத் துடைத்த பின்னர் அப்பெண்ணை தெளிவாகக் காண முடிந்தது: முப்பதுகளில் இருக்கும் மாநிற அழகியாக தெரிந்தாள். மஞ்சள்நிற மேனி, கருமையான கண்கள் எனச் சிறப்பான கூறுகளுடன் இருந்தாள். அவளிடம் ஏதோ ஓர் ஐரோப்பியத்தனம் இருந்தது. அவள் புருவங்கள் அடர்த்தியானவை. முகத்தில் ஒப்பனை பொருட்களுக்கான அடையாளங்களே இருக்கவில்லை. அவள் அணிந்திருந்த மேலங்கியும் வட்டத் தொப்பியும் எனக்கு போலாந்தை நினைவூட்டியது. முதலில் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினாள், ஆனால் நான் பதிலளித்ததும் என் உச்சரிப்பைக் கேட்டு எட்டிஷுக்கு மாறிவிட்டாள்.

”யாரைக் காண வந்துள்ளீர்கள்? அந்த கனம் மிக்க மரப்பெட்டியுடன் நீங்கள் மழையில் நடந்து வருவதைப் பார்த்தேன், எனவே நான் நினைத்தேன் ஒருவேளை…”

ஓர் அறையை வாடகைக்கு எடுக்க வந்திருப்பதாகக் கூறியதும் அவள் கிண்டலாக புன்னகைத்தாள்.

”இதுதான் உங்கள் அறைதேடும் வழிமுறையா? உடைமைகள் அனைத்தையும் சுமந்துகொண்டு? உள்ளே வாருங்கள். என்னிடம் வாடகைக்கு விடுவதற்கென வீடுநிறைய அறைகள் உள்ளன.”

அவள் என்னை வரவேற்பறையினுள் அழைத்துச் சென்றாள், அதுபோன்ற வீட்டை நான் திரைப்படங்களில் மட்டுமே கண்டுள்ளேன் – கிழக்கத்திய தரைவிரிப்புகள், தங்கமுலாச் சட்டமிடப்பட்ட படங்கள், மேலும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அகலமான மாடிபடிக்கட்டில் சிவப்புநிற வெல்வெட் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஏதேனும் புராதன மாளிகையினுள் நுழைந்துவிட்டேனா? அப்பெண் கூறினாள், “இது வினோதமாக இல்லையா? நான் சற்றுமுன்னர் தான் இவ்வீட்டைத் திறந்தேன். குளிர்காலத்துக்காக மூடப்பட்டிருந்தது. வானிலை சற்றே சூடாக ஆரம்பித்ததால் இதுவே சரியான நேரம் என முடிவுசெய்தேன். வழக்கமாக இங்கு மே இறுதி அல்லது ஜூன் துவக்கத்தில்தான் பருவகாலம் தொடங்கும்.”

”ஏன் குளிர்காலத்தில் வீட்டை மூடிவிடுகிறீர்கள்?” நான் கேட்டேன்.

”இங்கு நீராவி இல்லை. இது பழைய கட்டிடம் – எழுபது அல்லது என்பது வருடம் பழமையானது. இதை சூடாக்க முடியும், ஆனால் அந்த அமைப்பு மிகவும் சிக்கலானது. வெப்பம் வருவது இதுவழியாகவே.” தரையிலிருந்த ஒரு பித்தளைக் குழாயை சுட்டினாள்.

தற்போது வெளியே இருப்பதைவிட உள்ளே மிகவும் குளிர்வதை உணர்ந்தேன். நீண்ட காலமாக சூரிய ஒளிபடாத இடங்களில் ஒருவித மட்கிய வீச்சம் அடிக்கும். நாங்கள் சிறிது நேரம் மெளனமாக நின்றோம். பின்னர் அவள் கேட்டாள், “நீங்கள் உடனடியாக குடிவர விரும்புகிறீர்களா? இன்னமும் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்பு கொடுக்கப்படவில்லை. பொதுவாக வாடிக்கையாளர்கள் ஏற்பாடுகள் செய்துகொள்ளவே வருவார்கள், முன்பணம் செலுத்திவிட்டு, வானிலை நன்றாக வெப்பமடைந்த பின்னரே குடிவருவார்கள்.”

”நகரத்திலிருந்த என் அறையை ஏற்கனவே காலிசெய்து விட்டேன்.”

அந்தப் பெண் என்னை ஆர்வத்துடன் நோக்கிவிட்டு பின்னர் கொஞ்சம் தயக்கத்துடன் கூறினாள், “உங்கள் படத்தை நான் பத்திரிக்கையில் கண்டுள்ளேன் என்பதை உறுதியாகச் சொல்வேன்.”

”ஆம், சென்ற வாரம் என் புகைப்படத்தை அவர்கள் அச்சிட்டனர்.”

”நீங்கள்தான் வார்ஷாவஸ்கியா?”

”அது நானே.”

”கடவுளுக்கு நன்றி!”

இருள் கவிந்ததும் எஸ்தர் அங்கிருந்த செம்பு சட்டமிடப்பட்ட விளக்கில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினாள். நாங்கள் சமயலறையில் அமர்ந்து இரவுணவை சுவைத்துக் கொண்டிருந்தோம், கணவன் மனைவி போல. அவள் அதற்குள்ளாக தன் முழுக்கதையையும் என்னிடம் சொல்லிவிட்டிருந்தாள்: அவளுடைய முன்னாள் கணவனால் நேரிட்ட துன்பங்கள், அவன் ஒரு கம்யூனிசக் கவிஞன்; அவள் ஒருவழியாக அவனை விவாகரத்து செய்தது; இரு பெண்குழந்தைகளுடன் எஸ்தரை தனியாக விட்டுவிட்டு அவன் தன் காதலியுடன் கலிபோர்னியாவுக்கு ஓடிப் போனது ஆகியவற்றை விவரித்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு, இந்த வீட்டின் மூலம் வாழ்க்கை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பில் அவள் இதை வாடகைக்கு எடுத்திருக்கிறாள், ஆனால் இது  போதுமான வருமானத்தைத் தரவில்லை. வாடிக்கையாளர்கள் நல்ல பேரம் அமைவதற்காக ஜூலை நான்கு வரை காத்திருந்து முயற்சித்தனர். கடந்த வருடம், அவளது பல அறைகள் காலியாகவே இருந்துள்ளன.

நான் என் பாக்கெட்டில் கைவிட்டு எழுபத்தி எட்டு டாலர்களை வெளியெடுத்து அவளுக்கு முன்பணமாக அளிக்க முன்வந்தேன், ஆனால் அவள் மறுப்பு தெரிவித்தாள். “இல்லை, நீங்கள் இதைச் செய்யக் கூடாது!”

“ஏன்?”

”முதலில், நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகும் அறையை பார்வையிட வேண்டும். இங்கு ஈரமும் இருட்டுமாக உள்ளது. ஒருவேளை உங்களுக்கு சளி பிடிக்கலாம். மேலும் நீங்கள் எங்கே சாப்பிடுவீர்கள்? என்னால் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் சமைத்துத் தர முடியும், ஆனால் நீங்கள் சைவத்திற்கு மாற திட்டமிட்டிருப்பதாகக் கூறுவதால் அது கடினமானதாக இருக்கலாம்.”

”நான் கோனி தீவில் சாப்பிட்டுக் கொள்கிறேன்.”

”உங்கள் வயிறு கெட்டுப்போய் விடும். அங்கு பன்றி இறைச்சியைத் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. எவ்வித முன்யோசனையும் இல்லாமல் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஒரு மனிதன் ஸீகேட்டுக்கு கிளம்பி வருவதென்பது நடைமுறையில் இயல்பானதல்ல. ஏதோ ஓர் அற்புதம்தான் உங்களை என்னிடம் சேர்த்துள்ளது.”

”ஆம், இது வியப்புக்குரியதே.”

அவளின் கரிய கண்கள் சற்றே பரிகாசத்துடன் என்னை உற்று நோக்கின, அதுவொரு தீவிரமான உறவுக்கான தொடக்கம் என்பதை நான் அறிவேன். அவளும் அதை அறிந்திருந்ததாகவே பட்டது. பொதுவாக அறிமுகமில்லாதவர்களிடம் சொல்லக்கூடாத விஷயங்களை அவள் என்னிடம் பேசினாள். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தெரிந்த அவளின் முகம் ஒரு திரைச்சீலையில் வரையப்பட்ட கரிஓவியமாக காட்சியளித்தது. அவள் சொன்னாள், “சென்ற வாரம் பத்திரிக்கையில் உங்கள் கதையை வாசித்தவாறு படுக்கையில் படுத்திருந்தேன். பெண்கள் உறங்கவிட்டிருந்தனர், ஆனால் எனக்கு இரவில் வாசிக்கவே பிடிக்கும். இப்போதெல்லாம் பேய்களைப் பற்றி யார் எழுதுகிறார்கள், நான் ஆச்சர்யபட்டேன், அதுவும் ஒரு எட்டிஷ் செய்தித்தாளில்! சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆனால் அப்போது நான் உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். இது விசித்திரமாக இல்லையா?”

”ஆம், விசித்திரம்தான்.”

”இவ்வீட்டுடன் தொடர்புடைய ஒரு காதல் கதை இருப்பதை தங்களிடம் சொல்ல வேண்டும். இதை ஒரு கோடீஸ்வரன் தன் மனைவிக்காக கட்டினான். அப்போது ஸீகேட் இன்னமும் பணக்காரர்களுக்கும் அமெரிக்க உயர்குடிகளுக்கும் உரிய இடமாய் இருந்தது. அவர் இறந்துவிட்ட பிறகு, அவரின் மனைவி தான் சாகும்வரை இவ்வீட்டிலேயே இருந்தாள். அலங்கார பொருட்கள் எல்லாம் அவளுடையதே – நூலகமும் கூட. அவள் எந்த உயிலும் விட்டுச் சென்றதாகத் தெரியவில்லை, எனவே வங்கி அனைத்தையும் முழுமையாக விற்றுவிட்டது. பல வருடங்கள் இவ்வீடு காலியாகவே இருந்தது.”

”அவள் அழகானவளா?”

”வாருங்கள், அவளின் உருவப்படத்தை தங்களுக்கு காண்பிக்கிறேன்.”

எஸ்தர் மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டாள். சமையலறையிலிருந்து அந்த தனியறைக்குச் செல்வதற்கு பல இருண்ட அறைகளை கடந்துசெல்ல வேண்டியிருந்தது. நான் வாயிற்படிகளிலும் உறுதியான நாற்காலிகளிலும் முட்டிக் கொண்டு தடுமாறினேன். தரைவிரிப்பு மேடாக இருந்த ஓரிடத்தில் சறுக்கினேன். எஸ்தர் என் மணிகட்டை பிடித்துக் கொண்டாள். அவள் கையின் கதகதப்பை உணர்ந்தேன். அவள் கேட்டாள், “உங்களுக்கு குளிர்கிறதா?”

”இல்லை. கொஞ்சம்தான்.”

மெழுகுவர்த்தியின் அசையும் ஒளியில் நின்று நாங்கள் அவ்வீட்டு எஜமானியின் உருவப்படத்தை உற்று நோக்கினோம். அவளது கூந்தல் பாம்படோர் அரசிக்குரிய வகையில் நெற்றியிலிருந்து வாரிவிடப் பட்டிருந்தது; அவள் அணிந்திருந்த உயரம் குறைந்த உடை அவளது நீண்ட கழுத்தையும் மார்பகங்களின் மேல்பகுதியையும் வெளிப்படுத்தின. அரை இருட்டில் தெரிந்த அவள் கண்கள் உயிர்ப்புடன் இருப்பதாகப் பட்டது. எஸ்தர் கூறினாள், “அனைத்தும் கடந்து செல்கின்றன. நான் இன்னமும் அவளுடைய புத்தகங்களில் அழுந்தி உலர்ந்துபோன பூக்கள் மற்றும் இலைகளை கண்டெடுக்கிறேன், ஆனால் தற்போது அவளின் எதுவும் மிச்சமில்லை.”

”அவளுடைய ஆவி இரவில் இந்த அறைகளில் அலைகிறது என்று நிச்சயமாக சொல்வேன்.”

எஸ்தரின் கையில் இருந்த மெழுகுவர்த்தி நடுங்கியதில் சுவர்கள், படங்கள் மற்றும் மரச்சாமான்கள் அனைத்தும் ஒரு நாடகமேடையின் உடமைகள்போல அதிர்ந்தன. ”அதைச் சொல்லாதீர்கள். என்னால் பயத்தில் தூங்க முடியாது!”

மனதை வாசிக்கும் இரண்டு நபர்கள்போல நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அப்போது என்ன யோசித்தேன் என்பது நினைவுள்ளது: ஒரு நாவலாசிரியன் மெல்ல மெல்ல கட்டியெழுப்ப வேண்டிய தருணம், பல்வேறு அத்தியாயங்கள் வழியாக, மாதக்கணக்கில் அல்லது வருடங்கள் எடுத்துக் கொள்வதை, விதி சில நிமிடங்களில் ஏற்பாடு செய்திருக்கிறது, சில தற்செயல்கள் மூலம். அனைத்தும் தயாராக உள்ளன – கதாப்பாத்திரங்கள், சூழ்நிலைகள், செயல் நோக்கங்கள். சரிதான், ஆனால் ஒரு நிஜ நாடகத்தில் அடுத்து என்ன நிகழும் என்பதை ஒருவராலும் முன்கூறிவிட முடியாது.

மழை நின்றுவிட்டிருந்தது, நாங்கள் மீண்டும் சமையலறையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம். நான் நேரமாகிவிட்டது என நினைத்தேன், ஆனால் கைக்கடிகாரத்தை பார்த்ததில் எட்டு மணி இருபத்தி ஐந்து நிமிடம் காட்டியது. சற்று நேரம் அங்கு அமைதியாக அமர்ந்திருந்தோம். உடனடியாக முடிவெடுத்தாகவேண்டிய ஏதோ ஒன்று குறித்து அவள் யோசிப்பதை காண முடிந்தது, அது என்னவென்று நான் அறிவேன். அவள் மனதில் ஒரு குரல் ஒலிப்பதை – ஒருவேளை அது பெண்களின் உள்ளுணர்வாக இருக்கலாம் - என்னால் கிட்டத்தட்ட கேட்க முடிந்தது, ”அவருக்கு இது எளிதாக கிடைத்துவிடக் கூடாது. இத்தனை சீக்கிரத்தில் ஒரு பெண்ணை அடைய முடிந்தால் ஆண் என்ன நினைப்பான்?”

எஸ்தர் தலையசைத்தாள். “மழை நின்றுவிட்டது.”

“ஆம்.”

”நான் சொல்வதைக் கேளுங்கள்,” அவள் கூறினாள். “இவ்வீட்டில் இருப்பதிலேயே சிறப்பான அறையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம், பணம் குறித்து நாம் பேரம்பேசத் தேவையில்லை. நீங்கள் இங்கு தங்குவதே எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பது. எனினும் இன்றைக்கே இங்கு குடிவருவது சரியாக வராது. நான் இன்றிரவு இங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் வந்தேன், ஆனால் தற்போது இவ்வீட்டை பூட்டிவிட்டு என் வீட்டிற்கு செல்லப் போகிறேன், குழந்தைகள் தனியாக இருப்பார்கள்.”

”நீங்கள் ஏன் இங்கு தங்குவதை தவிர்க்க வேண்டும்? என்னாலா?” என் சொற்கள் எனக்கே அவமானமாக பட்டன.

கண்களில் கேள்வியுடன் எஸ்தர் என்னை நோக்கினாள். “அவ்வாறே வைத்துக் கொள்ளுங்கள்.”

பின்னர் பெண்களின் பொதுவான விதிகளின்படி சொல்லக் கூடாத ஒன்றை அவள் சொன்னாள்: ”அனைத்தும் கனிய வேண்டும்.”

“நிச்சயமாக.”

”அறையை வேறு காலிசெய்து விட்டதால் தற்போது எங்கு உறங்குவீர்கள்?”

”நான் எப்படியாவது சமாளித்துக் கொள்வேன்.”

”எப்போது இங்கு குடிவருவதாகத் திட்டம்?”

“கூடிய விரைவில் வர வேண்டும்.”

”மே பதினைந்தாம் தேதி எனில் தங்களுக்கு நீண்டநாள் காத்திருப்பாக இருக்குமா?

“இல்லை, அதுவரை காத்திருப்பதில் பிரச்சனையில்லை.”

”அவ்வாறெனில், அனைத்தும் முடிவாகிவிட்டது.”

அவள் சற்றே சீற்றத்துடன் என்னைப் பார்த்தாள். அநேகமாக அவளிடம் நான் மன்றாடி சம்மதிக்க வைக்க வேண்டும் என எதிர்பார்த்திருப்பாள். ஆனால் மன்றாடுவதோ சம்மதிக்க வைப்பதோ என் ஆண் வியூகத்தின் பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை. எஸ்தருடன் செலவிட்ட சிலமணி நேரங்களில் என்னை குறித்து எனக்கே கொஞ்சம் தெளிவு கிடைத்துள்ளது. என்னைவிட அவள் பத்து வருடங்கள் மூத்தவளாக இருக்க வேண்டும். நாகிரீகத்தை கைவிடுவதற்கும் மற்றும் அதன் வெறுமையை எதிர்கொள்வதற்கும் அவசியமான பொறுமையுடன் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.

இருவருமே எங்கள் மேல்சட்டையை கழட்டியிருக்கவில்லை – மிகவும் குளிராக இருந்தது – என்பதால் அதை மீண்டும் அணியும் தேவையிருக்கவில்லை. நான் என் பெட்டியை எடுத்துக் கொண்டேன், எஸ்தர் அவளின் தினசரி தோல்பையை. அவள் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டுச் சொன்னாள்,  “நீங்கள் அவளது ஆவிபற்றி குறிப்பிட்டிருக்கவில்லையெனில், நான் ஒருவேளை தங்கியிருப்பேன்.”

”அவள் நிச்சயம் நல்ல ஆவியாக இருக்க வேண்டும்.”

”சில சமயம் நல்ல ஆவிகளும் தீங்கிழைத்து விடும்.”

நாங்கள் வெளிவந்ததும் எஸ்தர் வீட்டை பூட்டினாள். தற்போது வானம் தெளிவாக இருந்தது – கண்ணுக்குத் தெரியாத நிலவிலிருந்து வரும் ஒளிபோல. நட்சத்திரங்கள் மின்னின. அருகாமை கோபுரத்திலிருந்து வீசிய ஒரு சுழலும் ஒளிக்கீற்று எஸ்தரின் முகத்தில் ஒருபக்கமாக விழுந்தது. ஏனென்றுத் தெரியவில்லை, நான் அதை பஸ்கா1 திருவிழாவின் முதல் இரவாக கற்பனை செய்து கொண்டேன். அவ்வீடு மற்ற வீடுகளிலிருந்து தனித்து நிற்பதையும் புல்வெளிகளால் சூழப்பட்டிருப்பதையும் கவனித்தேன். கடல் ஒரு தெரு தள்ளி மிக அருகிலேயே இருந்தது. பலத்த சுழற்காற்றின் ஊளையில் முன்னர் வேறெந்த சப்தமும் கேட்கவில்லை, ஆனால் தற்போது காற்று அடங்கிவிட்டதால் அலைகள் எழுவதும் நுரைப்பதுமான ஒலியை கேட்க முடிந்தது, ஒரு பிரபஞ்ச கொதிகலனில் கடையப்படும் பிரபஞ்ச பானம்போல. தூரத்தில் ஒரு இழுவைப்படகு மூன்று பெரிய விசைப்படகுகளை இழுத்து வருவதைக் கண்டேன். மன்ஹட்டனிலிருந்து ஒருமணி நேரத்தில் இத்தனை அமைதியான இடத்தை ஒருவன் அடைந்துவிட முடியும் என்பது வியப்பாக இருந்தது.

எஸ்தர் விடைபெறும் விதமாய் பேசத் துவங்கினாள். “முன்னர் நீங்கள் முன்பணம் அளிக்க விரும்பினீர்கள், ஆனால் நான் மறுத்துவிட்டேன். அறை எடுப்பதில் நீங்கள் நிஜமாகவே தீவிரமாக இருந்தால் நான் ஒரு தொகையை ஏற்றுக் கொள்கிறேன், வெறுமனே உறுதி செய்து கொள்வதற்காக…”

”இருபது டாலர்கள் போதுமானதாக இருக்குமா?”

”ஆம், போதும். நீங்கள் மனதை மாற்றிக் கொண்டுவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே இதைக் கேட்டேன்,” சொல்லிவிட்டு அவள் சுயக் கட்டுப்பாட்டுடன் சிரித்தாள்.

இரவின் வெளிச்சத்தில், இருபது டாலர்களை எண்ணி அளித்தேன். நாங்கள் இருவரும் ஒன்றாக வாயிற்கதவு வரை நடந்தோம். நான் வரும்போது பணியிலிருந்த ஒரு போலீஸ்காரர் அங்கு நின்றிருப்பதை அடையாளம் கண்டுகொண்டேன். அவர் அனைத்தையும் அறிந்துவிட்டவராக எங்களையும் எங்கள் பெட்டிகளையும் பார்த்தார், எங்கள் இரகசியங்களை யூகித்துவிட்ட ஒரு மந்திரவாதியைப்போல. அவர் புன்னகைத்து கண்சிமிட்டினார், அவர் சொல்வது எனக்குக் கேட்டது, “நீங்கள் இருவரும் நாகரிகத்திற்கு திரும்புகிறீர்களா?”

***  
பஸ்கா1 – Passover - இஸ்ரேலியர்கள் எகிப்தியரிடமிருந்து பெற்ற விடுதலையைக் கொண்டாடும் யூதர் திருவிழா (வழக்கமாக எட்டு நாட்கள்)

*** 

மூலம்: Escape from Civilization (1972)

தமிழில்: தே.அ.பாரி

Comments

Popular posts from this blog

கரண்ட் மரம்

  அப்படியொரு மரத்தின் பெயரை இத்தனை நாளும் கவனிக்காமல் இருந்து விட்டோமே என எனக்கே வெட்கமாக இருந்தது. இத்தனைக்கும் வீட்டை விட்டு இறங்கினாலே முதலில் தென்படுவது அந்த மரமாகத்தான் இருக்கும். தள்ளுவண்டிக்கார அக்கா சொல்லும் வரையில் அதை ஒரு ‘மரமாக’ பார்க்க வேண்டும் என்ற பார்வைதான் இதுவரையில் தோன்றாமல் போய்விட்டது. மதியம் பனிரெண்டு மணி வெயிலில் இறங்கி சென்று இங்கு ஈரோடு பகுதியில் வார வாரம் புதிதாக திறக்கப்படும் பேக்கரிகள் ஏதேனும் ஒன்றில் அரைச்சக்கரை இட்ட சுமாரான கருப்பு டீயை குடித்துவிட்டு வருவது என்ன ரசனை என்று எனக்கேத் தெரியவில்லை. ஆனால் அதை தினமும் செய்து வருகிறேன். உண்மையில் டீ முடித்தக் கையுடன் வீட்டுக்கு வரும் வழியில் உள்ள தள்ளுவண்டிக்கடையை பார்த்ததும் தான் மனம் எதை எதிர்பார்த்தது என எனக்கேத் தெரிய வரும். கோடையின் துவக்கத்தில் பலாச்சுளையில் ஆரம்பமான வாடிக்கை. கால் கிலோ ஐம்பதில் தொடங்கி அரை கிலோவை ஐம்பதுக்கு வாங்கும் அளவுக்கு வண்டிக்கார அக்காவின் தொடர் வாடிக்கையாளனாக மாறியிருந்தேன். பலாப்பருவம் முடிவதற்கு முன்பே இடையிடையே நுங்கு, அதைத் தொடர்ந்து மாம்பழம், தற்போது கொய்யா நவா என வியாபாரம்...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

நனவிலியின் காலடித்தடம் - மணிபல்லவம்

  வாரவாரம் ஞாயிறு மாலை நடைபெறும் சிறுகதைக்கூடல் இந்த ஞாயிறுடன் தன் 49 ஆவது கூடுகையை நிறைவு செய்துள்ளது. பாண்டிச்சேரியை சேர்ந்த நாகராஜன் சார் இக்கூடலை தொடர்ந்து உற்சாகத்துடன் ஒருங்கிணைத்த நடத்தி வருகிறார். தொடர்ந்து எழுத்தாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து இதில் பங்கெடுக்க செய்கிறார். நான் இதுவரை சில வாரங்கள் கலந்து கொண்டிருக்கிறேன். என் பார்வையில் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் இயல்பாகவே கதையை முழுமையாக வாசித்தவர்களாகவும் பெரும்பாலும் கதையின் வாசிப்பு சாத்தியத்தை நோக்கி மட்டும் பேசுபவர்களாகவும் உள்ளனர். எனவே கூட்டு வாசிப்பின் நிறைவான அனுபவங்கள் அமைகின்றன. சிறுகதைக்கூடல் இந்த ஆகஸ்ட் மாதத்தை தொன்மக் கதைகளின் வாரமாகக் கொண்டாடியது. அதில் இந்த வாரத்தின் கதையாக மணிபல்லவம் விவாதிக்கப்பட்டது. கூடலுக்கு அழைக்கப்பட்டிருந்த நான் என் வாசிப்பை பகிர்ந்து கொண்டேன். அதன் எழுத்து வடிவை இங்கு பகிர்கிறேன் * மணிபல்லவம் சிறுகதை மணிபல்லவம் ஒரு தீவிரமான பயணத்தின் கதையும் கூட என்பதால் என் பயண நினைவு ஒன்றிலிருந்து இந்த உரையாடலை தொடங்குகிறேன். சென்ற ஆண்டு ஆந்திரா பயணத்தின் போது இந்தியாவின் இரண்டாவத...

மான் செவி கள்ளி

இரண்டு வாரங்களாக குறிப்பிடத்தக்க பயணங்கள் எதுவும் அமையாததால் மனதில் ஒருவித தவிப்பு. எனவே  இன்று மாலை குறைந்தபட்சம் ஒரு புதிய இடத்தையாவது கண்டடைவோம் என கூகுள் ஆண்டவரிடம் தேடினேன். வீட்டிலிருந்து ஒருமணி நேர தொலைவில் ஆதியூர் அருகே மிகப்பெரிய பரப்பளவில் குளம் ஒன்று இருந்தது. நீரும் பசுமையும் இருப்பதுபோல் ஆண்டவர் படம் காட்டினார். வண்டியை விட்டோம். சென்று பார்த்தால் குளத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் முள் மரங்களாலும் தாவரங்களாலும் ஆக்ரமித்து இருந்தது. பாதி அளவு உள்ளே சென்று பார்த்தோம். பார்த்தவரை நீர் இல்லை. பெரிய குளம் என்பதால் மறுபக்கத்தில் இருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டோம். செம்போத்தில் துவங்கி பஞ்சுருட்டான், வால்காக்கை என வழக்கமான பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வானில் உயரத்தில் எந்த அலட்டலுமில்லாமல் வேட்டையாடி பறைவையை (raptor) போல பறந்த பறவையை கவனித்தேன். பாம்புத்தாரா (Darter). அதன் நீள் கழுத்து தெளிவாகவேக் காட்டியது. அதிக உயரத்தில் பறந்து இன்று தான் பார்க்கிறேன். எப்போதும் நீருக்குள்ளோ நீரருகிலோ பார்த்தப் பறவை. அருகில் நீர்நிலை தேடி பறந்திருக்க வேண்டும். திரும்பும் வழியில...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

கண்டங்கருவளை - எஞ்சும் நஞ்சு

இன்று அந்த துளிக் கருமைக்கான நாள் போலும். தினசரி காலைநடையில் நான் கண்களைப் பார்த்து முகமன் உரைப்பது அந்தப் பெரியவரிடம் மட்டும்தான். முகமன் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு தலையசைப்பு, பதிலுக்கு அவரும் ஒரு தலையசைப்பு. அவர் தன் வயலோரமாக சாலையை ஒட்டி அமைந்திருக்கும் மாமரத்தின் அடியில் சிமெண்ட் கல்வெர்ட்டில் அமர்ததிருப்பார். ஊன்றுகோல் எப்போதும் துணையிருக்கும். எப்போதாவது “மாங்கா வேணுமா, சொரக்கா வேணுமா?” எனக் கேட்பார். வீட்ல செஞ்சிருப்பாங்களே ஐயா என்று கடந்து விடுவேன். இன்றைய நடையின் போது தூரத்திலிருந்தே பார்த்துவிட்டேன், அவர் கோழிக்கொண்டை வயலுக்கு நடுவே தன் ஊன்றுகோலின் கவட்டை பகுதியில் ஒரு காட்சிப்பொருளைப் போல அதை தூக்கிக் கொண்டு வந்தார், ஓர் அரவு. அவர் தூக்கி வந்த நிதானத்தையும் முகத்திலிருந்த பெருமிதத்தையும் பார்க்கும் போது பாம்பு பெரும்பாலும் இறந்துவிட்டது என்பது தெரிந்தது. நான் ஆர்வத்தில் முதலில் வேகமாக சென்றாலும் ஒருவேளை உயிர் எஞ்சியிருக்குமோ என்ற ஐயம் எழுந்தவுடன் கால்கள் தயங்கின. அந்த நேரத்தில் சாலையில் நான் மட்டுமே இருந்ததால் அவர் நேராக தூக்கிக் கொண்டு என் கிட்டத்திலேயே வந்துவிட்டார...