Skip to main content

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம்.


பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார். 

அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக் கொண்டிருந்தோம்.




இன்று காலை கிருஷ்ணமூர்த்தி சார் அவன் பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து இறந்துவிட்ட செய்தியை பகிர்ந்திருந்தார். முதலில் இதுவொரு விபத்து எனத் தோன்றினாலும் அவன் வாழ்வு குறித்து இணையத்தில் கிடைக்கும் செய்திகளை பார்க்கும் போது அப்படியில்லை எனத் தோன்றுகிறது.

சென்ற மூன்று நான்கு வருடங்களாக தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். வார இறுதிகளில் எந்த மலைப்பாதையிலும் பயணிக்க முடியாத அளவுக்குக் கூட்டம் வருகிறது. காப்புக் காடுகளின் அருகேயும் உள்ளேயும் சொகுசு விடுதிகள் நம்ப முடியாத வேகத்தில் பெருகி வருகின்றன. காப்புக் காடுகளின் அருகே சொகுசு விடுதிகளின் எண்ணிக்கை கட்டாயம் கண்காணிக்கப்படவும் குறைக்கப்படவும் வேண்டும். அடிப்படை வசதி கொண்ட விடுதிகளும் அடிப்படையான நுகர்வு பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

ரிசார்ட்டுகளும் மின்சார வேலிகளும் காடு அழிப்பும் சில்லிக் கொம்பனை வாழ்நாள் முழுக்க துரத்தியிருக்கிறது. இதுகுறித்த உரையாடலின் போது கிருஷ்ணமூர்த்தி சார் இவ்வாறு சொன்னார்,  "யானை தப்பிப்பதற்கு முயற்சி செய்ய வில்லை. மின் தாக்குதல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றில் பெரிய காயம் உள்ளது. தற்கொலை என்ற ஐயமும் தோன்றுகிறது." 

இதுகுறித்த உறுதியான தகவல்கள் நம்மிடம் இல்லை. தற்கொலையாக இல்லாவிட்டாலும் இது நாம் நிகழ்த்திய கொலை என்றே கொள்ள வேண்டும். தற்கொலை எனில் இது எத்தனை பெரிய துயர்? சொந்த மண்ணில் வாழ வழியில்லாத அரசனின் துயர். இது விபத்து என கடந்து செல்வதை விட ஒரு சமூகமாக நாம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

நம் மேற்கு தொடர்ச்சி மலை உலகின் மிக முக்கிய செல்வம். மண்ணில் எஞ்சியிருக்கும் வெகுசில பல்லுயிர் காடுகளில் ஒன்று. சூழியல் பிரக்ஞ்சையுடன் இம்மாதிரி இடங்களுக்கு செல்வதை உறுதியேற்போம். அதை பிறரிடமும் வலியுறுத்துவோம். ஒட்டுமொத்தமாக காடுகளுக்கு பயணம் செய்வதை குறைத்துக் கொள்வதே கூட நல்லதுதான்.

இதுவரை நானும் உடன் பயணித்த நண்பர்களும் சூழியல் பொறுப்புடன் பயணித்திருப்பதாகவே நம்புகிறேன். எங்கும் ஒருதுளி குப்பையோ வன உயிர்களுக்கு தொந்திரவோ தேவைக்கு அதிகமான நுகர்வோ செய்த்ததில்லை. இருப்பினும் தற்போது குற்றவுணர்வு கொள்கிறேன். பயணம் எந்த விதத்தில் செய்யப்பட்டாலும் அது நிச்சயம் பல்லுயிர் வெளிக்குள் சலனத்தை ஏற்படுத்தும். அந்தத் துலாத் தட்டில் இணையான எடையை வைக்க முடிந்தால் மட்டுமே இனி காடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும்.

இவையெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் சமாதானம் மட்டுமே என தெளிவாக உணர்கிறேன். யானைகளின் இறப்பு என்பது முற்றிய நோயின் வெளிப்பாடு மட்டுமே. இன்னும் நம் கவனத்துக்கே வராத பல அழிவுகள் நடந்திருக்கும். தமிழகம் மட்டுமின்றி கேரளத்திலும் இந்த அழித்தொழிப்புகள் குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஒட்டுமொத்தமாக மானுடம் மீது கசப்பே எஞ்சுகிறது. பைரணின் வரிகளுடன் காறி உமிழவேத் தோன்றுகிறது.

Man, vain insect!

தொடர்புடையவை:


Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நிறைய நண்பர்கள் யானை தற்கொலை செய்து கொள்ளுமா என்ற கேள்வியை தனிச் செய்திகளில் கேட்டிருந்தார்கள். நான் மேற்கோள் காட்டியிருப்பது முப்பது வருடங்களாக அக்காட்டிற்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒரு சூழியலாளரின் வரிகளை. அவரும் அதை ஓர் ஐயமாகவே முன்வைக்கிறார். நானறிந்தவரை அவர் எதையும் மிகையாக சொள்ளக்கூடியவர் அல்ல.

    விஷயம் அதுவல்ல, தற்கொலையாக இல்லாவிட்டாலும் ஒரு சமூகமாக நாம் இதில் பொறுப்பேற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றே சொல்ல வருகிறேன். மனித மனம் குற்றவுணர்விலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் வழிகளை புரிந்து கொள்கிறேன்.

    இந்த விஷயத்தில் இனிமேலும் கசப்பை வெளிப்படுத்த விரும்பவில்லை. நேர்மறையாக ஆக வேண்டியதைப் பார்ப்போம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கரண்ட் மரம்

  அப்படியொரு மரத்தின் பெயரை இத்தனை நாளும் கவனிக்காமல் இருந்து விட்டோமே என எனக்கே வெட்கமாக இருந்தது. இத்தனைக்கும் வீட்டை விட்டு இறங்கினாலே முதலில் தென்படுவது அந்த மரமாகத்தான் இருக்கும். தள்ளுவண்டிக்கார அக்கா சொல்லும் வரையில் அதை ஒரு ‘மரமாக’ பார்க்க வேண்டும் என்ற பார்வைதான் இதுவரையில் தோன்றாமல் போய்விட்டது. மதியம் பனிரெண்டு மணி வெயிலில் இறங்கி சென்று இங்கு ஈரோடு பகுதியில் வார வாரம் புதிதாக திறக்கப்படும் பேக்கரிகள் ஏதேனும் ஒன்றில் அரைச்சக்கரை இட்ட சுமாரான கருப்பு டீயை குடித்துவிட்டு வருவது என்ன ரசனை என்று எனக்கேத் தெரியவில்லை. ஆனால் அதை தினமும் செய்து வருகிறேன். உண்மையில் டீ முடித்தக் கையுடன் வீட்டுக்கு வரும் வழியில் உள்ள தள்ளுவண்டிக்கடையை பார்த்ததும் தான் மனம் எதை எதிர்பார்த்தது என எனக்கேத் தெரிய வரும். கோடையின் துவக்கத்தில் பலாச்சுளையில் ஆரம்பமான வாடிக்கை. கால் கிலோ ஐம்பதில் தொடங்கி அரை கிலோவை ஐம்பதுக்கு வாங்கும் அளவுக்கு வண்டிக்கார அக்காவின் தொடர் வாடிக்கையாளனாக மாறியிருந்தேன். பலாப்பருவம் முடிவதற்கு முன்பே இடையிடையே நுங்கு, அதைத் தொடர்ந்து மாம்பழம், தற்போது கொய்யா நவா என வியாபாரம்...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

நனவிலியின் காலடித்தடம் - மணிபல்லவம்

  வாரவாரம் ஞாயிறு மாலை நடைபெறும் சிறுகதைக்கூடல் இந்த ஞாயிறுடன் தன் 49 ஆவது கூடுகையை நிறைவு செய்துள்ளது. பாண்டிச்சேரியை சேர்ந்த நாகராஜன் சார் இக்கூடலை தொடர்ந்து உற்சாகத்துடன் ஒருங்கிணைத்த நடத்தி வருகிறார். தொடர்ந்து எழுத்தாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து இதில் பங்கெடுக்க செய்கிறார். நான் இதுவரை சில வாரங்கள் கலந்து கொண்டிருக்கிறேன். என் பார்வையில் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் இயல்பாகவே கதையை முழுமையாக வாசித்தவர்களாகவும் பெரும்பாலும் கதையின் வாசிப்பு சாத்தியத்தை நோக்கி மட்டும் பேசுபவர்களாகவும் உள்ளனர். எனவே கூட்டு வாசிப்பின் நிறைவான அனுபவங்கள் அமைகின்றன. சிறுகதைக்கூடல் இந்த ஆகஸ்ட் மாதத்தை தொன்மக் கதைகளின் வாரமாகக் கொண்டாடியது. அதில் இந்த வாரத்தின் கதையாக மணிபல்லவம் விவாதிக்கப்பட்டது. கூடலுக்கு அழைக்கப்பட்டிருந்த நான் என் வாசிப்பை பகிர்ந்து கொண்டேன். அதன் எழுத்து வடிவை இங்கு பகிர்கிறேன் * மணிபல்லவம் சிறுகதை மணிபல்லவம் ஒரு தீவிரமான பயணத்தின் கதையும் கூட என்பதால் என் பயண நினைவு ஒன்றிலிருந்து இந்த உரையாடலை தொடங்குகிறேன். சென்ற ஆண்டு ஆந்திரா பயணத்தின் போது இந்தியாவின் இரண்டாவத...

மான் செவி கள்ளி

இரண்டு வாரங்களாக குறிப்பிடத்தக்க பயணங்கள் எதுவும் அமையாததால் மனதில் ஒருவித தவிப்பு. எனவே  இன்று மாலை குறைந்தபட்சம் ஒரு புதிய இடத்தையாவது கண்டடைவோம் என கூகுள் ஆண்டவரிடம் தேடினேன். வீட்டிலிருந்து ஒருமணி நேர தொலைவில் ஆதியூர் அருகே மிகப்பெரிய பரப்பளவில் குளம் ஒன்று இருந்தது. நீரும் பசுமையும் இருப்பதுபோல் ஆண்டவர் படம் காட்டினார். வண்டியை விட்டோம். சென்று பார்த்தால் குளத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் முள் மரங்களாலும் தாவரங்களாலும் ஆக்ரமித்து இருந்தது. பாதி அளவு உள்ளே சென்று பார்த்தோம். பார்த்தவரை நீர் இல்லை. பெரிய குளம் என்பதால் மறுபக்கத்தில் இருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டோம். செம்போத்தில் துவங்கி பஞ்சுருட்டான், வால்காக்கை என வழக்கமான பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வானில் உயரத்தில் எந்த அலட்டலுமில்லாமல் வேட்டையாடி பறைவையை (raptor) போல பறந்த பறவையை கவனித்தேன். பாம்புத்தாரா (Darter). அதன் நீள் கழுத்து தெளிவாகவேக் காட்டியது. அதிக உயரத்தில் பறந்து இன்று தான் பார்க்கிறேன். எப்போதும் நீருக்குள்ளோ நீரருகிலோ பார்த்தப் பறவை. அருகில் நீர்நிலை தேடி பறந்திருக்க வேண்டும். திரும்பும் வழியில...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

கண்டங்கருவளை - எஞ்சும் நஞ்சு

இன்று அந்த துளிக் கருமைக்கான நாள் போலும். தினசரி காலைநடையில் நான் கண்களைப் பார்த்து முகமன் உரைப்பது அந்தப் பெரியவரிடம் மட்டும்தான். முகமன் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு தலையசைப்பு, பதிலுக்கு அவரும் ஒரு தலையசைப்பு. அவர் தன் வயலோரமாக சாலையை ஒட்டி அமைந்திருக்கும் மாமரத்தின் அடியில் சிமெண்ட் கல்வெர்ட்டில் அமர்ததிருப்பார். ஊன்றுகோல் எப்போதும் துணையிருக்கும். எப்போதாவது “மாங்கா வேணுமா, சொரக்கா வேணுமா?” எனக் கேட்பார். வீட்ல செஞ்சிருப்பாங்களே ஐயா என்று கடந்து விடுவேன். இன்றைய நடையின் போது தூரத்திலிருந்தே பார்த்துவிட்டேன், அவர் கோழிக்கொண்டை வயலுக்கு நடுவே தன் ஊன்றுகோலின் கவட்டை பகுதியில் ஒரு காட்சிப்பொருளைப் போல அதை தூக்கிக் கொண்டு வந்தார், ஓர் அரவு. அவர் தூக்கி வந்த நிதானத்தையும் முகத்திலிருந்த பெருமிதத்தையும் பார்க்கும் போது பாம்பு பெரும்பாலும் இறந்துவிட்டது என்பது தெரிந்தது. நான் ஆர்வத்தில் முதலில் வேகமாக சென்றாலும் ஒருவேளை உயிர் எஞ்சியிருக்குமோ என்ற ஐயம் எழுந்தவுடன் கால்கள் தயங்கின. அந்த நேரத்தில் சாலையில் நான் மட்டுமே இருந்ததால் அவர் நேராக தூக்கிக் கொண்டு என் கிட்டத்திலேயே வந்துவிட்டார...