தேர்தல் முடிவுகள் வரும்போது ஊரில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. என் வாழ்வில் நான் மிக முக்கியமானதாக கருதும் எழுத்துப் பணி ஒன்றை எனக்கு நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விசையை தக்கவைத்துக் கொள்ள
தினமும் இரண்டு பக்கங்களாவது எழுதியாக வேண்டும். ஆனால் ஊரில் இருந்தால் தேர்தல் முடிவுகள் தேவையற்ற கவனச்சிதறலாக அமையக்கூடும் எனும் அச்சம் இருந்தது. அதுவுமில்லாமல் எனக்கே சிறுவயது முதல் அரசியல் ஆர்வம் உண்டு. மக்களை வேடிக்கை பார்க்கும் எவராலும் தேர்தல் நேரத்தில் மக்கள், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் என அனைவரும் மேற்கொள்ளும் கூட்டுப் பாவனைகளை, அணி தாவல்களை, வியூகங்களை, வெளிப்படையான வியூகங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மறைமுக வியூகங்களை இன்னும் இது போன்றவற்றை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் தமிழகம் போன்ற நிலத்தில் அரசியல் மற்றும் சினிமா சார்ந்து நம் காதை வந்தடையும் எந்தச் செய்தியும் நம்பத்தகுந்ததல்ல என்பதே என் இப்போதைய எண்ணம். ஓரளவு உள்ளுணர்வு சார்ந்தும் நடைமுறை கணக்குகள் சார்ந்தும் சிலவற்றை யூகிக்கலாமே ஒழிய எதையும் உறுதியாக சொல்வதற்கில்லை. இது எல்லாவற்றையும் விட தேர்தல் சமயங்களில் எனக்கு ஏற்படும் கடும் ஒவ்வாமை அதன் மீது குவிக்கப்படும் அதீத கவனம் தான். நம் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்துபோகின்றன. தலையெழுத்தை திருத்தி எழுதும் அரிய வாய்ப்புகள் நமக்குத்தான் எத்தனை முறை வாய்க்கின்றன! ஆண்டவருக்கு நன்றி.மேலும் ஜனநாயக சோதனை சாலை வாசித்ததிலிருந்து அரசு என்பது நம் வரிப்பணத்தை நிர்வாகம் செய்யும் ஓர் நிர்வாக அமைப்பு மட்டுமே என்ற எண்ணமே எனக்கு இன்று மேலோங்கி உள்ளது. நம் வரிப்பணத்தை சரியாக ஓர் அரசு செலவிடுமா என்பதே ஒவ்வொரு தேர்தலிலும் முதன்மை பேசுபொருளாக இருக்க வேண்டும். ஆனால் அது எந்த விவாதத்திலும் கடைசி பேசுபொருளாகக் கூட இருப்பதில்லை. எனவே மயிர்பிளக்கும் கொள்கை விவாதங்கள் மீது நம்பிக்கை இழந்திருந்தேன். தேர்தல் நடைமுறையில் ஜனநாயக விழுமியங்களை முன்னிறுத்துவது மட்டுமே நாம் செய்யக் கூடுவது. இம்முறை முனை இளைஞர்கள் முன்னெடுத்த ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ பிரச்சாரத்தில் அவர்கள் செயல்புரியும் கிராமமான அம்மாபாளையத்தில் ஒருநாள் சென்று பங்கெடுத்தேன். இடையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அந்த பிரச்சாரத்திலும் தொடர்ந்து பங்கெடுக்க முடியவில்லை. இம்முறை விநியோகிக்கப்பட்ட பணமும் அதிகம் அது அனைவரையும் சென்று சேர கட்சியினர் கொடுத்த அழுத்தமும் அதிகம். தனிப்பட்ட முறையில் எங்கள் வீட்டில் பணத்தை மறுத்த பின்பும் திமுகவினர் தொடர்ந்து மூன்று நாட்கள் வந்துள்ளனர். மூன்றாம் நாள் வாசலில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் பணத்தை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். தேர்தலுக்கு முந்தைய தினம் நானும் அப்பாவும் சென்று பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு வந்தோம். அதன்பிறகு தேர்தல் நாளன்று வாக்களித்ததுடன் இந்த தேர்தலில் நான் ஆற்றுவதற்கோ கவனிப்பதற்கோ கூட எதுவுமில்லை.
அப்பா தீவிர திமுக அனுதாபி. முடிவுகள் தினத்தன்று அவரை வீட்டில் விட்டால் நாள்முழுக்க டிவி முன் அமர்ந்து சோர்ந்து விடுவார், முடிவுகளும் அவருக்கு சாதகமாக இருக்காது என எனக்குத் தோன்றியது. முடிவுகள் நெருங்கும் சமயத்தில் வீட்டிலிருக்கும் குழந்தைகள், இளைஞர்கள் போன்றோரை தனியாக விடாதீர்கள்.. விபரீதங்களை தவிர்ப்பீர் என அக்கறை பதிவுகள் சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால் எனக்கென்னவோ வீட்டிலிருக்கும் பெருசுகளை தான் கவனித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. ஏனெனில் நடந்த முடிந்த தேர்தல் தவெக என்ற கட்சி மாற்றம் மட்டுமல்ல. உருவாகி வரும் தலைமுறை அதிகாரத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தாங்களாகவே தன் கையில் எடுத்துள்ளது. மெய்யாகவே அரசியல் தலைமைகளை தேர்ந்தெடுக்கும் களத்தில் தலைமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இம்மாற்றம் எப்போதும் நிகழ்வது தான், ஆனால் வழக்கமாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள எடுத்துக்கொள்ளும் எனில் இம்முறை ஆறே மாதத்தில் அதிரடியாக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்நிலையில் பழைய தலைமுறையினர் ஒருவகை இருத்தலியல் துயரத்தை அடைய வாய்ப்புண்டு.
எனவே குடும்பத்துடன் சிறிய சுற்றுலா போகலாம் என முடிவெடுத்தோம். ஈரோட்டிலிருந்து கொல்லிமலை மூன்று மணி நேர பயணம். மேலும் அங்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘இரவு வான்வெளி பூங்கா’ (Dark Sky Park) நானும் பாப்புவும் ஒரு மாதமாகவே செல்லத் திட்டமிட்டிருந்த இடம். வார நாள், முடிவுகள் தினம் என்பதால் அதிக கூட்டம் இருக்க வாய்ப்பில்லை. நாங்கள் நினைத்த மாதிரியே நாமக்கல் நகரை அடையும் வரைக்குமே சாலைகள் வெறிச்சோடி இருந்தன. பனிரெண்டு மணி வாக்கிலேயே முடிவுகளின் ட்ரெண்ட் செட் ஆகி இருந்தாலும் பெரிய கொண்டாட்டங்களும் கண்ணில் படவில்லை. திறந்திருந்த சில டீக்கடைகளில் செல்போனை பார்த்தபடி தாழ்ந்த குரலில் மக்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டனர். அனைவரும் உறுதியான முடிவுகளுக்காக காத்திருப்பதாகத் தோன்றியது. இடையில் அம்மாவுக்கு போன் செய்த அண்ணன் முடிவுகள் தினத்தன்று எதற்கு வெளியே சென்றீர்கள் என பீதியைக் கிளப்பினான். தேர்தல் நாளான்றோ முடிவுகள் நாளன்றோ தமிழகத்தில் வன்முறைகள் நிகழ்ந்து எனக்குத் தெரிய பதினைந்து வருடங்களுக்கும் மேலாகிறது. அப்போதெல்லாம் கட்சியினர் கும்பலாக மோதிக் கொள்வது, முடிவை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டம், பொது சொத்துகளை உடைத்தல், தீவைப்பு சம்பவங்கள் என பலதும் நடக்கும். வெளிப்படையாக வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படும். குறைந்தது பத்து முதல் ஐம்பது வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடக்கும். சில மையங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நாம் கிட்டத்தட்ட முற்றிலும் வன்முறையற்ற தேர்தல் நடைமுறைக்கு இன்று வந்திருக்கிறோம். கடந்த இருபது ஆண்டுகளுக்குள் நடந்த மாற்றம் இது. நாம் ஆரோக்கியமான ஜனநாயகப் பாதையில் தான் இருக்கிறோம். இதை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
கொல்லிமலை அடிவாரத்தில் திறந்திருந்த ஒரேயொரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். நான் தேர்தல் முடிவுகளை விலகி ஓடினாலும் எங்கும் அதுவே வியாபித்திருந்தது. சாலையில் இறங்கினாலே நேரடி வர்ணனைகள் காதில் விழுந்தன. அப்பா ஆழ்ந்த அமைதிக்கு சென்றுவிட்டது மட்டுமே எங்களுக்கு சற்றே கவலையளிப்பதாக இருந்தது. நானும் அம்மாவும் பாப்புவும் அவரை கிண்டல் செய்தாவது பேச வைக்க முயன்று கொண்டிருந்தோம். ஆனால் அப்பா அதே நிலையில் இருந்தார். சாப்பிட்டு முடிக்கும் போது பொதுமக்களின் நேரடி வர்ணனை வாயிலாக தீமுக மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடம் வந்துவிட்டதாகவும் எதிர்கட்சி அந்தஸ்து உறுதி என்றும் சொன்னார்கள். அப்பா சற்றே தெளிவடைந்தார்.
அடிவாரத்திலிருந்து மேலே ஏறத் துவங்கும் இடத்தில் அலங்கார நுழைவாயில் எங்களை உள்ளிழுத்துக் கொண்டது. நான் மானசீகமாக சமநிலத்துடன் எனக்கிருந்த தொடர்புகளை எண்ணங்களை துண்டித்துக் கொண்டேன். நீரெல்லாம் கங்கை என்பது போல எந்த சிறு மலையும் சிறு கல்லும் இமயம் என்றொரு சொல்லுண்டு. நான் முற்றிலும் தனித்த அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த மலைக்கு செல்லப் போவதாய் கற்பனை செய்து கொண்டேன். பௌத்த மரபில் அப்படியான ஓர் இடம் உண்டு. ஷம்பாலா (Shambhala) என்று பெயர். நமக்கான ஷம்பாலாக்களை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான். நுழைவாயிலிலைக் கடந்து மேலேறியதும் இருபக்கமும் அடர்ந்த மூங்கில் காடுகள். அதைக் கடந்ததும் கொண்டை ஊசி வளைவுகள் தொடங்கின.
மொத்தம் எழுபது கொண்டை ஊசி வளைவுகள். அரைமணி நேர பயணித்திற்குள் எழுபது முறை நம் நிலைப்பாட்டை மாற்றி முற்றிலும் எதிர்திசையில் பயணிக்க வேண்டும். இந்த வளைவுகளை கடந்து முடிந்த பின்னர் என் அகம் என்னவாகியிருக்கும்? வாழ்வின் திசை மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ள மனம் பழகிவிடுமா? எழுபது முடிச்சுகள் அல்லது எழுபது மணிகள். இந்தச் சாலை இம்மலையின் மீது வீசப்பட்ட ஆபரணம். இதன் மீது வளைந்து நெளிந்து கிடக்கிறது. நான் ஒவ்வொரு முடிச்சாக இந்த ஆபரணத்தில் தொற்றி இம்மலை மீது ஏறிக் கொண்டிருக்கிறேன்.
சென்ற ஆண்டு கொல்லிமலைக்கு மார்ச் தொடக்கத்தில் வந்திருந்தோம். அது ஜாகரண்டா பூக்கும் பருவம். மரங்களிலும் சாலையிலும் எங்கும் பூக்கள் நிறைந்திருந்தன. ஜாகரண்டா பிரகாசமான வெளிர் நிற பூ அல்ல. மங்கலான ஊதாவும் நீலமும் கலந்த நிறம். எனவே எத்தனை பார்த்தாலும் கண்களுக்கு திகட்டுவதில்லை. ஒவ்வொரு திருப்பத்திலும் காரை நிறுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். கொல்லிமலை என்றவுடன் ஜாகரண்டா குறித்த எதிர்பார்ப்பே எங்கள் இருவர் மனதிலும் முதலில் எழுந்தது. ஆனால் இம்முறை மே துவக்கம் என்பதால் ஜாக்ரண்டா கிட்டத்தட்ட பூத்து முடிந்திருந்தது. சாலையில் ஆங்காங்கே உதிர்ந்திருந்த ஒருசில பூக்கள் மட்டுமே. ஒவ்வொரு திருப்பத்திலும் சென்ற ஆண்டின் நினைவுகளை மட்டும் மனதில் நிகழ்த்தியபடி ஊரை சென்றடைந்தோம்.
கொல்லிமலையில் நம்மை முதலில் ஆற்றுப்படுத்துவது வள்ளலார் தர்ம சாலை சார்பாக நடத்தப்படும் இலவச நீர் மோர் பந்தல்கள். இஞ்சி கறிவேப்பிலை இட்ட மோர் மட்டுமின்றி மூலிகை சூப்பும் தருவார்கள். கொல்லிமலை முழுக்க நான்கைந்து இடத்தில் கண்ணில் படும். தரும சாலை சார்பாக நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்றும் கொல்லிமலையில் செயல்படுகிறது. மோர் அருந்திவிட்டு பெட்ரோல் நிலையம் சென்றோம். அங்கு ஜன்னலை இறக்கியதுமே மக்களின் நேரடி வர்ணனைகள் தொடர்ந்தன. மணி மூன்றுக்கு மேல் ஆகியிருந்தது. இம்முறை யார் முகத்திலும் ஐயங்கள் இல்லை. அனைவர் குரலிலும் உற்சாகம். பெட்ரோல் நிலையம் அருகே இருசக்கர வாகண பட்டறை ஒன்று இருந்தது. இந்த தேர்தலின் முதல் கொண்டாட்ட குரல்களை அங்கிருந்துதான் கேட்டோம். கத்துவதா ஊளையிடுவதா என்ற குழப்பம் முதலில் நிலவியது. பின்னர் எந்த ஒழுங்கும் இன்றி விதவிதமான கூச்சல்கள், சிரிப்புகள். பட்டறை பையன்கள் பெட்ரோல் நிலைய அக்காவிடம் வந்து ட்ரீட் கொடுத்தே ஆக வேண்டும் என நின்றார்கள். அக்காவும் கடைசியில் இரவு பிரியாணி வாங்கித் தருவதாக இணங்கினார்.
ஒருகணம் மானசீகமாக அக்கொண்டாட்டத்தில் நானும் பங்கெடுத்தேன். நமக்கு தொடர்பே இல்லாவிட்டாலும் எந்தக் கொண்டாட்டத்திலும் மனிதர்களால் பங்கேற்க முடிகிறது. உண்மையில் நமக்குத் தொடர்பில்லாத கொண்டாட்டத்தில் தான் மெய்யான மகிழ்ச்சியை அடைகிறோமா?
நாங்கள் கடைத்தெருவை அடைந்திருந்தோம். பெரும்பாலான கடைகள் இன்னும் அடைத்திருந்தன. ஒரு நடுவயது மனிதர் போனில் கத்திப் பேசிக்கொண்டு போனார். அவர் கைகளில் சணல் கயிறு சுற்றப்பட்ட உள்ளூர் பட்டாசுகள் இருந்தன. “மாப்ள முத பட்டாசு நாம தான் போடணும்.. ஆமா ரிசல்ட் கன்பார்ம்.. இன்னும் ரெண்டு ரவண்டுதான், இந்த லீடிங்க தாண்ட முடியாது.. நாமதான்”
முதல் பலாச்சுளைகள் கண்ணில் பட்டதும் நிறுத்தி வாங்கினோம். அங்குதான் முதல் மலரும் கண்ணில் பட்டது. சற்றுத் தொலைவில் குல்முகர் மலர்கள் பூத்து நிறைந்திருந்தன. மே மாதத்தின் மலர். இது மலை மேல் திகழும் மே மாதம் என நினைத்துக் கொண்டேன். கீழே சமநிலத்தில் திகழ்ந்த மே மாதம் வேறு. வெயிலும், உலகியலும், அரசியலும், ஊடகமும், பதற்றங்களும் நிறைந்து. இனி இந்த இரண்டு நாட்கள் நான் வாழவிருப்பது வேறொரு மே மாதத்தில், குல்முகரின் நிலத்தில். அதன் பிறகு அப்பகுதியெங்கும் மிகத்தொலைவில் இருக்கும் குல்முகர் மலர்கள் கூட கண்ணில் பட தொடங்கின. இந்த விந்தை ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. ஒரு மலரை பார்த்துவிட்டால் அது மீண்டும் மீண்டும் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது. கண்கள் அதன் காட்சியின்பத்தை தவறவிடுவதேயில்லை. சென்ற கொல்லிமலை பயணத்தின் மலர் ஜாகரண்டா என்றால் இம்முறை பயணத்தின் மலர் குல்முகர்.
வேடிக்கை பார்த்தபடி மாலை ஐந்து மணி அளவில் நாங்கள் முன்பதிவு செய்திருந்த வனத்துறை குடில்களுக்கு சென்று சேர்ந்தோம். ஆகாயகங்கை அருவிக்கு அருகே அமைந்த குடில்கள். நாள் வாடகை ஆயிரத்தி இருநூறு, ஏசி வசதி உண்டு. நாங்கள் இரண்டு அறைகள் எடுத்திருந்தோம். எங்கள் குடில்களே வனத்துறைக்கு சொந்தமான பூங்காவுக்குள் தான் அமைந்திருந்தன. எனவே அறையை விட்டு வெளியே வந்தால் சுற்றிலும் மலர் தோட்டம், அரிய வகை மூலிகைகள், மரங்கள் என அதுவொரு அற்புதமான வெளி. நாங்கள் ஆறு மணிக்கெல்லாம் இரவு வான்வெளி பூங்காவுக்கு கிளம்ப வேண்டும். எனவே நான் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மீண்டும் மலர் வனத்தை சுற்றிப்பார்க்க வந்தேன். அனைத்துச் செடிகள், மரங்கள் மீதும் தகவல் பலகை ஒட்டியிருந்தார்கள்.
மகிழத்தையும் வேங்கையையும் நானே அடையாளம் கண்டேன். வேங்கையில் கரிய பிசின் வடியத் தொடங்கியிருந்தது. கடம்ப மரத்தின் வடிவத்தை மனதில் பதிந்து கொண்டேன். அடுத்ததாக நான் பார்த்த மரம் நீர் மருதம். ஆ நீலம் நாவலில் இம்மரத்தை பார்த்திருக்கிறேன்! “நாணமற்றது மருதம்..” என்றொரு வரி நினைவில் மின்னி மறைந்தது. மரங்கள், மூலிகைச் செடிகளை பார்த்து முடித்ததும் அருகே ஒரு குன்று இருந்தது. அதன் வழியில் பட்டாம்பூச்சி பூங்கா என்ற அறிவிப்பு பலகை. சரிவுப்பாதையில் ஏறினால் மூன்று வட்டங்களில் குன்றின் மேலேறும்படி அமைத்திருந்தார்கள். பாதையின் இருபுறமும் பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையிலான பூச்செடிகளும் இடையிடையே மரங்களும் இருந்தன. முதலில் வரவேற்றது பொன் மூங்கில். அதைப் பார்த்த கணம் ஏனோ ஆசிரியர் லோகாமாதேவி மனதில் எழுந்தார். அதன் பிறகு அங்கிருந்த ஒவ்வொரு தாவரத்தையும் அவரே விளக்குவதாக மனதில் குரல் ஓடியது.
செம்பருத்தி மட்டும் ஏழெட்டு வண்ணங்களில் வந்தபடியே இருந்தன. நித்திய கல்யாணிகள், வாடாமல்லி, இதுவரை பார்த்தேயிராத நிறங்களில் கனகாம்பரங்கள். ஆங்காங்கே இடைநின்ற கடம்ப மரங்களும் மகிழ மரமும் இச்செடிகள் விரித்த மலர்வெளியை புன்னகையுடன் குனிந்து நோக்கிக் கொண்டிருந்தன.
குன்றின் மேலேறியதும் முதலில் கண்ணில் பட்டது அங்கு ஓங்கி நின்றிருந்த கிருஸ்துமஸ் மரம். வெண்ணிற கனகாம்பரம் போன்ற மலர்கள் குழந்தைகளாய் சூழ்ந்து நின்றிருக்க, சுற்றிலும் மலைகளின் பின்னணியில் நின்றிருந்தது. ‘ஷம்பாலாவே தான்’ எனும் சொல் அகத்தில் எழுந்தது. அச்சிறிய குன்றின் உச்சியை வட்ட வடிவில் அழகாக அமைத்திருந்தார்கள். விதவிதமான நிறங்களில் வடிவங்களில் பெயரறியா மலர்கள். எங்கும் வண்ணங்களின் கொப்பளிப்பு. பட்டாம்பூச்சிகள் குறைவாகவே கண்ணில்பட்டாலும் தேனீக்கள் அதிகம் இருந்தன. அருகில் சென்று படம் எடுத்தாலும் நம்மை அதிகம் கண்டுகொள்ளவில்லை. மதுரம் தேடி அலைவதும், மதுரம் அருந்துவதும் மட்டுமேயான வாழ்வு கொண்ட உயிர்.
நான் திகட்ட திகட்ட படங்கள் எடுத்துக்கொண்டு சற்று நேரம் மலைகளை பார்த்தபடி நின்றிருந்தேன். இரவு பயணத்திற்கு கிளம்ப வேண்டும் என்பதால் கீழிறங்கத் தொடங்கினேன். இறங்குவதற்கு வேறொரு சரிவுப் பாதை. இதுவரை கண்ணில் படவில்லையே என்று நினைத்திருந்த எருக்கு பாதையின் பக்கவாட்டில் நின்றது. ஈரோட்டில் நான் நடை செல்லும் பாதையில் வழியெங்கும் இம்மாதம் எருக்கு நிறைந்திருக்கும். எருக்கு குறித்து ஆசிரியர் ஜெ காலையில் ‘சித்தப்பால்’ என்றொரு கட்டுரை எழுதியிருந்தார். பித்தன் சூடிய மலர். ஊரில் நான் கண்டதெல்லாம் எருக்கின் பெருக்கு. மலர் வரிசைகள், மலர் கொத்துகள். ஆனால் இங்கு இந்த குன்றில் நான் கண்ட எருக்கு முற்றிலும் தனித்து மலைமுடி சூடி நின்றிருந்தது. பித்தென்றிருப்பதும் தனித்திருப்பதென்பதும் ஒன்றேதானா?
(தொடரும்)









Comments
Post a Comment