ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?
ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,
“முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு.
இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் நாங்கள் உன் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளத்தான். மனிதர்கள் என்ன மனிதர்கள், முக்கியமாக நான். இதையெல்லாம் கேட்டுப் படித்து வைத்திருக்கிறேன். இனிமேலாவது என் ஜட்டியை பதம் பார்க்காமல் இருப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும். ஆடைக்குள் கடிக்கும் போது உன்னை அந்த இடத்திலேயே நசுக்கித் தள்ளியிருக்கிறேன், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள கூடாது. மன்னித்தலின் மேன்மையை எறும்பிடம் கற்க வேண்டும் என்பதை நிச்சயம் மனிதர்கள் எங்காவது சொல்லியிருப்பார்கள். இல்லையென்றால் நான் இப்போது சொல்லி வைக்கிறேன்.
அப்புறம் மதிய சாப்பாடும் இரவு படுக்கையும். அந்தரத்தில் மிதக்கும் பாத்திரங்களும் மெத்தைகளும் அமேசானில் விற்பனைக்கு வரும் வரையிலாவது பொறுத்திருக்கக் கூடாதா? இதோடு இந்தக் கோடையில் மட்டும் நான்கு எறும்பு சாக்பீஸ் காலி. பார் இப்போது கூட எறும்பு பவுடர் போட்டு உன்னைக் கொல்லவில்லை. திசைமாற்றும் கோடுகள் மட்டும் தான். ஆனால் நானோ அழகிய வட்டங்கள் போடக்கூடியவன் அல்ல. கோணல் மாணலாக வருகிறது. வீட்டில் ஓர் ஓவியக்காரியை வைத்துக் கொண்டு எதற்கெல்லாமோ திட்டு வாங்க வேண்டியிருக்கிறது. அப்படியே கவனத்தை குவித்து அழகிய வட்டம் போட்டாலும் அது ஒருவாரத்தில் காலாவதியாகி விடுகிறது. இல்லையெனில் நீங்கள் எண்ணியிரா கோணத்திலிருந்து எண்ணியிரா பாதையை கண்டடைந்து எப்படியோ இலக்கை அடைந்து விடுகிறீர்கள். நேற்று அலமாரியிலிருந்து தொங்கிய நூலின் நுனி லேசாக சுவரில் தொட்டுக் கொண்டிருந்தது. இதையெல்லாம் நான் எப்படி கணிக்க முடியும்? நூலின் வழியாக பாதையமைத்து இருந்த நான்கு முந்திரிகளையும் காலி செய்துவிட்டிருக்கிறீர்கள்.
என் முழுத் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். உங்கள் பாதைகளை கணிப்பது என்னால் ஆகாது. அட்டன்பரோ தாத்தா உங்கள் பெருமைகளை சிலாகித்த போது சந்தேகித்தது தப்பு தான்.
வீட்டுக்குள் நீங்கள் ஊடுருவவில்லை, உங்கள் மகத்தான வலைப்பின்னலுக்கு இடையே தான் இந்த வீடே இருக்கிறது. புராதன எறும்புகளே உங்கள் ஊடுபாதைகளை வணங்குகிறேன். அவை பதிந்திருக்கும் உங்கள் கூட்டு நனவிலியை வணங்குகிறேன். காலங்காலமாய் இங்கு வந்து கொண்டிருக்கும் உங்களை வணங்குகிறேன்.”
எறும்புகள்
கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய்
கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய்
எங்கிருந்து வருகின்றன
எறும்புகள்
கால ங் கால மாய் கால ங் கால மாய்
கால ங் கால மாய் கால ங் கால மாய்



Beautifully written. எங்கள் வீடும் புராதனமான இடத்தில் இருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறேன் 🥰
ReplyDeleteநன்றி தன்யா:)
Delete