ஆடிக் காற்று வாங்க ஆடிவரை காத்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆணி பதினைந்து வாக்கிலேயே நல்ல காற்று வீசுவதாகத் தெரிந்தால் நீங்கள் மொட்டைமாடிக்குப் போகலாம், அதற்கு நகராட்சி சார்பில் அபராதம் எதுவும் கிடையாது.
எப்போது நீங்கள் இரண்டு நாட்களாக தேடி சலித்த உள்ளாடையை பக்கத்து வீட்டுக்காரர் தங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு கரித்துணி விழுந்து கிடந்ததாகச் சொல்லி மீட்டுத் தருகிறாரோ அப்போதே நீங்கள் உஷாராகிவிட வேண்டும். அப்போதும் நீங்கள் அசமந்தமாக இருந்தால் அடுத்தக்கட்ட எச்சரிக்கை உங்கள் மனைவியிடமிருந்து வரும், “எத்தன வாட்டி சொல்றது, பொடவைக்கும் கிளிப்பு போடுன்னு.. எப்பதான் உனக்கு அறிவு வருமோ?”
நமக்கு எப்போது அறிவு வரும் என்று யோசிப்பது நல்ல தத்துவார்த்த கேள்வியாகப் பட்டது. ஆனால் தத்துவக் கேள்விகளை விசாரிக்க வீட்டு சோபா உகந்த இடமல்ல. இதை ஏன் நாம் ஒரு மாலை நடை சென்றபடியே சிந்திக்கலாகாது? “அறிவியாலாளர்கள் முதல் தத்துவஞானிகள் வரை தங்களுக்கான விடையை இயற்கையின் மகத்தான தற்செயலிலிருந்தே பெற்றிருக்கிறார்கள். உங்கள் உள்ளார்ந்த கேள்வியுடன் பிரபஞ்சத்தை செவிகூருங்கள், அது உங்களுக்கு விடையளிக்கும்.” என்ற மேற்கோளை எங்கோ கேட்டிருக்கிறேன். நடை முடித்து சேட்டன் கடையில் ஒரு கட்டன் குடித்தால் நம் அறிவுத்தகுதி குறித்த தெளிவு பிறக்கக் கூடும்.
அரசமரம் நின்றிருக்கும் இடம்தான் நான் நடை செல்லும் பாதையின் துவக்கம். இன்று தூரத்திலிருந்து அரசனை பார்க்கும் போதே நல்ல காற்றோசை. காற்றுக்கும் அரசமரத்திற்கும் ஒரு விசேஷ இணைவு உண்டு. பிற மரங்களைக் காட்டிலும் லேசான காற்றுக்குக் கூட அரச இலைகள் நன்றாக சலசலக்கும். காற்றடிக்கும் நேரத்தில் அரசனுக்கு அருகே நின்றிருந்தால் காற்றும் இலைகளும் முயங்கி எழுப்பும் ஓலத்தை நீங்கள் கேட்கலாம். அதிகம் கவனித்தால் அதன் அமைதியின்மையை நமக்குள்ளும் கடத்திவிடும். அல்லது அது அடையும் தழுவலின் கொண்டாட்டத்தை நான் தவறாக புரிந்து கொள்கிறேனா? எங்கோ எப்போதோ ஏற்பட்ட அழுத்த மாறுபாட்டால் வீசத்தொடங்கிய காற்று இந்த அரசன் வரை வந்துசேர்ந்து சுழற்றி அடிக்கிறது. கொஞ்சம் இடைவெளி. மீண்டும் அடுத்த சுழற்றல்.
ஆதியில் முக்குணங்களும் சமநிலையில் இருந்தாகவும், அதில் நிகழ்ந்த முதல் சமன்குலைவுக்கு பின் மீண்டும் அச்சமநிலையை நோக்கிய பயணமே நாம் காணும் செயல்வடிவ பிரபஞ்சம் என்பது சாங்கியக் கொள்கை. வளி மண்டலத்தில் உருவாகும் அழுத்த மாறுபாட்டால் காற்று வீசுகிறது என்கிறார்கள். உலகில் எங்கேனும் காற்று வீசாமல் ஒரு கணமும் கடந்து செல்வதில்லை. எனில் என்றேனும் அனைத்துக் காற்றுகளும் வீசி முடித்து அந்த ஆதிசமநிலையை அடையக்கூடுமா?
அரச இலைகளின் ஊடாக பொழிந்த காற்று அந்நேரம் ஸ்கூட்டியில் கடந்த ஒரு யுவதியின் மீதும் வீசியது. அவர் ஒருகையால் வண்டி ஓட்டியபடியே மறுகையால் காற்றுக்கு கலைந்த தன் கூந்தலை காதோரம் நீவி பின்னால் விட்டார். ஆஹா இயற்கை அழகானது, அனைத்து விடைகளையும் தன்னில் கொண்டது. தத்துவவாதிகள் வெறுமனே எதையும் சொல்வதில்லை.
நான் நடையை தொடர்ந்தேன். எங்கும் பெருவெள்ளமாய் காற்றின் நதி ஓடிக் கொண்டிருந்தது. காற்றை மட்டும் கண்கொண்டு பார்க்க முடிந்தால் இவ்வுலகம் என்னவாக இருக்கும்? கங்கையும் கோதையும் பெருநதிகள் என்கிறோம். காற்றின் நதிகள்? நைலை விட நீண்டது, அமேசான் ஆற்றை விடவும் அகண்டது. கடலே நதியாக பெருக்கெடுத்தது போல. எத்தனை மூழ்கினாலும் மூச்சுத் தினறாத நதி. அணைக்கட்ட முடியாதது. ஜன்னலை திறந்து வைத்தால் வீட்டுக்குள் நுழைந்து நம் தூர்ந்துபோன அகக்கிணறுகளையும் நிரப்பிச் செல்வது.
தற்போது என்னைத் தழுவிச் செல்லும் இந்த நதி எத்தனை ஆழம்? சாலையோரம் உயர்ந்து நின்ற தென்னையின் உச்சியை அண்ணாந்து நோக்கினேன். அந்த உயரத்திலும் தென்னையின் முகம் ஒரு பக்கமாக திரும்பியிருக்க ஓலைக்கூந்தல் காற்றின் திசையில் பரபரத்தது. அப்படியென்றால் இங்கு வீசும் காற்று நதியின் ஆழம் நன்கு வளர்ந்த ஒரு தென்னைக்கும் அதிகம். ஏன் நூறு தென்னைக்கும் அதிகம் இருக்கலாம். எல்லா நதிகளையும் போல ஆழத்தை விடவும் மேல்மட்டத்தில்தான் வேகம் அதிகம் போல. அங்கே உயரத்தில் இதோ பறந்துவிடப் போகிறேன் என தென்னையின் முகம் அவசரம் காட்டியது. மொத்த மரமும் முன்னும் பின்னும் அசைந்து எட்டு எடுத்து வைக்க நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்தேன்.
வயல் நடுவே நின்ற ஒற்றைப் பணையிலோ தென்னையில் கண்ட தள்ளாட்டம் இல்லை. ஓலைகள் காற்றைக் கிழிக்கும் கூரோலி மட்டுமே. கிழவிக் காதில் தொங்கும் தொங்கட்டான்களைப் போல தூக்கணாம் கூடுகளை சூடி நின்றது. தலைநிமிர்ந்து தருக்கி நிற்கும் அன்னை. அன்னையின் உருவுக்கேற்ப பத்திருபது தொங்கட்டான் கூடுகள். கூடுகளை பற்றிக்கொண்டு தூக்கணாம்குருவிகள் காற்றில் ஊஞ்சலாடின.
இருபுறமும் தழைத்து வளர்ந்திருந்த சோள வயலில் காற்று உருவாக்கிய அலைகள் எழுந்த வண்ணம் இருந்தன. சோளத்தின் இலை நாவுகளோ உலகையே சுவைத்துவிடும் ஆவலுடன் காற்றைத் துழாவுவதாகப் பட்டது. ஓரமாக நடந்தால் நம்மையே சுவைத்துவிடும் போல. எதற்கும் கொஞ்சம் தள்ளியே நடப்போம் என சாலையின் மத்திக்கு வந்திருந்தேன்.
காற்றாடி பருவத்தில் வாழைகள்தான் பரிதாபக் கோலம் பூண்டுவிடுகின்றன. ஏரியாவில் பெரிய இலை தன்னோட இலைதான் என நேற்று வரை பெருமை பேசிய வாழைகள் முதல் காற்றுக்கே இனி இருப்பனோ பொழைப்பனோ என்கிற நிலைக்கு வந்திருந்தன. தீரத்துடன் காற்றுக்கு எதிர்நின்றிருக்கக் கூடிய ஒரு வாழை மொத்தமாக மல்லாக்க சாய்ந்து கிடந்தது. வீட்டுத்தோட்டம் ஒன்றில் தனித்து நின்ற வயது முதிர்ந்த வாழையார் தன் கந்தலான இலைகளை காற்றிடம் நீட்டி முறையிட்டுக் கொண்டிருந்தார்.
வாழைத்தோட்டத்தை அடுத்து பாதையின் திருப்பத்தில் அமைந்த பிள்ளையார் கோயில்தான் என் வழக்கமான எல்லைக்கோடு. அங்கிருந்து திரும்பிவிடுவேன். கோயிலருகே ஒரு வேப்பமரம் நின்றிருக்கும். ஒரு கொத்து வேப்பிலை ஆடினாலே பேயோட்டும் சித்திரம் வந்துவிடுகிறது, வேப்பமரமே ஆடுவதென்றால்? ஆனால் காற்று கொஞ்சம் தனிந்ததும் வேம்பு எதையும் விரட்டுவதுபோல் தெரியவில்லை. அடுத்த காற்று தொடங்கும் வரை தென்றலை வாங்கிக்கொண்டு இலகுவாக நின்றிருந்தது. அருகில் சென்றதும்தான் வேம்பின் அடியில் பாதுகாப்பு துணி போர்த்தியிருந்த மாருதி காரை கவனித்தேன். காற்றுக்கு அலையடித்தத் துணியிலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. உலோகக் கார் மறைந்து இதோ காற்றில் பறந்துவிடப் போகிற பலூன் கார் ஒன்று அங்கு நின்றிருப்பதான உளமயக்கை ஏற்படுத்தியது. காற்று அனைத்தையும் எடையற்றதாக ஆக்கிவிடுகிறது, அகத்திலும் புறத்திலும்.
பால் பொங்கிய பின்பும் அளவான தீயில் வைத்திருந்தால் தனக்குள் பொங்கியபடி இருக்குமே, அதுபோன்ற இனிய ததும்பல். புன்னகையோ சிரிப்போ அல்ல. மொத்த உடலிலும் வெளிப்படும் மகிழ்ச்சித் ததும்பல். தன்னுள் நிறைந்தது போதாமல் வெளியையும் நிறைக்கும் பொருட்டு பறந்துவிடத் துடித்தது. காற்றை அனுபவித்து நின்றிருக்கும் பெண் அணிந்த ஆடை போல. இந்த வாழ்வில் சுயத்தை மறந்து நின்றிருக்க வாய்த்த சில கணங்கள். அதற்குள் காம்பவுண்டுக்குள் இருந்து ஒரு கிழவியின் குரல், “ஓவ்.. தம்பி யாரு? நானும் ரொம்ப நேரமா பாக்குறேன், எதோ காணாதத கண்ட மாதிரி கண்ணெடுக்காம நிக்கிறியே? காத்துக்கு கார்துணி பறந்தா பக்கத்துல கூப்டு சொல்றதுக்கென்ன? ரோசனை இல்லாத பயலா இருக்கியே.” ஆக வீட்டிலிருக்கும் மனைவி முதல் பக்கத்து ஏரியா பாட்டி வரை இன்று ஒரு விஷயத்தை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். மாருதனுக்கு நன்றி.




Comments
Post a Comment