Skip to main content

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு


கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா


கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

அருகில் சென்றால் நல்ல வாசனை. வேறு பல தாவரங்களுக்குள் ஊடுருவியிருந்த கொடியில் இம்மலர் பூத்திருந்தது. கொடியின் ஊடுபாதைகளை தொடர்ந்து போதுதான் இம்மலர் மட்டுமல்லாமல் மேலும் நான்கைந்து மலர்கள் விழிதிறந்து எனை நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எதை கையில் ஏந்துவது என்று குழப்பத்தில் நின்றேன். அப்போது காற்றின் சலனத்தில் எனை நோக்கி எம்பிய ஒரு மலரை தானாகவே கைகள் பற்றிக் கொண்டன. ஆச்சர்யமும் ஆர்வமுமாய் அதன் அமைப்பை புரிந்துகொள்ளவே எனக்கு சிறிது நேரம் ஆயிற்று.



மேலே மூன்று பட்டை மின்விசிறி போன்றதொரு அமைப்பு, அதன் கீழ் ஐந்து பட்டை மின்விசிறி, அதற்கடியில் ஊதா நிற சூரிய கதிர் இழைகள், எல்லாவற்றுக்கும் அடியில் தாங்கி நிற்பது போன்ற இதழ்கள். மூன்று திசைகளில் பிரிந்திருந்த கொடியின் இலைகள் பப்பாளி இலையின் சிறிய வடிவம் போலத் தோற்றமளித்தது. இம்மலரை வாழ்வில் முதன்முறையாக பார்க்கிறேன் அல்லது முதன்முறையாக கவனிக்கிறேன். விசாரித்ததில் இதன் பெயர் கிருஷ்ண கமலம் என்று சொன்னார்கள். ஆஹா அப்படியென்றால் நம் நாயகனின் மலரல்லவா.. ஆசை தீர கண்களால் வருடிக் கொண்டிருந்தேன். எத்தனை நுட்பமான வடிவம்? அழகிய நிறத் தேர்வுகள். நுட்பமும் ஒத்திசைவும் இணையும் புள்ளியைத்தான் நாம் அழகு என்கிறோமா?

இம்மலரைப் பார்த்த மகிழ்ச்சியை ஆசிரியர் லோகமாதேவியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. மேலும் அவர்கள் இம்மலர் பற்றி ஏதேனும் சொல்லக்கூடும். அவருக்கு படத்தை பகிர்ந்த ஐந்தாவது வினாடியில் “ஆமா தம்பி.. கிருஷ்ண கமலம்” என்று தன் மகிழ்ச்சி குரலை அனுப்பியிருந்தார். 

மேலும் இதற்கு ‘மகாபாரத மலர்’ எனும் வேறொரு பெயரும் இருப்பதாகச் சொல்லி அதை விளக்கினார். 

அடிப்பக்கம் உள்ள ஊதா நிற இதழ் நீட்சிகள் நூறு எண்ணிக்கை இல்லாவிட்டாலும் நூறு இருப்பதாகக் கணக்கு. அதன் மேல் மஞ்சள் நிறத்திலிருக்கும் சிறிய இதழ்கள் ஐந்து. நூறும் ஐந்தும் இருப்பதனால் இதனை மகாபாரத மலர் என்றும் சொல்கிறார்கள் என்றார். இதே மலரில் சிகப்பு நிற இதழ்கள் கொண்ட மலரில் கண்களை எடுக்கவே முடியாதபடிக்கு அத்தனை வசீகரமாய் இருக்குமென்றும் தன் ஆவலை பகிர்ந்து கொண்டார்.

வெள்ளிமலையில் அதிகம் காணப்படும் கிருஷ்ணன் பெயரில் அமைந்த இன்னொரு மலரைப் பற்றியும் குறிப்பிட்டார். கிருஷ்ண கிராந்தி அல்லது விஷ்ணு கிராந்தி எனப்படும் மிகச்சிறிய மலர். இதன் செடி தரையெங்கும் படர்ந்திருக்கும் வகையிலானது. கிருஷ்ண நீலத்தில் அமைந்த மலர். சிறிய மலராக இருந்தாலும் தன் அற்புதமான வண்ணத்தால் கவனத்தை ஈர்ப்பது. அம்மலரின் ஆச்சர்யத்தை சொல்லிவிட துடிக்கும் மகிழ்ச்சி அவரின் குரலில் தெரிந்தது, “நிறமற்றது என்று நாம் சொல்லும் மண்ணிலிருந்து இந்த எளிய செடி எத்தனை அற்புதமான நிறத்தை கொண்டு வருகிறது தம்பி! இல்லையா.. இதன் வேதியியலை நினைத்துப் பாருங்கள்..” என்றார். இருப்பற்ற இன்மையிலிருந்து இந்த பிரபஞ்சம் திரண்டு வந்ததைப் போல என்று நினைத்துக் கொண்டேன்.

 

வெள்ளிமலை கிருஷ்ண கிராந்தி

நாள்தோறும் இயற்கை தன் தூரிகையால் இத்தனை வண்ணங்களை நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு மகத்தான ஓவியன் கணந்தோறும் அற்புத ஓவியங்களை வரைந்து நம் முன்னால் நீட்டிக் கொண்டே இருப்பதைப் போல. இத்தனை வண்ணங்களும் எங்கிருந்து வருகின்றன? நீரும் காற்றும் ஒளியும் வானும் நிறமற்றவை. நிலமும் நம் கணக்கில் நிறமற்றதே. பொருள்மிக்க எதுவும் இன்மையிலிருந்து தோன்றுவதே ஆதிவிதி போலும். எண்ணங்களின் இன்மையிலிருந்து கவிதை தோன்றுவதைப் போல.

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்கள் பிறக்கின்றன. ஒளியில் பிரியும் வண்ணங்கள் நீரிலோ ஒன்று கலக்கின்றன. அதன்பிறகு உயிர்வெளியெங்கும் வண்ணங்களே நிறைந்துள்ளன, ஆழ்கடலில் ஆனாலும் பெரும்பாலையில் ஆனாலும். பெரும்பாலான உயிர்கள் தன் உச்சகட்ட வெளிப்பாடாக வண்ணங்களை கொப்பளிக்கின்றன. மரங்கள் மலர்களில், பறவைகள் இறகுகளில், விலங்குகள் பளபளக்கும் தோல்பரப்பில், மீன்கள் செதில்களில், மனிதர்கள் ஆடைகளில் என இங்கு உயிர்கள் வண்ணங்கள் வழியாக வெளிப்படுத்துவது எதை? அதுவொரு மாபெரும் உறுதிப்பாடு அல்லவா?  வண்ணங்களால் இங்கு உயிரின் ஆடல் நிகழ்கிறது. மண்ணில் வண்ணங்கள் திகழாத நாளொன்றில்லை, எந்தச் சூழலிலும் எங்கும் எப்போதும் அவை நமக்காக திரண்டபடியே உள்ளன.


ஓவியம்: ரஞ்சனி அரசி


நன்றி: ஆசிரியர் லோகமாதேவி


(நிறைவு)



Comments

  1. இத்தனை வண்ணங்களும் எங்கிருந்து வருகின்றன? நீரும் காற்றும் ஒளியும் வானும் நிறமற்றவை. நிலமும் நம் கணக்கில் நிறமற்றதே. பொருள்மிக்க எதுவும் இன்மையிலிருந்து தோன்றுவதே ஆதிவிதி போலும். எண்ணங்களின் இன்மையிலிருந்து கவிதை தோன்றுவதைப் போல.

    வண்ணமின்மையிலிருந்து வண்ணங்கள் பிறக்கின்றன. ஒளியில் பிரியும் வண்ணங்கள் நீரிலோ ஒன்று கலக்கின்றன. அதன்பிறகு உயிர்வெளியெங்கும் வண்ணங்களே நிறைந்துள்ளன, ஆழ்கடலில் ஆனாலும் பெரும்பாலையில் ஆனாலும்


    உங்கள் சிந்தனை செல்லும் தொலைவு என்னால் பயணிக்க இயலுமா என்று தெரியவில்லை ஆயினும் நான் தொடர்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...