மானசா பதிப்பகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பெண் எழுத்து சார்ந்த அரங்கம் மற்றும் பதிப்பகத்தின் முதல் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ரஞ்சனியும் நானும் சென்னை சென்றிருந்தோம். அதிகாலை ஏற்காடு வண்டியில் சென்றிரங்கியவுடன் நண்பர் நவீன் வீட்டில் தஞ்சம். அவர் வீட்டின் உறுப்பினரான சிம்பா எங்களை வரவேற்றான். சிம்பா பீகல் இனத்தவன். இரண்டு வருடம் முன்பு கோவையில் அவனை சந்தித்ததை நினைவில் வைத்திருந்தான். நாங்கள் சென்றதும் ஒரு துணிப்பொம்மையை எடுத்து காலடியில் வைத்துக் கொண்டு யாருக்கும் தரமாட்டேன் என்றான். அதை எடுக்க முயன்று தோற்பதுபோல் நாம் விளையாட வேண்டுமாம்.
கிளம்பி விழா நடைபெறும் கவிக்கோ மன்றம் சென்றோம். பேனர் அமைக்கும் வேலை, சிற்றுண்டி ஏற்பாடு, விருந்தினர்களை அழைத்து வருவது போன்ற வேலைகளை பயணத்தின் போதே நவீன் போனில் ஒருங்கிணைத்துக் கொண்டே இருந்தார். டாக்டர் ஜெகன், விஜயபாரதி,சபரிஷ், சூரஜ் போன்ற நண்பர்கள் அவரவர் வேலைகளை எடுத்துக் கொண்டனர்.
விருந்தினர் பத்மா விஸ்வநாதனை அழைத்துவரச் சென்ற நவீனுடன் நானும் இணைந்து கொண்டேன். அந்த வகையில் அவருடன் கொஞ்சம் உரையாட முடிந்தது. அவர் பிரேசில் நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு ஒன்றை மொழியாக்கம் செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவரது அழகியல் பார்வை நிறுவப்பட்ட சில செவ்வியல் எழுத்தாளர்களை விடுத்து புதிதாக வேறு சிலரை கண்டடைவதாக இருந்துள்ளது. அதுவரை பிரேசில் இலக்கிய வரலாற்றில் அதிகம் பேசப்படாத சில எழுத்தாளர்களை அத்தொகுப்பின மூலம் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வர முடிந்ததைச் சொன்னார்.
விழா அரங்கிலும் அவரது உரையே எனக்கு நெருக்கமாக இருந்தது. பத்மா அவர்கள் கனடா நாட்டவராக இருந்தாலும் அவரின் பூர்வீகம் இந்தியாவில் அதுவும் சென்னையை சுற்றி இருந்துள்ளது. வழக்கமாக அவரது பாட்டி இந்தியாவில் உள்ள சமகால உறவினர்களைப் பற்றி சொல்லும் போது பத்மாவிற்கு எந்த ஆர்வமும் எழவில்லை. ஒருமுறை இரண்டு தலைமுறைக்கு முந்தைய பூர்வீக வரலாற்றிலிருந்து பாட்டி கதை சொல்லியிருக்கிறார். அந்த சமூக சூழல் மாந்தர்கள் எல்லாம் இவருக்கு ஆர்வத்தை உண்டாக்கவே அங்கிருந்து தொடங்கியது தான் அவரது முதல் நாவலுக்கான (‘The toss of a Lemon’) பயணம். இந்த நாவலுக்காகவும் சென்ற தலைமுறை உறவினர்களை சந்திக்கவும் இந்தியாவுக்கு பலமுறை பயணம் செய்திருக்கிறார். தற்போதைய பயணத்தில் கூட தமிழ் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாக வைத்திருக்கிறார்.
விழா முடிந்து திரும்பும் பயணத்தில் தமிழ் கற்று வரும் அனுபவத்தை சுசித்ராவிடம் சொல்லிக் கொண்டு வந்தார். குறிப்பாக A place of her own தொகுப்பில் இடம்பெற்ற ரம்யாவின் The Dust (தூசு) சிறுகதையை மூலத்திலேயே வாசித்து அதை ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு பயிற்சியடைய வேண்டும் என்றார். அதன் மூலம் மொழியைக் கற்பதுடன் தமிழ் சிறுகதை ஆங்கிலத்தில் எவ்வாறு பரிணாமம் கொள்கிறது என்ற சித்திரத்தையும் அவர் அடைய விரும்புவதாகச் சொன்னார். தூசு சிறுகதையுடன் பொதுவாகவே இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் ஒரு லட்சியத்தை / தேடலை நோக்கி மனிதர்கள் தொடர்ந்து உந்தப்பட்டு செயலாற்றுவது தன்னைக் கவரும் அம்சமாகக் குறிப்பிட்டார்.
விழா விருந்தினர்கள் பத்மா, கீதா, வைஷ்ணவ் ராய் மூவருமே இந்த லட்சியத்தை நோக்கிய செயால்லுற்றும் தன்மையே தங்களை இந்த விழா நோக்கி ஈர்த்ததாக வெவ்வேறு வகையில் குறிப்பிட்டனர் என நினைக்கிறேன். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தங்கள் துறைகளில் தொடர் செயல்பாட்டில் இருக்கும் முன்னோடி ஆளுமைகள் இளம் பெண்கள் துவங்கிய பதிப்பகத்தின் முதல் விழாவிற்கு வருகைதர வேறு எந்த காரணங்களும் இருக்க முடியாது. அதன் சாட்சியாக மானசா பதிப்பகத்தின் முதலிரு நூல்களின் வெளியீடும் அமைந்திருந்தன.
விழா முடித்து மதியத்திற்கு மேல் அடையாரில் இருந்த மானஸா பதிப்பகத்தின் அலுவலகத்திற்கு அருண்மொழி அம்மாவை பார்க்கச் சென்றோம். அம்மாவிற்கு சென்ற மாதம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்திருந்தது. நாங்கள் சென்ற போது தன்னால் அடுத்த வீதிவரை நடை செல்ல முடிந்ததை அஜியிடம் உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்தார். நண்பர்களுடன் அவரை சந்தித்தது நிறைவான அனுபவமாக இருந்தது.
மாலை பவித்ரா அவர்கள் மயிலாப்பூரில் ஒரு கர்நாடக இசைக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றார். ‘மதுரத்வனி’ என்ற அமைப்பின் சார்பில் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக சென்னையில் நடைபெற்று வரும் தியாகராஜ கீர்த்தனைகளின் நிகழ்ச்சி அது. எல்லாரும் தவறவே விடக்கூடாத முக்கியமான கலைஞர்கள் என்றார் பவித்ரா. எனக்கு ராகம் தாளம் எதுவும் புரியாவிட்டாலும் சென்னையின் நெரிசல், புழுதிக்கு இடையே தப்பித்து அவ்வாறு இசையின் முன் அமர்ந்திருப்பதே நல்ல அனுபவமாக இருந்தது.





Comments
Post a Comment