சென்னை பயணம் - மானசா பதிப்பக விழா
இரண்டாம் நாள் காலை விஜய்(பாரதி) அண்ணா தலைமையில் பறவை பார்த்தல். நாங்கள் ஈரோடு கோஷ்டி பூநாரைகள் பார்க்க வேண்டும் என்றதும் அதற்கேற்ப கேளம்பாக்கம் அருகே ஒரு இடத்தை முடிவு செய்திருந்தார். அவரின் கணிப்புத் தவறவில்லை. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பூநாரைகளைக் கண்டு களிப்புற்றோம். அவை வெயிலில் நிற்பது, ஒற்றைக்கால் தவம் செய்வது, நின்ற வாக்கிலேயே தூங்குவது என நீண்டநேரம் அவற்றுடன் இருந்தோம். கூடவே வலசை பருவத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் Curlew, Whimbrel, Redshank, Greenshank போன்ற பறவைகளையும் நெடுங்கால் உள்ளான் குஞ்சுகளையும் காண முடிந்தது. வலசை பருவம் முடிந்த பின்பும் ஜூலை மத்தியில் இவற்றையெல்லாம் காண முடிவது அரிது தான் என்றார் விஜயபாரதி. சில பறவைகள் long wintering என்ற பெயரில் இவ்வாறு தங்கிவிடுவது உண்டாம்.
பறவை பார்த்தல் முடித்து நவீன் வீட்டுக்குத் திரும்பவே மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. சென்னை நகருக்குள் பயணமே பெரும் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. எங்களுக்கு மிச்சம் இருந்தது ஒரேயொரு ஞாயிறு மாலை. தரமணி இரயில் நிலையத்தில் Fort station என்ற வாசகம் கண்ணில் பட வெள்ளையானையின் நினைவுகள் மனதில் எழுந்தன. வெள்ளையனை எய்டன் சென்ற பாதையில் சிறிய பயணம் செய்யலாம் என்று அங்கிருந்தே கிளம்பினோம். ஜார்ஜ் கோட்டைக்குள் அமைந்த அருங்காட்சியகம் ஒன்றே பொதுமக்கள் கோட்டைக்குள் நுழைவதற்கான எளிய வழி.
கோட்டை நிலையத்தில் இறங்கியதும் ராபிடோ செயலியை நம்பாமல் நேரடியாக ஆட்டோ பிடித்தோம். கண்முன்னால் ஒரு மனிதர் நிற்கிறார் அவரை நம்பாமல் ஒரு செயலியை நம்ப வேண்டுமா என நினைத்தேன். அது நான் செய்த தவறு. நாங்கள் அமர்ந்ததும் இரண்டு கிமீ தொலைவுக்கு இருநூறு ரூபாய் கேட்டார். எங்கோ சுற்றிக்கொண்டு போக வேண்டும் என கதை விட்டார். நேரம் குறைவாக இருந்ததால் எங்களுக்கு வாதம் செய்ய பொழுதில்லை. சென்னைவாசிகள் ஏன் கண்முன்னால் ஆட்டோ நின்றாலும் அதே ஆட்டோவை செயலி வழியாகப் பிடிக்கிறார்கள் என்பது புரிந்தது. செயலி வந்த பிறகு சென்னையில் ஆட்டோக்கள் அதிகம் பயன்படுத்தப் படுவதையும் இம்முறை காண முடிந்தது.
அருங்காட்சியகம் என்றதும் ஆட்டோக்காரர் கிண்டி செல்கிறேன் என்றார். அய்யா கோட்டைக்குள் ஒன்று இருக்கிறது எங்களை அங்குவிட்டால் போதும் என்று சொன்னால் அங்கெல்லாம் பப்ளிக்கை விடவே மாட்டார்கள் என அடம்பிடித்தார். செல்லும் வழியில் ஏதோதோ மலிவான பொருட்காட்சிகளைக் காட்டி கோட்டைக்குள் செல்வதை விட அங்கு செல்வது நன்றாக இருக்குமே என்றார். ஒருவழியாக அவரிடமிருந்து தப்பி நான்கு மணிக்கெல்லாம் பல கட்ட சோதனைகளுக்குத் தாண்டி கோட்டைக்குள் நுழைந்துவிட்டோம்.
தரைத் தளத்தில் விலிங்டன் துரையின் வெண்கல சிற்பம் அதிகாரத்துக்கான உடையில் மிடுக்குடன் நின்றது. முதல் தளத்தில் பிரிட்டிஷ் தலைமை வகித்த வெவ்வேறு கவர்னர்கள், விக்டோரியா அரசி போன்றவர்களின் எண்ணெய் ஓவியங்கள் இருந்தன. எனக்கு அவற்றைவிட இன்னொரு அறையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷார் வரைந்த தமிழக நிலக்காட்சிகளின் கோட்டோவியங்கள் முக்கியமாகப் பட்டன. பிரிட்டிஷ் நிர்வாகத்திலிருந்த பலரும் பொழுது போக்கிற்காகவும் தாங்கள் வாழும் நிலத்தை தங்கள் உறவினர்களுக்கு விவரிக்கவும், ஆவணப்படுத்தும் பொருட்டும் கோட்டோவியங்கள் வரைவதை தொடர்ந்து செய்துள்ளனர். நிலக்காட்சிகளை, நகரத்து வீதிகளை, கோயில்களை என கண்ணில் படுவதையெல்லாம் வரைந்து வைத்திருக்கிறார்கள். அன்றைய தஞ்சை பெரிய கோயிலின் ஓவியம் ஒன்று இருந்தது, அதில் கோயில் வளாகத்திற்குள்ளேயே ஏகப்பட்ட மரங்கள் நின்றன.
வெள்ளையானையின் பிரதான பாத்திரமான எய்டன் ஒருமுறை ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கோரிக்கைகளுடன் கோட்டையின் மைய அலுவலகத்தில் கவர்னரை சந்திக்க காத்திருப்பார். எனக்கு கோட்டை வளாகத்தினுள் இருக்கும் வரையிலும் குறைந்தபட்ச நீதிக்கான தவிப்புடன் எய்டன் காத்திருந்த அக்காட்சியே மனதில் தோன்றியபடி இருந்தது. கோட்டையை விட்டு வெளிவந்ததும் எய்டன் நாள்தோறும் அதிகாலையில் குதிரையில் சென்றிருக்கக் கூடிய சாலையில் பயணித்து ஐஸ் ஹவுஸ் சென்றோம். தற்போது அக்கடிடிடம் விவேகானந்தர் இல்லமாக உள்ளது.
பொதுமக்களுக்கு விவேகானந்தரை அறிமுகம் செய்யும் வகையில் காட்சிப்படங்கள், திரையரங்க அமைப்பில் முப்பரிமாண காணொளிகள் என ஏதோதோ செய்திருந்தார்கள். விவேகானந்தர் நியூ யார்க்கில் இருந்த சமயம் அங்கு அவர் தன் மாணவர்களுக்கு நதிக்கரையில் அமைந்த ஓர் ஓக் மரத்தினடியில் அமர்ந்து பாடம் எடுத்திருக்கிறார். அம்மரத்தின் எச்சங்களை சேகரித்து ஓரிடத்தில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
வெள்ளையனையின் நினைவுகளில் இருந்ததால் என்னால் இந்த விவேகானந்தர் இல்லத்துக்குள் ஒன்ற முடியவில்லை. நாம் இப்போது காண்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிலிகிரி ஐயங்காரால் மறுநிர்மானம் செய்யப்பட்ட கட்டிடத்தையே. பழைய ஐஸ் ஹவுஸின் தடயங்களோ காத்தவராயன் நிகழ்த்திய இந்தியாவின் முதல் தொழிற்சங்க போராட்டத்தின் தடயங்களோ எதுவுமே அங்கு இல்லை. ஒருவகையில் இலக்கிய வாசகனுக்கு அவை தேவையுமில்லை. அவற்றை மேலும் துல்லியமாக அகத்தில் நிகழும் கதைக்களத்திலேயே அவனால் கண்டுவிடமுடியும். எனினும் கோட்டை முதல் ஐஸ் ஹவுஸ் வரையிலான இந்த குறும்பயணத்தில் அப்படியான காலப்பயணத்தை அகத்திலும் புறத்திலும் நிகழ்த்தமுடிந்ததை எண்ணி நிறைவுற்றேன்.
(நிறைவு)






Comments
Post a Comment