Skip to main content

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

 இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று. 

வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம்.

அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவாரியை ரத்து செய்துவிட்டார்கள். அதுவரை பெருமழைக்கான தடயங்கள் இல்லாமல் இதமான வானிலையே நிலவியது. கேரள பகுதிக்குள் அமைதி பள்ளத்தாக்கிற்கு செல்லும் சாலை பவானி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கும். எனவே அப்பாதை நெடுகவும் பவானி ஆற்றை அருகில் சென்று பார்க்க நல்ல சில காட்சிமுனைகள் உண்டு.

ஜீப் சவாரி ரத்தானதால் பவானியுடன் களிப்பதாக முடிவு செய்தோம். இதுவரை பவானி கூடுதுறையிலும் பவானிசாகர் அணை அருகேயும் தமிழ்நாட்டில் நான் பார்த்த பவானி வேறு. இங்கு அமைதி பள்ளத்தாக்கின் அருகே ஆடி மாதத்தின் புது வெள்ளம் பொங்கி வரும் பவானி வேறொருத்தியாக இருந்தாள். அப்போதுதான் மலையிறங்கி வருவதால் ஊர்புறத்தின் மாசுகள் எதுவும் அண்டாமல் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். இருபுறமும் கரைநிறைத்து ஓடியதால் ஆற்றில் இறங்காமல் சாலை மட்டத்திலிருந்தே கண்களால் புனலாடினோம். ஓரிடத்தில் ஆற்றின் குறுக்கே ஒரேயொரு ஆட்டோ செல்லும் அளவுக்கு குறுகலான பாலம் அமைத்திருந்தார்கள். ஆற்றை முழுமையாக கண்டு ரசிக்க ஏதுவான மேடை.

சுழித்தோடும் செந்நீர் வெளியை பார்க்கும் போதெல்லாம் ஒருவித அச்சமும் மகிழ்ச்சியும் ஒருசேர எழுந்தது. ஆற்று வெள்ளத்தில் மரத்தண்டுகள் அடித்து வந்தன.  ஆங்காங்கே நீர்ச்சுழல்கள் தோன்றி மறைந்தன. மேலிருந்து பார்க்கையில் நீர் மண்ணிலிருந்தே ஊறி அனைத்து திசைகளிலும் பெருக்கெடுப்பது போல் உளமயக்கு எழுந்தது. சிறுவயதில் ஆடி 18 க்கு பவானி கூடுதுறைக்கு சென்ற நினைவுகள் எழுந்தன. இன்னும் இரண்டு நாளில் ஆடிப்பெருக்கு நாள் வரப்போவதை அப்போதுதான் எண்ணிக்கொண்டேன. அவ்வாறெனில் இந்த ஆண்டு அணைகளால் குறுக்கிடப்படாத மெய்யாகவே ஆடிப்பெருக்கெடுக்கும் பவானியை பார்த்திருக்கிறேன்.

மதியத்திற்கு மேல் மழை நன்றாகத் தொடங்கிவிட்டிருந்தது. சாலையோர நீரருவிகளில் மழைச்சட்டையை அணிந்தபடியே நீராடினோம். ஒரு காட்சிமுணையில் நான் உப்பிலிட்ட மாங்காய் வாங்க அவள் ஐஸ் கிரீம் வாங்கினாள். உண்மையில் அந்த காட்சிமுணை முழுதும் மாருதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இளம் குரங்கினன் ஒருவன் மாங்காய் தரச் சொல்லிக் கேட்டான். நான் அவசரமாய் விழுங்கிவிட அவளிடமிருந்த கோன் ஐஸை கையிலிருந்தே பிடுங்கிச் சென்றுவிட்டான். பரவாயில்லை என்று கடைக்காரப் பையன் அடுத்த கோனை எடுக்க அவரிடமிருந்தே இன்னொரு தாய் குரங்கு பிடுங்கிச் சென்றது. சிறிது நேரத்தில் வண்டியில் தொங்கிய கோன் சரத்தையே ஒரு குரங்கு இழுத்துச் செல்ல கடைக்காரப் பையன்கள் செய்வதறியாமல் சிரித்தபடி நின்றனர். தினமும் பாதி சரக்கை மாருதர்களுக்கு அளிப்பதை ஒரு படையல் போல நினைத்துக் கொள்வார்கள் போலும்.

அன்றைய இரவுக்கு மன்னார்க்காட்டில் ஒரு வீட்டுத் தங்குமிடத்தில் அறை பதிவு செய்திருந்தோம். மாலை ஐந்து மணிக்கே தங்குமிடத்தை அடைந்து விட்டோம். அங்கு ஒரு தமிழ் குடும்பம் எங்களை வரவேற்று இளைப்பாற்றினர். கேரளத்தில் நான் பார்த்தவரை ஹோட்டல் அறைகளை காட்டிலும் வீட்டுத் தங்குமிடங்கள் நல்ல வசதியாக இருக்கும். இவை பெரும்பாலும் உள்ளூர் குடும்பங்களால் நடத்தப்படுவதால் பெயரறியா உறவினரின் வீட்டில் தங்குவது போலத்தான்.

மன்னார்க்காட்டில் ஓர் ஆர்வமூட்டும் இடம் உண்டு. கேரளத்தில் எஞ்சியிருக்கும் வெகுசில பதினாறு கட்டு வீடுகளில் ஒன்று. மூப்பில் நாயர் தரவாடு. நிலவுடைமை உச்சத்தில் இருந்த போதே பதினாறு கட்டு வீடுகள் அரிதாகத்தான் இருந்திருக்கின்றன. மூப்பில் நாயர் தரவாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தன் உச்சத்தில் இருந்திருக்கிறது. ஒரேநேரத்தில் கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் வரை வாழக்கூடிய அவ்வீட்டில் மூப்பில் நாயர் அப்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு சொந்தமான அரசராக வாழ்ந்திருக்கிறார். தரவாட்டை ஒட்டி பெரிய பகவதி கோயிலும் அதில் வருடந்தோறும் அவர் தலைமையில் பூரம் திருவிழாவும் நடந்துள்ளன. சுதந்திரத்திற்குப் பின் நிலச்சீர்திருந்த சட்டங்களுக்குப் பின் படிப்படியாக நாயர் தரவாடு விழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே அவ்வீட்டில் யாரும் வசிப்பதில்லை. மனிதர்கள் வாழாத வீட்டை இயற்கை கையகப்படுத்தும் வேகம் எப்போதும் அச்சமூட்டக்கூடியது.

மன்னார்காடு மூப்பில் நாயர் தரவாடு

இரண்டாயிரம் வரை சினிமா ஷூட்டிங் வழியாகவெனும் அவ்வீடு உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கிறது. பாலன் மாஷே புகழ் மம்முட்டி நடித்த ‘தனியாவர்த்தனம்’ திரைப்படம் அங்கு எடுக்கப்பட்டது தான். அப்படத்திலேயே வீழ்ச்சியடைந்து வரும் நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் சாட்சியாகத்தான் அவ்வீடு காட்டப்பட்டிருக்கும். தற்போது அவ்வீழ்ச்சி நிறைவடைந்துள்ளது. நான்கைந்து வருடங்கள் முன்பு வரைக்கும் கூட சுற்றுலா பயணிகள் வீட்டிற்குள் சென்றுவந்த படங்கள் இணையத்தில் உள்ளன. ஆனால் நாங்கள் சென்றபோது சுற்றியும் புதர்மண்டி வீட்டை அணுகமுடியாதபடி ஆகிவிட்டது. மழையில் நனைந்தபடி இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக மண் எடுத்துக்கொள்ளப் போகும் அவ்வீட்டை பார்த்து நின்றிருந்தோம். எனக்கு ஏனோ அதில் ஒருவகை நிறைவுணர்வே ஏற்பட்டது. காற்றுக்கு அடித்துக் கொள்ளும் ஜன்னல்கள் உள்ளே யாரோ இருப்பதான உணர்வை அளித்து திடுக்கிட வைத்தன.

அருகில் இருந்த பகவதி கோயிலில் பாட்டுச் சத்தம் அதிகமாக இருந்ததால் உள்ளே போகவில்லை. இது நம் காலகட்டத்தின் சாபமாகவே மாறி வருகிறது. திருவிழா, விஷேச நாட்களில் அதற்கான பாடல்கள் வாத்தியங்கள் இசைப்பது வேறு. ஆனால் எல்லா நாட்களும் சத்தமாக ஏதேனும் பக்தி பாடல்கள் வைப்பது, இயந்திர வாத்தியங்களை வைத்து அலற விடுவது என நம் மக்கள் செவியுணர்வையே இழந்து வருகின்றனர்.

நன்றாக வலுக்கத் தொடங்கிய மழையில் கோயிலைச் சுற்றி கொஞ்ச நேரம் உலவியபின் விடுதிக்கு திரும்பி கூடணைந்தோம். தேசிய பேரிடர் மையத்திலிருந்து ஆரஞ்சு சிகப்பு என மழை குறித்து எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் அவை மலையாள லிபியில் இருந்ததால் எங்களுக்கு இரண்டு வாய்ப்புகளுமே இருந்தன. தேவைக்கு அதிகமாக அச்சப்படலாம் அல்லது போதிய கவனம் கொடுக்காமல் கடந்தும் செல்லலாம். இப்பயணம் முழுக்க எங்களுக்கு இரண்டு மனநிலைகளும் மாறி மாறி இருந்தன. கம்பளிக்குள் புகுந்துகொண்டு இரவு முழுக்க மழையோசையின் பின்னணியில் அன்று உறங்கினேன்.

அடுத்த நாள் காலை பெரிந்தல்மன்னாவில் தங்கியிருந்த மணவாளன், விக்ரம் ஆகியோரை இணைத்துக் கொண்டு வண்டூர் அருகே நிலம்பூர் சென்றோம். அங்கு தேக்கு மரத்திர்க்கென்றே ஓர் அருங்காட்சியகம் உள்ளது. நாங்கள் சென்றதும் பிரபுவும் பவித்ராவும் அங்கு வந்து இணைந்து கொண்டனர். தேக்கு நம் பூர்வீக மரமாக இருந்தாலும் அதன் வியாபார மதிப்பு காரணமாக பயிரிடும் மரமாகவே அதிகம் காண நேர்வதால் அதன் மீது எனக்கு கலவையான உணர்வுகளே உள்ளன. பரம்பிக்குளம், மறையூர், ஏற்காட்டின் அடிவாரம் போன்ற பகுதிகளில் பார்த்த தேக்கின் நினைவுகள் எழுந்தன. மழைக்காடுகளின் நடுவே இது ஒற்றைப் பயிராக (monocrop) அதிக பரப்பளவில் இருப்பதால் பல்லுயிர் பெருக்கம் தடைபடுவதாக எனக்குத் தோன்றியதுண்டு. அதேசமயம் பரம்பிக்குலத்தில் ஐநூறு வருடங்களாக வாழ்ந்துவரும் கன்னிமாரா தேக்கைப் பார்த்த பொழுது நான் அடைந்த உணர்வுகள் வேறு.

நிலம்பூர் தேக்கு அதன் தரத்திற்கு பெயர் போனது.  இந்த அருங்காட்சியகத்திலும் பலத் தொன்மையான தேக்கு மரங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். தேக்கின் பாகங்கள், பரவல், அதனுடன் இணைந்த பூச்சிகள் என அதன் உயிரியல் முகம் ஒரு பக்கம். வீட்டுஉபயோக பொருட்கள், கலைப் பொருட்கள் என அதன் பயன்பாட்டு முகம் இன்னொரு பக்கம். ஒரு தொன்மையான தேக்கை இரண்டு இருபது மீட்டர் துண்டுகளாக வெட்டி கிடத்தியிருந்தனர். அதை மேடையில் எறிச்சென்று பார்க்க வேண்டும். அதைப் பார்த்து வந்ததும் விக்ரம் அண்ணா சொன்னார், “கருவறையில் மல்லாந்திருக்கும் ஆதி கேசவனை பார்ப்பது போல..”

மதியம் இரண்டு மணி வாக்கில் வண்டூரில் கதகளி அரங்குக்கு வந்து சேர்ந்தோம். முதலில் பீஷப்பள்ளி ராஜீவன் நடத்திய கதகளி செயல்முறை விளக்க அரங்கு. உண்ணாயி வாரியர் எழுதிய நளசரித ஆட்டக்கதையின் பாடல் கேரளத்தில் கதகளியைத் தாண்டி இலக்கியமாகவே புகழ் பெற்றது. அங்கு பத்தாம் வகுப்பின் பாடத்திட்டத்தில் நளசரித ஆட்டக்கதையின் சிறிய பகுதி இடம்பெற்றுள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் சிலரும் அரங்குக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்கள். ராஜீவன் தன் உரையை அவர்களை நோக்கிய நிகழ்த்தினார். கதகளியின் ஐந்து வகை வேடங்கள் பச்ச, கத்தி, கரி, தாடி, மினுக்கு எதற்குள்ளும் வராத அண்ணப்பறவையாக முதலில் அபிநயித்துக் காட்டி கதை சந்தர்ப்பங்களை விளக்கினார்.

அன்று மாலை நடக்கவிருந்த கல்யாண செளகந்திகம் களியிலிருந்தே பல உதாரணங்கள் அளித்தார். ஒவ்வொரு வேடத்திற்கும் உரிய குணங்கள், கதகளியில் பதங்களுக்கான இடம், அதன் கவித்துவம், முத்திரைகள், வாத்தியங்களுடன் இணைந்து கதகளி அளிக்கும் முழுமை அனுபவம் என்பதில் தொடங்கி கதகளி ஒப்பணைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை தன் அறிதல்களை கடத்திவிட துடிக்கும் முனைப்புடன் முழு அரங்கிலும் வெளிப்பட்டார். களியில் பயின்று வரும் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு தருணத்தை நினைவுகூர்ந்து அபிநயித்துக் காட்டினார். அரங்கு ஒரே சமயம் தீவிரமாகவும் மலையாளிகளுக்கே உரிய பகடியுடனும் இருந்தது. உதாரனமாக ‘ஹாஸ்ய’ பாவத்தை குறிப்பிடுகையில் அது மலையாளிகளின் ஸ்தாயிபாவம் என்றும் காருண்ய பாவத்தை விளக்கும் போது அது மலையாளிகளுக்கு அதிகம் கைவராத பாவம் என்றும் குறிப்பிட்டார். அரங்கு முடியும் தருவாயில் ரசிகர்களுள் ஒருவர் ‘நாரணத்து பிராந்தனாக’ நடிக்க வேண்டும் என துண்டுசீட்டு அளிக்க அவரும் ஒரு பித்தனை கண நேரத்தில் கண்முன்னே கொண்டு வந்தார். அண்ணமாக, நளனாக, பீமனாக, தமயந்தியாக, பிராந்தனாக, ராஜீவன் மாஷேவாக என மாறி மாறித் தோன்றிய இந்த செயல்முறை விளக்க அரங்கே முழுமையான களிபார்த்த அனுபவத்திற்கு நிகராக இருந்தது.

தேநீர் இடைவெளிக்குப் பிறகு ஆறு மணிக்கு கல்யாண செளகந்திகம் களி தொடங்கியது. பாஞ்சாலி பீமன் இடையே சிருங்கார காட்சிகள் அதற்கான மெதுவான தாள வேகத்தில் நகர்ந்தன. மலரை நோக்கிய பயணத்தில் பீமன் அனுமனை சந்திப்பதுதான் முக்கியமான தருணம். காதலி கேட்ட மலரைத் தேடிச் செல்லும் பயணத்தில் ஒருவன் யுகங்கள் கடந்து தன் மூத்தோனை, ஆசிரியரை காணும் தருணம். அவ்வாறெனில் அவன் தேடிச் செல்வது எதை? அது காதலுக்கான மலர் என்பதையும் தாண்டி பீமன் அப்பயணத்தில் தனிப்பட்ட முறையில் அடையும் விஷயங்கள் உண்டு. அது யுகங்கள் கடந்த ஆசிரியர் மட்டுமே அருளும் ஒரு தருணமாக இருக்கலாம். அந்த அறிதல் அம்மலரின் நறுமணம் போலவே நுண்மையானதாக மொழியில் சிக்காதாதாக இருக்கலாம்.

அனுமன் தவம் செய்யும் காட்டில் கடந்து செல்கிறான் பீமன். அது யானையை விழுங்கும் மலைப்பாம்புகளும் அப்பாம்பை கிழித்துண்ணும் சிங்கங்களும் கொண்ட கொடிய காடு. அப்பேர்ப்பட்ட காட்டில் பீமன் நடந்து வரும் அதிர்வோசையில் விலங்குகள் பயந்து பதுங்கிக் கொள்கின்றன. பீமனை பார்த்தவுடன் அவனை தன் குட்டித்தம்பியாக அடையாளம் கண்டுகொள்ளும் அனுமன் அவனிடம் தன் லீலையை நிகழ்த்துகிறார். இக்காட்சியில் பீமன் கர்வபங்கம் அடைந்த பிறகு அவனுடைய உடல்மொழியில் ஏற்படும் மாற்றங்கள் ரசிக்கத்தக்கவை. அதன் பிறகு களி முடியும் வரையிலும் தோழனும் ஆசிரியருமான மூத்தோன் முன் பணிந்திருக்கும் சிறுவனையே நாம் காண்போம்.

இந்த நிகழ்வு முழுவதும் விழா அமைப்பாளர்களுள் ஒருவரான ஜெயஶ்ரீ எங்களை மனமார கவனித்துக் கொண்டார். கதகளி வழியாகவே அவர் பவித்ராவுக்கு தோழியாகிவிட்டிருக்கிறார். தமிழகத்திலிருந்து களி காண வந்திருக்கிறோம் என எங்களை பலரிடமும் பூரிப்புடன் அறிமுகம் செய்து வைத்தார். எங்கள் வருகை குறித்து மலையாள மனோரமாவில் ஒரு செய்திக் குறிப்பு வெளியாகலாம் என்று கூறி புகைப்படமெல்லாம் எடுத்துக் கொண்டார். அவரிடம் விடைபெற்று இரவு பத்து மணிக்கு கிளம்பினோம்.

வெளியே மழை தொடர்ந்து கொண்டிருந்தது. வானிலை அறிக்கைகள் சில சமயம் பலித்துவிடுவதும் உண்டு என்பதை உணர்ந்தோம். பாலக்காடு வரை கண்ணாடிப் பரப்பில் வழியும் மழைத்தாரைகளினூடாக ஊர்ந்து வரும் ஒரு பயணம். வண்டி நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் கோவையை அடைந்தது. அங்கு விக்ரம் அண்ணா விடைபெற்றதும் நாங்கள் நீலாம்பூர் கடந்து ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஓய்வெடுக்க நிறுத்தினோம். பத்து நிமிடம் கண்ணயரலாம் என சாய்ந்தாத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தூங்கிவிட்டேன். ஆடிப்பெருக்கின் வெள்ளமும் மாருதர்களும் மாருதன் மைந்தனும் கனவுவெளியில் வெவ்வேறு வகையில் உருமாறித்  தோன்றினர். பவானியின் வெள்ளப்பெருக்கில் ஒரு பெயரில்லா மலர் அடித்துக்கொண்டு வரும் காட்சியில் விழித்துக் கொண்டேன். தமிழ் நிலம் விடியலுடன் காத்திருந்தது. அன்று திங்கட்கிழமை, ஆடிப்பெருக்கு தினம்.

06/07/2026

திண்டல்.


மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்


Comments

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...