அப்படியொரு மரத்தின் பெயரை இத்தனை நாளும் கவனிக்காமல் இருந்து விட்டோமே என எனக்கே வெட்கமாக இருந்தது. இத்தனைக்கும் வீட்டை விட்டு இறங்கினாலே முதலில் தென்படுவது அந்த மரமாகத்தான் இருக்கும். தள்ளுவண்டிக்கார அக்கா சொல்லும் வரையில் அதை ஒரு ‘மரமாக’ பார்க்க வேண்டும் என்ற பார்வைதான் இதுவரையில் தோன்றாமல் போய்விட்டது.
மதியம் பனிரெண்டு மணி வெயிலில் இறங்கி சென்று இங்கு ஈரோடு பகுதியில் வார வாரம் புதிதாக திறக்கப்படும் பேக்கரிகள் ஏதேனும் ஒன்றில் அரைச்சக்கரை இட்ட சுமாரான கருப்பு டீயை குடித்துவிட்டு வருவது என்ன ரசனை என்று எனக்கேத் தெரியவில்லை. ஆனால் அதை தினமும் செய்து வருகிறேன். உண்மையில் டீ முடித்தக் கையுடன் வீட்டுக்கு வரும் வழியில் உள்ள தள்ளுவண்டிக்கடையை பார்த்ததும் தான் மனம் எதை எதிர்பார்த்தது என எனக்கேத் தெரிய வரும். கோடையின் துவக்கத்தில் பலாச்சுளையில் ஆரம்பமான வாடிக்கை. கால் கிலோ ஐம்பதில் தொடங்கி அரை கிலோவை ஐம்பதுக்கு வாங்கும் அளவுக்கு வண்டிக்கார அக்காவின் தொடர் வாடிக்கையாளனாக மாறியிருந்தேன். பலாப்பருவம் முடிவதற்கு முன்பே இடையிடையே நுங்கு, அதைத் தொடர்ந்து மாம்பழம், தற்போது கொய்யா நவா என வியாபாரம் தொடர்கிறது. பேச்சு வாக்கில் அவரது வீடு எங்கே எனக் கேட்கப்போய் அப்போதுதான் அம்மரத்தை குறிப்பிட்டார், “உங்க வீட்டுக்கு அடுத்த வீதி தான் தம்பி. முச்சந்தில ஒரு கரண்ட் மரம் இருக்குல்ல, அதுக்கு அடுத்த வீடு..” கரண்ட் மரம் என்று எதைச் சொல்கிறார் என பிடிபடாமல் நான் விழித்து நிற்க, “அதாம்பா, பெரிய ட்ராண்ஸ் மரம் இருக்குல்ல.. அதுக்கு பக்கத்துல ஓட்டு வீடு” என்றார்.
சட்டென என் உலகில் டிராண்ஸ்பார்மர்களும் தந்திக் கம்பங்களும் இயற்கையின் பகுதியாகவே ஆகிவிட்டன. மனிதன் அதிகளவில் நட்டு வளர்த்த மரம் என்று பின்னாளில் வரலாற்றில் எழுதுவார்களோ? சாதரணமாக அரசு அதிகாரிகள் மரம் நட்டு வளர்த்துவிட்டதாக கணக்குக் காட்டுவது இவற்றையும் சேர்த்து தானோ?
இயல்பாகவே பெரும்பாலான தாவரங்களின், பறவைகளின் பெயர்களை கவனித்துப் பார்த்தால் அதனூடாக தொல் மனம் ஒன்றின் பார்வையில் இங்குள்ள இயற்கை வெளியை பார்க்கும் அனுபவத்தை அடையலாம். பலசமயம் குழந்தைகள் தானாக இடும் பெயர்களும் அந்த ஆதி பெயருக்கு நெருக்கமாக வந்துவிடுவதை கண்டிருக்கிறேன். பல்லுபோன பாட்டிகளும் இம்மாதிரி புதிய பெயர்களை போடுவதுண்டு. ஆனால் பாட்டிகள் பொதுவாக புதிய பெயராக இருந்தாலும் சங்ககாலம் முதலே புழக்கத்தில் இருக்கும் பெயர் என்பதைப் போல தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதால் அது பரவலாக வழங்கிவரும் பெயரா அல்லது பாட்டிகளின் தனி வட்டாரத்தில் புழங்கும் பெயரா என பிரித்தறிய முடியாது. ஆனால் கற்பனையும் குழந்தைத்தனமும் கொண்ட அப்படியொரு நல்ல பெயர் மனதில் அமைந்துவிட்டால் அதன்பிறகு அப்பொருளைக் குறித்த கண்ணோட்டமே முழுவதுமாக மாறிவிடுகிறது.
திரும்பும் வழியில் அடர்த்தியான குடியிருப்பு பகுதிகளிலும் கூட வீதிக்கு ஒன்றோ இரண்டோ கரண்ட் மரங்கள் கண்ணில் பட்டன. இனி மரங்கள் இல்லாத வீதி என எதுவுமில்லை. கிராமம் நகரம் என பாகுபாடில்லாமல் எங்கும் நிறைந்திருக்கும் மரம். கானகத்தில் மரங்கள் வேர் பின்னல்கள் வழியே இணைந்திருப்பதைப் போல மின்கம்பிகளின் ஊடு பாவுகள் வழியாக ஊர்களையும் தாண்டி நீளும் ஒரு மாபெரும் வலைப்பின்னல். காற்றுவெளியில் வேர்களை பரப்பும் மரம். புதிதாக எழுந்து வரும் ஒவ்வொரு கட்டிடமும் தன் முதல் தொடுகையை அடைவது இந்த மரத்துடன்தான். வீட்டுக்குள் ஒளியையும் காற்றையும் நீரையும் கொண்டு வருவது.
கரண்ட் மரங்களை மரமாக ஏற்றுக்கொள்வதில் பறவைகளுக்குதான் எந்தத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. எந்தப் பொழுதில் சாலையில் சென்றாலும் மின்கம்பி கிளைகள்தோறும் மணிப்புறாக்கள், காக்கைகள், கரிச்சான்கள், சிட்டுகள், சில்லைகள், சிலம்பன்கள். கனியோ, நிழலோ தராத இம்மரத்தின் மீதுதான் பறவைகளுக்கு ஏனோ இனம்புரியாத ஈர்ப்பு. அதிகமும் இளைப்பாறும் பொருட்டே அமரும் இடமென்பதால் கரண்ட் மரங்களை மனதிற்குகந்த இடங்களாக நினைக்கின்றனவா? ஒரு தந்திக் கம்பத்தில் மதிய வேளையிலும் செறிவாக அமர்ந்திருந்த சிட்டுக் குருவிகளைப் பார்த்தேன். இனி என் அகராதியில் அதிக பறவைகள் அமரும் மரம் ஆலமோ அத்தியோ அல்ல, அது கரண்ட் மரங்கள்தான்.
நம்மூர் தூக்கணாங்குருவிகளை ஒத்த தென்னாபிரிக்காவை சேர்ந்த சமூக நெசவாளி (Sociable Weaver) பறவைகளை குறித்து சமீபத்தில் இணையத்தில் உலாவிய ஒரு படம் கண்ணில் பட்டது. இப்பறவைகள் மிகப்பெரும் அளவில் கூடுகளை அமைத்து ஒரு காலனியாக வாழ்வதற்கு பெயர் போனவை. குட்டைத் தாவரங்கள் மட்டுமே அதிகம் காணப்படும் வரண்ட வெளியில் மின் கம்பங்களின் மீது பிரமாதமான கூடுகளை அமைத்துள்ளன. அப்பகுதியில் ஓரளவு உயரம் கொண்ட ஒரே மரமாக அவை இருக்க வேண்டும். அல்லது பிற மரங்களைக் காட்டிலும் பறவைகளுக்கு இவை பாதுகாப்பானதாக இருக்கலாம். மொத்தத்தில் மாபெரும் மலர் போன்ற பறவைக் கூட்டை தாங்கி நிற்கும் இந்த மின்கம்பங்களை காண்கையில் ஆம் அழகிய மரமும் கூட என மனதிற்குள் சொல்லிக் கொளிகிறேன்.


மின்சாரத் தாக்கல் போல ஒரு திறப்பை உணர்ந்த ஒரு கணம்... கரண்ட் மரம். சிறு வயதில் கேட்டது என்றாலும் அதன் வீச்சு இப்போதுதான் புரிந்தது... நன்றி பாரி.
ReplyDeleteஎனக்கும் அதே அனுபவம். நன்றிண்ணா🙌🫡
Delete