Skip to main content

மான் செவி கள்ளி

இரண்டு வாரங்களாக குறிப்பிடத்தக்க பயணங்கள் எதுவும் அமையாததால் மனதில் ஒருவித தவிப்பு. எனவே  இன்று மாலை குறைந்தபட்சம் ஒரு புதிய இடத்தையாவது கண்டடைவோம் என கூகுள் ஆண்டவரிடம் தேடினேன்.

வீட்டிலிருந்து ஒருமணி நேர தொலைவில் ஆதியூர் அருகே மிகப்பெரிய பரப்பளவில் குளம் ஒன்று இருந்தது. நீரும் பசுமையும் இருப்பதுபோல் ஆண்டவர் படம் காட்டினார். வண்டியை விட்டோம்.

சென்று பார்த்தால் குளத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் முள் மரங்களாலும் தாவரங்களாலும் ஆக்ரமித்து இருந்தது. பாதி அளவு உள்ளே சென்று பார்த்தோம். பார்த்தவரை நீர் இல்லை. பெரிய குளம் என்பதால் மறுபக்கத்தில் இருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டோம்.

செம்போத்தில் துவங்கி பஞ்சுருட்டான், வால்காக்கை என வழக்கமான பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வானில் உயரத்தில் எந்த அலட்டலுமில்லாமல் வேட்டையாடி பறைவையை (raptor) போல பறந்த பறவையை கவனித்தேன். பாம்புத்தாரா (Darter). அதன் நீள் கழுத்து தெளிவாகவேக் காட்டியது. அதிக உயரத்தில் பறந்து இன்று தான் பார்க்கிறேன். எப்போதும் நீருக்குள்ளோ நீரருகிலோ பார்த்தப் பறவை. அருகில் நீர்நிலை தேடி பறந்திருக்க வேண்டும்.

திரும்பும் வழியில் வரண்ட முள் மரங்கள், புதர்களின் இடையே ஒரு தாவரம் மட்டும் பசுமையான இலைகளுடன் இருந்தது. இலைகளே ஒரு மலர் சரத்தின் வடிவில். அருகில் சென்று இலையைக் கிள்ளி பார்த்ததில் பால் வந்ததுடன் தண்டுப் பகுதியும் கள்ளியை ஒத்திருந்தது.


எழுந்து வரும் ஒவ்வொரு புதிய இலையும் மலர் மொக்கவிழ்வது போல உள்ளிருந்து விரியும் அமைப்பில் அழகு காட்டியது. ஆண்டவரின் பார்வையில் படும்படி காட்டி விவரம் கேட்டேன். இலைக்கள்ளி போன்ற பெயர்களுடன் மான்செவி கள்ளி என்ற பெயரையும் சொன்னார். நிச்சயமாக சரிதான் ஆண்டவரே என்றேன்.

செவிகொண்ட தாவரம் எனில் உரையாடவும் கூடுமோ? அப்படிப் பார்த்தால் அனைத்துத் தாவரங்களும் நம்மிடம் உரையாடவே செய்கின்றன. இங்கு சூழ்ந்திருக்கும் உயிர்வெளியின் உரையாடலுக்கு செவி கொடுக்க முடிந்தால் மனிதனுக்கு தனிமை என ஒன்றில்லை.


இலைகளுக்கும் மலர்களுக்கும் மான்செவியை உவமையாக பயன்படுத்துவது சங்கப்பாடல்கள் முதலே இருந்து வந்துள்ளது. வனத்தில் எந்த அசைவுக்கும் முதலில் செவிகூர்வது மானின் செவி என்பார்கள்.

எனில் நாங்கள் இங்கு வந்தது முதலே இந்தக் கள்ளி எங்களை அறிந்திருப்பாளா? எங்கள் மனதின் ஓசைகளையும் கேட்டிருப்பாளோ?


29.08.2026
திண்டல்

Comments

  1. ரொம்ப நல்லாருக்கு.கள்ளின்னு சொன்னது So sweet

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கரண்ட் மரம்

  அப்படியொரு மரத்தின் பெயரை இத்தனை நாளும் கவனிக்காமல் இருந்து விட்டோமே என எனக்கே வெட்கமாக இருந்தது. இத்தனைக்கும் வீட்டை விட்டு இறங்கினாலே முதலில் தென்படுவது அந்த மரமாகத்தான் இருக்கும். தள்ளுவண்டிக்கார அக்கா சொல்லும் வரையில் அதை ஒரு ‘மரமாக’ பார்க்க வேண்டும் என்ற பார்வைதான் இதுவரையில் தோன்றாமல் போய்விட்டது. மதியம் பனிரெண்டு மணி வெயிலில் இறங்கி சென்று இங்கு ஈரோடு பகுதியில் வார வாரம் புதிதாக திறக்கப்படும் பேக்கரிகள் ஏதேனும் ஒன்றில் அரைச்சக்கரை இட்ட சுமாரான கருப்பு டீயை குடித்துவிட்டு வருவது என்ன ரசனை என்று எனக்கேத் தெரியவில்லை. ஆனால் அதை தினமும் செய்து வருகிறேன். உண்மையில் டீ முடித்தக் கையுடன் வீட்டுக்கு வரும் வழியில் உள்ள தள்ளுவண்டிக்கடையை பார்த்ததும் தான் மனம் எதை எதிர்பார்த்தது என எனக்கேத் தெரிய வரும். கோடையின் துவக்கத்தில் பலாச்சுளையில் ஆரம்பமான வாடிக்கை. கால் கிலோ ஐம்பதில் தொடங்கி அரை கிலோவை ஐம்பதுக்கு வாங்கும் அளவுக்கு வண்டிக்கார அக்காவின் தொடர் வாடிக்கையாளனாக மாறியிருந்தேன். பலாப்பருவம் முடிவதற்கு முன்பே இடையிடையே நுங்கு, அதைத் தொடர்ந்து மாம்பழம், தற்போது கொய்யா நவா என வியாபாரம்...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

நனவிலியின் காலடித்தடம் - மணிபல்லவம்

  வாரவாரம் ஞாயிறு மாலை நடைபெறும் சிறுகதைக்கூடல் இந்த ஞாயிறுடன் தன் 49 ஆவது கூடுகையை நிறைவு செய்துள்ளது. பாண்டிச்சேரியை சேர்ந்த நாகராஜன் சார் இக்கூடலை தொடர்ந்து உற்சாகத்துடன் ஒருங்கிணைத்த நடத்தி வருகிறார். தொடர்ந்து எழுத்தாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து இதில் பங்கெடுக்க செய்கிறார். நான் இதுவரை சில வாரங்கள் கலந்து கொண்டிருக்கிறேன். என் பார்வையில் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் இயல்பாகவே கதையை முழுமையாக வாசித்தவர்களாகவும் பெரும்பாலும் கதையின் வாசிப்பு சாத்தியத்தை நோக்கி மட்டும் பேசுபவர்களாகவும் உள்ளனர். எனவே கூட்டு வாசிப்பின் நிறைவான அனுபவங்கள் அமைகின்றன. சிறுகதைக்கூடல் இந்த ஆகஸ்ட் மாதத்தை தொன்மக் கதைகளின் வாரமாகக் கொண்டாடியது. அதில் இந்த வாரத்தின் கதையாக மணிபல்லவம் விவாதிக்கப்பட்டது. கூடலுக்கு அழைக்கப்பட்டிருந்த நான் என் வாசிப்பை பகிர்ந்து கொண்டேன். அதன் எழுத்து வடிவை இங்கு பகிர்கிறேன் * மணிபல்லவம் சிறுகதை மணிபல்லவம் ஒரு தீவிரமான பயணத்தின் கதையும் கூட என்பதால் என் பயண நினைவு ஒன்றிலிருந்து இந்த உரையாடலை தொடங்குகிறேன். சென்ற ஆண்டு ஆந்திரா பயணத்தின் போது இந்தியாவின் இரண்டாவத...