கவிதையின் ஒரு சொல் நம்மை வந்தடையும் கணம் மிகவும் தற்செயலானது, புனிதமானதும் கூட. அப்படித்தான் வாட்ஸாப் நிலைத்தகவல்களை கவனமின்றி தள்ளிக்கொண்டிருந்த மதிய வேளையில் என்னிடம் வந்து சேர்ந்தது கவிஞர் ஆனந்த் குமாரின் 'சந்தோஷமாக உறங்கும் பலூன்' கவிதையிலிருந்து 'சந்தோஷத்தின் வால்' எனும் சொல். அந்த நாளையே மலரவைத்துவிட்டது. அந்த நாளை மட்டுமல்ல இனி வாழ்வில் என்றும் துணைவரும் சொற்களாக அவை மனதில் அமைந்துவிட்டதை தற்போது உணர்கிறேன். பலூன்களும் கருஞ்சிட்டுகளும் வாலாட்டிகளும் நாய்களும் ஆட்டுவது சந்தோஷத்தின் வாலையன்றி வேறெதை?
அக்கவிதை அளித்த கவிதையுணர்வை தக்கவைத்துக் கொள்ள விரும்பினேன், கூடவே ஒரு விசித்திரமான ஆசையும். நவீன தமிழ் கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் பலூனை நேரடியாக பயன்படுத்தியிருக்கும் கவிதைகளை தேடிப் பார்த்தால் என்ன? அவ்வாறு நினைவிலிருந்தும் நண்பர்கள் சிலரும் தேடிக்கொடுத்ததில் சில பலூன்கள் கிடைத்தன. ஒவ்வொரு கவிதையும் நான் எதிர்பார்த்த மாதிரியே எனை காற்றில் நிறுத்தின.
கவிதைகளை அந்தக் கவிஞர் எழுதிய ஒட்டுமொத்த கவிதை பரப்பில் வைத்தும் ஒட்டுமொத்த நவீன கவிதை பரப்பில் வைத்து பார்ப்பதுமே சிறந்த கவிதை வாசிப்பாக இருக்கும். அழகியல் ரீதியாக மதிப்பிடுவதற்கும் அதுவே உகந்த வழி. நான் எழுதிய இந்தக் குறிப்பு அவ்வாறு அழகியல் ரீதியாக கவிதையை மதிப்பிடும் நோக்கம் கொண்டதல்ல. ஒவ்வொரு இலக்கிய பிரதியும் தன்னளவில் மேற்கொள்ளும் பாவனை ஒன்று உண்டு. அவ்வாறு தனிப்பட்ட வாழ்வனுபவங்களுக்கு கவிதைகள் கொடுத்த அர்த்தத்தையும் உருவத்தையும், அந்தத் தூய கணத்தின் கொண்டாட்டத்தையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது மட்டுமே தன் நோக்கம் என்பது இக்கட்டுரை மேற்கொள்ளும் பாவனை.

Comments
Post a Comment