Skip to main content

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார்.

எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது.

இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத்திரம். ஆனால் சௌந்தர்ய லஹரி மட்டுமின்றி அவர் இயற்றியதாக கருதப்படும் ஸ்தோத்திரப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம். (பார்க்க: உசாத்துணை)

பாஷ்யங்கள் (உரை நூல்கள்), தத்துவ விளக்க நூல்கள் அளவுக்கே ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்களையும் (துதிப் பாடல்கள்) இயற்றியுள்ளார். இதில் பல பாடல்கள் பின்னாளில் எழுதப்பட்டு அவர் பெயரில் சேர்க்கப்பட்டிருக்கிலாம் என்று வாதிடும் ஒரு வலுவான விவாதத் தரப்பு உண்டு. இருப்பினும் அது நிறுவப்பட்ட வாதம் அல்ல என்பதால் இப்பாடல்கள் யாவும் ஆதிசங்கரர் இயற்றியதாக கருதுவதே மரபு.

'பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம். அனைத்து இறைகளும் பிரம்ம ரூபங்களே, அவை அனைத்துமே ஒன்று' என்ற கருத்தின் மூலம் அறுவகை சமயங்களையும் (ஷண்மதங்கள்) ஒன்றாக்கியவர் ஆதிசங்கரர். ஆச்சரியமாக அவர் இயற்றிய பாடல்களே இன்றுவரை அதன் ஒவ்வொரு பிரிவிலும் புகழ்மிக்க பாடல்களாக நீடிக்கின்றன.

தேவியைக் (சாக்தம்) குறித்து அவர் இயற்றியுள்ள பாடல்கள்: சௌந்தர்ய லஹரி, ஆனந்த லஹரி - இது சௌந்தர்ய லஹரியின் பகுதியாக அமைந்தது, அன்னையின் ஆனந்த நிலையை மட்டுமே விவரிக்கும் பாடல்கள். இதுபோக கனகதாரா ஸ்தோத்திரம், அன்னபூர்ணா ஸ்தோத்திரம், பவானி அஷ்டகம், தேவி புஜங்கம், மீனாட்சி ஸ்தோத்திரம் போன்றவையும் அவர் இயற்றியதாகக் கருதப்படுகிறது.

சைவத்தை எடுத்துக் கொண்டால் சிவானந்த லஹரி, தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், சிவ புஜங்கம், லிங்காஷ்டகம், காலபைரவஷ்டகம், சிவ பஞ்சட்சர ஸ்தோத்திரம் ஆகிய பாடல்கள். வைணவ பிரிவில் பஜ கோவிந்தம், விஷ்ணு புஜங்கம், கிருஷ்ண அஷ்டகம். மேலும் கணேச பஞ்சரத்ணம் (காணாபத்தியம்), சுப்ரமண்ய புஜங்கம் (கௌமாரம்) ஆகிய துதிப்பாடல்களும் சங்கரரின் நூல் பட்டியலில் உள்ளன.

தற்போது பத்மநாபன் சார் பகிர்ந்திருந்த ஐகிரி நந்தினி பாடலுக்கு வருகிறேன். மகிஷாசுரமர்தினி ஸ்தோத்திரம் என்றழைக்கப்படும் இப்பாடல் மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும் “தேவி மகாத்மியத்தை” அடிப்படையாகக் கொண்டு ஆதிசங்கரர் இயற்றியது.

சமஸ்கிருதத்தில் அமைந்த இப்பாடலை தற்போது எழுத்தாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான நிரஞ்சன் பாரதி அவர்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப் பேரனான நிரஞ்சன் பாரதி, கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகனும் ஆவார்.

நான் கேட்டவரை ஐகிரி நந்தினி பாடல் இத்தனை நாளும் நாம் கேட்டு வளர்ந்த சமஸ்கிருத பாடலின் இசைத்தன்மை குலையாமல் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. வழக்கமாக தாளத்துக்காக எழுதப்படும் போது உருவாகும் செயற்கைத்தனம் எதுவும் தமிழ் வடிவத்தில் உருவாகவில்லை. மற்றபடி இசையும் சமஸ்கிருதமும் அறிந்தவற்களே இதுகுறித்து விரிவாக சொல்ல முடியும் என நினைக்கிறேன்.



முதலிரு பத்திகளை மட்டும் சமஸ்கிருத மூலத்தையும் அதற்கினையான தமிழ் வடிவத்தையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தேன்: 

சமஸ்கிருத மூலம்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தனுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே |

பகவதி ஹே ஸிதி கண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிகுருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஸைலஸுதே || 1 ||


ஸுரவர வர்ஷிணி துர்பர தர்ஷிணி துர்முக தர்ஷிணி துர்மதே

த்ரிபுர ஸரிணி ஸுரதில ரிணி ஸுரதில ரிணி ஸுரதிலதே |

அவநி ஸுதாவதி ஸாவதி ஸாவதி கல்பலதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஸைலஸுதே || 2 ||


நிரஞ்சன் பாரதி அவர்களின் தமிழ் வடிவம்:

ஐகிரி நந்தினி வைய மகிழ்வினி ஆடிடும் சேயினி நந்தி புகழ்

விந்திய மாமலை மேவிடும் மாதினி திருமிகுமாலினி அமரன் புகழ்

இறைவினி நீல மிடற்றன் குடும்பினி தரணி குடும்பினி நிறைமகளே

வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாகளே


வரமழை முகிலினி துருதர முடிவினி துர்முக முற்றினி மகிழினியே

மூவுலகாளினி சங்கரன் பாங்கினி தீவினை நாசினி கோஷினியே

தானவர் சீறினி திதிசுத தீயினி துர்மத காயினி ஆழினியே

வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாகளே


நான் ஒப்பிட்டு நோக்கியவரை அர்த்த மாறுபாடுகள் அதிகம் இல்லை, மூலத்தை ஒட்டியே செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் சமஸ்கிருத வேர் கொண்ட பல சொற்கள் தமிழ் வடிவிலும் இடம்பெற்றுள்ளன. இதை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். வைய மகிழ்வினி, நீல மிடற்றன், ஆழினி போன்ற பல பிரயோகங்கள் எனக்குப் பிடித்திருந்தன. எதற்காக இல்லாவிட்டாலும் சரணத்தின் இறுதியில் வரும் “பூங்குழலி மலைமாகளே” என்ற விளிக்காகவே இப்புதிய தமிழ் வடிவத்தைக் கேட்கலாம்.


உசாத்துணை:

https://www.advaita-vedanta.org/texts/Complete_Works_of_Adishankara.html


https://tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D

Comments

  1. இந்தக் குறிப்பை வாசித்துவிட்டு நண்பர் தினேஷ் இதற்கு தொடர்புடைய ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதை இங்கு பகிர்கிறேன்.

    //
    இதே ஆச்சரியம் எனக்கும் ஏற்பட்டது. சமிபத்தில் கேரளாவில் முருகன் கோவில் மட்டும் பார்க்கும் ஒரு பயணம் சென்றோம், அப்போது திருவனந்தபுரம் அருகில் குந்நம்பரா முருகன் கோவில் சென்றோம்.

    இது நாராயண குருவால் ஏற்படுத்தப்பட்ட ஆலயம். குரு கேரளம் முழுவதும் 44 கோவில்கள் கட்டினார் அதில் 14 கோவில் முருகன் கோவில். மேலும் நாராயணகுரு முருகன் மீது “ஷண்முக தசகம், குருக்களின் குரு, சுப்ரமணிய கீர்த்தனம் மற்றும் நவமஞ்சரி” என பல பக்தி நூல்கள் இயற்றியுள்ளார்.

    நாராயண குருவை சீர்த்திருத்தவாதி அத்வைதி என மட்டும் கேள்வி பட்டிருந்த எனக்கு இந்த செய்தி ஆச்சரியம் அளித்தது. அத்வைத மரபில் எல்லோருக்கும் இந்த இரண்டு முகம் உண்டு போல.
    //

    நாராயண குருவின் கவிமுகம் குறித்து சுகுமாரன் அருஞ்சொல்லில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்: https://www.arunchol.com/poet-sukumaran-on-narayana-guru

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...