வாரவாரம் ஞாயிறு மாலை நடைபெறும் சிறுகதைக்கூடல் இந்த ஞாயிறுடன் தன் 49 ஆவது கூடுகையை நிறைவு செய்துள்ளது. பாண்டிச்சேரியை சேர்ந்த நாகராஜன் சார் இக்கூடலை தொடர்ந்து உற்சாகத்துடன் ஒருங்கிணைத்த நடத்தி வருகிறார். தொடர்ந்து எழுத்தாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து இதில் பங்கெடுக்க செய்கிறார்.
நான் இதுவரை சில வாரங்கள் கலந்து கொண்டிருக்கிறேன். என் பார்வையில் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் இயல்பாகவே கதையை முழுமையாக வாசித்தவர்களாகவும் பெரும்பாலும் கதையின் வாசிப்பு சாத்தியத்தை நோக்கி மட்டும் பேசுபவர்களாகவும் உள்ளனர். எனவே கூட்டு வாசிப்பின் நிறைவான அனுபவங்கள் அமைகின்றன. சிறுகதைக்கூடல் இந்த ஆகஸ்ட் மாதத்தை தொன்மக் கதைகளின் வாரமாகக் கொண்டாடியது. அதில் இந்த வாரத்தின் கதையாக மணிபல்லவம் விவாதிக்கப்பட்டது. கூடலுக்கு அழைக்கப்பட்டிருந்த நான் என் வாசிப்பை பகிர்ந்து கொண்டேன். அதன் எழுத்து வடிவை இங்கு பகிர்கிறேன்
*
மணிபல்லவம் ஒரு தீவிரமான பயணத்தின் கதையும் கூட என்பதால் என் பயண நினைவு ஒன்றிலிருந்து இந்த உரையாடலை தொடங்குகிறேன். சென்ற ஆண்டு ஆந்திரா பயணத்தின் போது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய குகைத்தொடர்களில் ஒன்றான பெலம் (Belum) குகைகளுக்குச் சென்றிருந்தேன். பெலம் குகை அமைந்த பகுதி சுண்ணாம்புப் பாறைகளால் ஆனது. பல்லாண்டுகளாக அங்கே அருகில் ஓடிய சித்ராவதி என்ற ஆற்றின் நிலத்தடி நீரோட்டத்தின் காரணமாகவும் புவியியல் நிகழ்வுகளாலும் இயற்கையாக உண்டான குகைவெளி. இப்போதும் பாதாள கங்கை என்று அழைக்கப்படும் அந்த நீரோட்டத்தின் ஊற்று ஒன்று குகைப் பகுதிக்குள் உள்ளது. நிலத்திற்கு அடியில் ஒன்றரை கிலோமீட்டர் அளவுக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர பாதை அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மையமாகச் செல்லும் குகைப்பாதையில் மட்டும் பாதிவரை சென்று திரும்பிவிடுவார்கள்.
நான் குகைப்பாதையின் இறுதிவரை சென்றதோடு கிளைபிரிந்து சென்ற ஒவ்வொரு பாதையிலும் சென்று பார்த்தேன். ஒவ்வொரு பாதையிலும் பாறைகளின் விந்தையான வடிவ சாத்தியங்கள். இந்த கிளைப்பாதைகளில் வேறு பயணிகள் அதிகம் இல்லை. இருட்டும் புழுக்கமும் அதிகரித்தபடியே வந்தது. மூச்சுவிட சிரமமாக இருக்கிறதோ? வழிகாட்டி குறிகளும் தெலுங்கில் இருந்ததால் அம்புக்குறிகள் வெளியேறச் சொல்கிறதா அல்லது மேலும் உள்நோக்கிக் காட்டுகிறதா என்பது புரியாமலே சென்றுகொண்டிருந்தேன். மண்ணுக்கு அடியில் தொலைந்துபோய்விட்ட மெல்லிய அச்சவுணர்வு அவ்வப்போது வந்து சென்றது. குகைக்குள் செல்லச் செல்ல சுவாசக்காற்று குறைவாக இருக்கும் என்பதால் மேலே தரைப்பரப்பிலிருந்து துளைகள் இட்டு மோட்டார்கள் வழியே குகைக்குள் காற்றைப் பொழியும் வகையில் ஆங்காங்கே சுவாசத் துளைகள் அமைத்திருந்தார்கள். இவை ஒருவகையில் நம்பிக்கையூட்டினாலும் எந்ந நேரத்திலும் சுவாசக் காற்று தடைபடலாம் என்ற திகிலையும் கூட்டிக் கொண்டு இருந்தது.
இறுதியாக ஒரு கிளைப்பாதையின் முடிவில் விந்தையான ஓர் இடத்தை அடைந்திருந்தேன். அங்கு சுவாசத் துளைகளும் விளக்குகளும் இருந்ததால் நிதானித்தேன். வழக்கம்போல தெலுங்கில் பெயர்ப் பலகை. தலைக்கு மேல் அண்ணாந்து பார்த்தால் ஆயிரக்கணக்கான கூர் அம்புமுனைகள் நம்மை நோக்கியது போன்ற பாறைவடிவங்கள். சில அம்பு முனைகளின் விளிம்பில் அப்போதும் நீர்ச்சொட்டுகள் ததும்பி நின்றன. அம்புமுனைகள் செறிந்த கல்மரத்தின் உருவம் ஒன்று துலங்கி வந்தது. களைப்பாக இருந்ததால் கல்மரத்தின் அடியிலேயே இளைப்பாறினேன். சிறிது நேரத்தில் ஆந்திர இளைஞர் குழு ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. அவர்களிடம் பெயர் பலகையில் என்ன எழுதியிருக்கிறது எனக் கேட்டேன். ‘கோடிலிங்கலு’ என்று சொல்லிவிட்டு பாறை முனைகள் ஒவ்வொன்றையும் ஒரு லிங்கமாக காணும் அனுபவத்தை விளக்கினார்கள். சட்டென என்னைச் சுற்றியும் ஆயிரக்கணக்கான பார்வைகளை உணர்ந்தேன். நம்மால் புரிந்துகொள்ள முடியாத நம்மைவிட பெரிய ஒன்றின் பார்வை. ஆயிரம் இறைகளின் கூர்முனைப் பார்வைகள். அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் உடனே கிளம்பி வெளியேறிவிட்டேன். வெளியேறியதும் அந்த அனுபவம் முடிந்துவிட்டதன் ஏமாற்ற உணர்வு. ஒருவேளை என் வாழ்வில் மீண்டும் அங்கே நான் வரவேப் போவதில்லை. ஆனால் உள்ளே செல்லும் துணிவும் வரவில்லை. ஏன் அந்த கிளைப்பாதைகளில் தனித்துச் சென்றேன்? பிறகு ஏன் உடனே வெளியேறினேன்?
நம் நினைவு மனத்தால் புரிந்துகொள்ள முடியாத நம்மைவிட பெரிய ஒன்றின் முன், நம் ஆழ்மனம் மட்டுமே தொடர்புகொள்ளும் ஒன்றின் முன் மனித மனம் அடையும் விலகிச்செல்லவே முடியாத ஈர்ப்பும், கூடவே எழும் அச்சமும் விலக்கமும் குறித்த கேள்விகள் என்னுள் எழுந்தன. ஒருவகையில் அந்த உணர்வுநிலைகளை பேசும் கதையாக மணிபல்லவத்தை பார்க்கலாம்.
எழுதப்படும் அனைத்து கதைகளுமே ஏற்கனவே இங்கிருக்கும் கதைகளுடைய வலைப்பின்னலில் ஏதேனும் வகையில் தொடர்ச்சி கொண்டிருக்கும். குறிப்பாக தொன்மக் கதைகளுக்கு அத்தொடர்ச்சி இயல்பாகவே உண்டு. ஒரு தொன்மகதை அத்தொண்மம் தொடர்பாக அப்பண்பாட்டில் உருவாகி வந்துள்ள அனைத்தையும் சேர்த்தே கொண்டு வருகிறது. நிச்சயமாக மணிபல்லவம் கதை உடனடியாக நினைவில் கொண்டு வருவது புதுமைப்பித்தனின் கபாடபுரம். அதற்கு முன்பு மணிமேகலை சிலப்பதிகாரம் முதலே இடம்பெறும் மணிபல்லவ தொன்மம் இக்கதையிலேயே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவ்வகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கிருக்கும் கடல் கொண்ட தொல்நிலம் குறித்த தமிழ் கனவை பேசும் கதைகளில் ஒன்று மணிபல்லவம்.
புதுமைப்பித்தனின் கபாடபுரம் அதிகமும் மாயத்தன்மை வாய்ந்தது. நம் ஆழ்மனதின் கனவுவெளி ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டிருப்பதான உணர்வு கதை முழுவதும் இருக்கும். அந்தவகையில் வெற்றிகரமான கதையும் கூட. மாறாக மணிபல்லவம் வலுவான தர்க்க அமைப்பை அடித்தளமாகக் கொண்டுள்ளது. ஆழ்கடலின் கொந்தளிப்பில் தொலைந்து போகும் அனுபவம் ஒன்றை அனைத்துக் கோணங்களிலும் தர்க்க ரீதியாக விளக்கிய பின்பும் எஞ்சியிருப்பதை நோக்கி கதை சுட்டுகிறது. அனைத்து நல்ல கதைகளையும் போல அந்த எஞ்சியிருக்கும் பகுதியை வாசகன் தன் கற்பனையின் மூலம் நிரப்பிக்கொள்வதை எதிர்பார்க்கிறது.
ஆழ்கடல் புயலில் சிக்கி கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக கடலுக்குள் இருந்துவிட்டு உயிர்மீண்டு வந்த அந்தோணிக்கு உண்மையில் அகத்திலும் புறத்திலும் என்ன நிகழ்ந்தது என்பது கதையில் இயல்பாக எழுந்துவரும் கேள்வி. இரண்டுக்கும் தர்க்கரீதியான விளக்கங்கள் கதையிலேயே சொல்லப்படுகிறது. புவியியல் ரீதியாக அப்படியொரு இடம் இருப்பதற்கும் கடலின் நீரோட்டத்தில் அரிதாக மட்டும் வெளிப்படும் சாத்தியங்களும் விளக்கப்பட்டுள்ளன. உளவியல் ரீதியாகவும் பசி மயக்கத்தில் கடலின் கொந்தளிப்பு நடுவே அவன் ஆழ்மனம் உருவாக்கிக் கொண்ட கனவுவெளியாக அது இருக்கலாம் என்பதும் சொல்லப்படுகிறது. ஆனால் அது கனவா நனவா என்பதோ அத்தீவு எங்குள்ளது என்பதோ இங்கு பிரதான பேசுபொருள் அல்ல. அதன் சாத்தியங்களை கதையே சொல்லிவிடுகிறது. மாறாக கதையில் ஓர் ஊகமாக மட்டும் உணர்த்தப்படும் அந்தக் கனவு வெளியில் அந்தோணி கண்டது என்ன, அடைந்தது என்ன என்பதையே நாம் பரிசீலிக்க வேண்டும்.
என்னளவில் ஆழ்கடலின் கனவுவெளியில் அந்தோணி பார்த்த விஷயங்களில் ஒற்றைக்காலடித் தடம் ஒரு முக்கியமான திறவுகோல். அது அங்கு வாழ்ந்த மனிதர்களின் கூட்டு நனவிலியில் எஞ்சும் தடமும் கூட அல்லவா? தெய்வ உருவம் எதையாவது பார்த்தாயா என ஃபாதர் கேட்கும் போது அந்தோணி அந்த ஒற்றைக் காலடியைச் சொல்கிறான். ஒற்றைக்காலடித் தடத்தை இறை வடிவமாக வழிபடும் மரபு தொடக்கக் கால பெளத்தத்தில் இருந்து வருவது. பூம்புகார் நாகப்பட்டினம் பகுதிகளில் இத்தகைய பெளத்த அடையாளங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. ஒற்றைக்காலடி என்பது புத்தர் வந்து சென்ற இடத்தை குறிப்பது என்றும் ஞானத்தை நோக்கிய முதல் அடியை குறிப்பது என்றும் தவம் புரியும் புத்தரை குறிப்பது என்றும் பெளத்த விளக்கங்கள் உள்ளன. ஏதோவோர் வகையில் அது அந்தோணி செல்லவிருக்கும் பாதையின் முதல் காலடியும் கூட.
இந்தக் கோணத்தில் கதையில் வரும் சிலப்பதிகாரப் பாடலை பார்த்தால் அந்தோணி அடைந்தது என்ன என ஓரளவு யூகிக்க முடியும். “ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க, அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி”. ‘அடியில்’ தன் அளவை அரசருக்கு உணர்த்தியது புத்த ஞானமாக இருக்கலாம், அது ஊழிதோறும் உலகைக் காக்க வரும் ஞானமும் கூட என்று இங்கு பொருள் வருகிறது.
மேலும் அந்தோணி குறிப்பிடும் பலவும் பெளத்த குறியீடுகளுடன் தொடர்புடைய. அன்னமும் மயிலும் அதிகளவில் பார்த்ததாகக் கூறுகிறான். அவை பெளத்த ஓவியங்களில் தொடர்ந்து வருபவை. அடுத்ததாக தாமரை மலர். இடதுகையில் தாமரை மலரை எந்திய பத்மபாணி போதிசத்துவர் பெளத்தத்தின் முக்கியமான இறை உருவகங்களில் ஒன்று. மணிபல்லவம் எனும் தீவு மணிமேகலையில் நேரடியாகவே பெளத்த துறவுக்கான இடமாகவும் ஞானத்திற்கான இடமாகவும் வருகிறது. ஆபுத்திரனும் மணிமேகலையும் அங்கு சென்று முற்பிறவி நினைவுகளையும் பிறவி நோக்கத்தையும் கண்டடைகிறார்கள். எனில் அங்கு சென்றவர்கள் அடைவது ஒருவகை முக்கால தரிசனம் தான். அல்லது அவர்கள் அடைவது காலமற்ற வெளியை. அது ஞானத்தின் வெளி. ஞானம் அளிக்கும் இன்பத்தின் வெளி. அந்த வெளியில் கணநேரமேனும் வாழ்ந்தவனுக்கு உலகியல் வாழ்வில் அடையக்கூடிய பெரிய இன்பங்கள் ஏதும் இல்லை என்பதையே அந்தோணி காட்டுகிறான்.
அந்தோணி அந்தத் தீவில் தந்தையை பார்த்ததாக சொல்கிறான். அவன் அடையப் போவதும் ஃபாதர் தேடிச் செல்வதும் அந்தக் கால தரிசனத்தை நோக்கிய பயணம் என்றே தோன்றுகிறது. வடக்கே திபெத்திய பெளத்தம் கண்டடைந்த லட்சிய கனவு வெளி ஷம்பாலா எனில் ஒருவகையில் தெற்கே இலங்கை-தென்னிந்திய பெளத்தம் கண்டடைந்த லட்சிய கனவு வெளி இந்த மணிபல்லவம். ஷம்பாலா பனிமுடி சிகரங்களின் உயரத்தில் இருக்க, மணிபல்லவம் கடலின் புதையுண்ட ஆழத்தில் இருக்கிறது.
இறுதியாக அந்தோணி கண்ட முழுநிலவின் தரிசனம். முழுநிலவு மானுடத்திற்கு எப்போதுமே ஞானத்தின் குறியீடாக இருந்து வந்துள்ளது. பெளத்தத்திலும் அவ்வாறே. கொந்தளிக்கும் உலகியல் கடலின் அலைகளுக்கு நடுவே ஞானத்தை நோக்கித் திறக்கும் அந்த பொன்னிற பாதையின் விளிம்பில் நிற்கையில் எது மனிதர்களை தயங்கச் செய்கிறது? எந்த மாயக்கணம் அதைக் கடக்கச் செய்கிறது? அல்லது எவரெல்லாம் அந்தப் பாதையை கடக்கக் கூடும்?
கதையில் வரும் நான்கு மாந்தர்கள் இந்த ஞானத்தை நோக்கிய பாதையில் வெவ்வேறு படிநிலைகளில் இருப்பதாகக் காண்கிறேன். முதலாவது ஆன்றப்பன். மீனவர் வாழ்வின் பிரதிநிதியாக வருகிறான். இவனுக்கு பொதுவான உலக ஞானமும் எதையும் திறம்பட புரியும் சூட்டிகையும் உண்டு. ஃபாதருடன் தேடிச் செல்கையில் புதிய ஒன்றை கண்டடையும் ஆர்வமும் தெரிகிறது. ஆனால் உலகியல் இடராக வங்கித் தவணைகள் நினைவுக்கு வந்ததும் அங்கேயே நின்றுவிடுகிறான். மெய்யறிவு நோக்கிய பாதையில் நம்மில் பெரும்பாலானோர் ஆன்றப்பனைப் போல ஏதோவோர் புள்ளியில் நின்றுவிடக்கூடியவர்களே. இரண்டாவது ஃபாதர். அவர் அந்தோணியின் வழியாக தன் தேடலை கண்டுகொண்டவர். அவரே விலக நினைத்தாலும் அந்தப் பாதையின் தவிர்க்க முடியாமையால் ஈர்ப்பால் மீண்டும் மீண்டும் வந்தபடி இருக்கிறார். அவர் இதுவரை அடையாவிட்டாலும் ஏற்கனவே அடைந்துவிட்டவரை இறுதியில் காண்கிறார்.
மூன்றாவதாக அந்தோணி அந்த ஞானத்தின் நிலவை ஒருமுறையேனும் தரிசித்து விட்டவன். அதிலிருந்து விலக முடியாதவன். அங்கு சென்று அமைவதுவரை அவனுக்கு வேறு வழியில்லை. அவனே சொல்வதுபோல அவன் சென்றது ஒருவழிப்பாதை. இவர்கள் மூவரையும் கடந்த ஒருவர் கதையில் இருக்கிறார். அது கதையின் இறுதி வரியில் மட்டும் வெளிப்படும் பனாசிங். அந்தோணிக்கு முன்பே அந்த ஞானத்தின் பொன்னொளிர் பாதையில் பயணித்து மறுபக்கத்தை அடைந்துவிட்டவரா பனாசிங்? அவர் பிகாரி என்பதைத் தவிர கதையில் பெரியளவில் குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் அது மட்டுமே கூட போதுமே. அது புத்தர் ஞானத்தை அடைந்த நிலமல்லவா.
31.08.2026
Comments
Post a Comment