Skip to main content

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார்.

எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது.

இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியராக கருதப்படும் ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத்திரம். ஆனால் சௌந்தர்ய லஹரி மட்டுமின்றி அவர் இயற்றியதாக கருதப்படும் ஸ்தோத்திரப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம். (பார்க்க: உசாத்துணை)

பாஷ்யங்கள் (உரை நூல்கள்), தத்துவ விளக்க நூல்கள் அளவுக்கே ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்களையும் (துதிப் பாடல்கள்) இயற்றியுள்ளார்.

'பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம். அனைத்து இறைகளும் பிரம்ம ரூபங்களே, அவை அனைத்துமே ஒன்று' என்ற கருத்தின் மூலம் அறுவகை சமயங்களையும் (ஷண்மதங்கள்) ஒன்றாக்கியவர் ஆதிசங்கரர். ஆச்சரியமாக அவர் இயற்றிய பாடல்களே இன்றுவரை அதன் ஒவ்வொரு பிரிவிலும் புகழ்மிக்க பாடல்களாக நீடிக்கின்றன.

தேவியைக் (சாக்தம்) குறித்து அவர் இயற்றியுள்ள பாடல்கள்: சௌந்தர்ய லஹரி, ஆனந்த லஹரி - இது சௌந்தர்ய லஹரியின் பகுதியாக அமைந்தது, அன்னையின் ஆனந்த நிலையை மட்டுமே விவரிக்கும் பாடல்கள். இதுபோக கனகதாரா ஸ்தோத்திரம், அன்னபூர்ணா ஸ்தோத்திரம், பவானி அஷ்டகம், தேவி புஜங்கம், மீனாட்சி ஸ்தோத்திரம் போன்றவையும் அவர் இயற்றியதாகக் கருதப்படுகிறது.

சைவத்தை எடுத்துக் கொண்டால் சிவானந்த லஹரி, தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், சிவ புஜங்கம், லிங்காஷ்டகம், காலபைரவஷ்டகம், சிவ பஞ்சட்சர ஸ்தோத்திரம் ஆகிய பாடல்கள். வைணவ பிரிவில் பஜ கோவிந்தம், விஷ்ணு புஜங்கம், கிருஷ்ண அஷ்டகம். மேலும் கணேச பஞ்சரத்ணம் (காணாபத்தியம்), சுப்ரமண்ய புஜங்கம் (கௌமாரம்) ஆகிய துதிப்பாடல்களும் சங்கரரின் நூல் பட்டியலில் உள்ளன.

தற்போது பத்மநாபன் சார் பகிர்ந்திருந்த ஐகிரி நந்தினி பாடலுக்கு வருகிறேன். மகிஷாசுரமர்தினி ஸ்தோத்திரம் என்றழைக்கப்படும் இப்பாடல் மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும் “தேவி மகாத்மியத்தை” அடிப்படையாகக் கொண்டு ஆதிசங்கரர் இயற்றியது.

சமஸ்கிருதத்தில் அமைந்த இப்பாடலை தற்போது எழுத்தாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான நிரஞ்சன் பாரதி அவர்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப் பேரனான நிரஞ்சன் பாரதி, கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகனும் ஆவார்.

நான் கேட்டவரை ஐகிரி நந்தினி பாடல் இத்தனை நாளும் நாம் கேட்டு வளர்ந்த சமஸ்கிருத பாடலின் இசைத்தன்மை குலையாமல் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. வழக்கமாக தாளத்துக்காக எழுதப்படும் போது உருவாகும் செயற்கைத்தனம் எதுவும் தமிழ் வடிவத்தில் உருவாகவில்லை. மற்றபடி இசையும் சமஸ்கிருதமும் அறிந்தவற்களே இதுகுறித்து விரிவாக சொல்ல முடியும் என நினைக்கிறேன்.



முதலிரு பத்திகளை மட்டும் சமஸ்கிருத மூலத்தையும் அதற்கினையான தமிழ் வடிவத்தையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தேன்: 

சமஸ்கிருத மூலம்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தனுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே |

பகவதி ஹே ஸிதி கண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிகுருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஸைலஸுதே || 1 ||


ஸுரவர வர்ஷிணி துர்பர தர்ஷிணி துர்முக தர்ஷிணி துர்மதே

த்ரிபுர ஸரிணி ஸுரதில ரிணி ஸுரதில ரிணி ஸுரதிலதே |

அவநி ஸுதாவதி ஸாவதி ஸாவதி கல்பலதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஸைலஸுதே || 2 ||


நிரஞ்சன் பாரதி அவர்களின் தமிழ் வடிவம்:

ஐகிரி நந்தினி வைய மகிழ்வினி ஆடிடும் சேயினி நந்தி புகழ்

விந்திய மாமலை மேவிடும் மாதினி திருமிகுமாலினி அமரன் புகழ்

இறைவினி நீல மிடற்றன் குடும்பினி தரணி குடும்பினி நிறைமகளே

வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாகளே


வரமழை முகிலினி துருதர முடிவினி துர்முக முற்றினி மகிழினியே

மூவுலகாளினி சங்கரன் பாங்கினி தீவினை நாசினி கோஷினியே

தானவர் சீறினி திதிசுத தீயினி துர்மத காயினி ஆழினியே

வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாகளே


நான் ஒப்பிட்டு நோக்கியவரை அர்த்த மாறுபாடுகள் அதிகம் இல்லை, மூலத்தை ஒட்டியே செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் சமஸ்கிருத வேர் கொண்ட பல சொற்கள் தமிழ் வடிவிலும் இடம்பெற்றுள்ளன. இதை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். வைய மகிழ்வினி, நீல மிடற்றன், ஆழினி போன்ற பல பிரயோகங்கள் எனக்குப் பிடித்திருந்தன. எதற்காக இல்லாவிட்டாலும் சரணத்தின் இறுதியில் வரும் “பூங்குழலி மலைமாகளே” என்ற விளிக்காகவே இப்புதிய தமிழ் வடிவத்தைக் கேட்கலாம்.


உசாத்துணை:

https://www.advaita-vedanta.org/texts/Complete_Works_of_Adishankara.html


https://tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D

Comments

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

தினமும் எழுந்துவரும் ஜோதி

  அன்புள்ள ஆசிரியருக்கு, “இதுவே இந்தச் சொற்களை அல்லது இம்மாதிரி வாக்கியங்களை வேற யாராச்சும் சொல்லிருந்தா எளிமையா தேய்வழக்குன்னு ஒதுக்கித் தள்ளியிருப்போம். ஆனா பாட்டி மாதிரி ஓர் ஆளுமை சொல்லும்போது சொற்களுக்கு உண்மையிலேயே உயிர் வந்திடுது” என்றார் கிருஷ்ணன் சார். எனக்கும் பள்ளி நாட்களில் யோகா ஆசிரியர் மூலமாக அறிமுகமான அச்சொற்கள் அப்போது எந்த அதிர்வையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் பாட்டியின் உச்சரிப்பில் அவை ஓர் அசரீரி போல் ஒலிப்பதை எண்ணிக் கொண்டேன். பாட்டிக்கு அச்சொற்களை சொல்லும் போது மட்டும் சுத்தமாக குரல் நடுங்குவதில்லை. உச்சரிக்கும் பொழுது முழுமைக்கும் சித்தம் அச்சொற்களுக்கே என ஒப்படைத்து அழுத்தம் திருத்தமாக சொல்வார், “அருட்பெருஞ்ஞ்ஞ்.. ஜோதி தனிப்பெருங்ங்ங்.. கருணை” கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நூறு அகவை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நாங்கள் திண்டுக்கல் காந்திகிராம ஊழியரகத்தை அடைந்த பொழுது நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தன, பேராசிரியர் பழனிதுரை உரையாற்றிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. காலை முதலே நிகழ்ச்சிகள், ஆசியளித்தல்கள் என இருந்திருக்கும் என...

One more Bottle!

எங்களை விட உயரம் குறைவாக இருந்தாலோ என்னவோ அவள் கண்களுக்குத்தான் பறவைகள் அதிகம் தட்டுப்பட்டன. அகல்யா. உயரத்தின் காரணத்தால் பார்வைகோணம் மாறுபடுவது மட்டுமல்ல, பொதுவாகவே இப்பயணத்தில் பல பறவைகளை முதலில் அடையாளம் காட்டியது அவளே. அதுவும் குறிப்பாக பார்வைக்கு அதிகம் சிக்காத குயிலனங்களை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் (Cuckoo Spotter!). மொத்தம் மூன்று ஜோடிகள் விஜயபாரதி-கெளசல்யா, கோபி-சரண்யா, திரு-காயத்ரி ; மூன்று பேச்சிலர்கள் (பயணத்தின் போது மட்டும்) ஈஸ்வரமூர்த்தி, ஞானவேல், நான்; நிறைய குழந்தைகள் ஆதித்யா, அகல்யா, அன்பரசி, மகிழ், மஞ்சரி என அந்த சிறுமலை பயணத்திற்கான குழு அமைந்திருந்தது. நாங்கள் முதல் நாள் சனி காலை கொடைக்கானல் ஏறும் பாதையில் ஒரு திருப்பமெடுத்து அங்கு பெருமாள்மலை என்ற பகுதியை ஒட்டி நிலைகொண்டோம். பகல் முழுக்க அங்கு பறவை பார்த்து முடித்துவிட்டு அங்கிருந்து சிறுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மொத்தம் மூன்று கார்களில் எங்கள் கார் முன்னரே அடிவாரத்தை அடைந்திருந்தது. இருபுறமும் மாந்தோப்புகள் தென்பட தொடங்கியிருந்தன. இவ்வருடம் மழை மற்றும் காற்றின் ஒத்துழைப்பில் பூக்கள் அதிகம் உதிராத...

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன். ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம். தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'ந...

சிறுமலை பயணம் - படங்கள்

One more Bottle - சிறுமலை பயணக் குறிப்பு குட்டீஸ்:)   Velvet-fronted Nuthatch கருந்தலைச் சில்லை தெக்கத்தி மலையில் இறுதிக் காட்சியாக துடுப்புவாலன் Choco Boy விழுப்புண் பெற்ற blue tiger Common Blue bottle The transparent one வழுக்குனா விட்ருவனா.. Rock agama, On top of the world The spotter while spotting அழகு ஆண்களின் நடுவே.. மலர்ச் சூரியன் ஆயிரம் ஜன்னல் வீடு துணை Shining Silver வழி வழிகாட்டி கருப்பண்ணசாமி வழித்துணையுடன் வேலி தாண்டிய மலர் படங்கள்: அன்பரசி, வேலு, பாரி. (நிறைவு)