Skip to main content

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா


கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா

அந்த இடம் மட்டும் மரங்கள் அதிகமின்றி வானைநோக்கி வெட்டவெளியாக இருந்தது. வான்வெளி பூங்காவின் மைய வளாகம் ஒரு சிறிய கட்டிடம்.

பிரதானமாக அக்கட்டிடம் தொலைநோக்கி மற்றும் அடிப்படையான சில உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடம் மட்டுமே. மற்றபடி வான்வெளி பூங்காவை அமைப்பது அந்த வெட்டவெளியும் இரவு வானும் தான். பிரதான சாலையிலிருந்து காட்டுக்குள் செல்லும் மண்பாதையில் இரண்டு கிலோமீட்டர் சென்றால் ஓரிடத்தில் பாதை சரிந்து இறங்கி இந்த பரந்த வெட்டவெளிக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அந்த பரந்தவெளி முழுவதும் பாறைப்பரப்பால் ஆனது. எனவே செடிகளோ மரங்களோ இல்லை. சில இடங்களில் மட்டும் குட்டை ரக புல் தாவரங்கள் மட்டும் படர்ந்திருந்தன. நாங்கள் சென்ற சேர்ந்த போது மணி ஏழரைக்கு மேல் ஆகி நன்றாக இருட்டிவிட்டிருந்தது.



தொலைநோக்கி வைக்கும் மேடைக்கு எதிர்ப்பக்கம் இருந்த இடத்தில் மழைநீர் தேங்கி சிறிய குட்டை ஒன்று உருவாகியிருந்தது. நாங்கள் அங்கிருந்த நேரம் முழுக்கவும் அத்திசையிலிருந்து தவளைகள் ஒலித்தபடியே இருந்தன. ஊரில் கேட்பதுபோன்ற தவளையொலிகள் அல்ல, இவை கூரிய ஒலிமிக்க ஓசைகளாக இருந்தன. வன அலுவலர்களிடம் கேட்ட போது அவை ஒருவகை நீர்த்தவளைகள் என்றனர். இரவுக்குரிய சில ஒலிகள் நம் மனநிலையையே சட்டென மாற்றி தீவிரமாக்கி விடுகிறது. பின்னணி ஒலியாக தவளைகள் அமைந்துவிட இவ்வாறு பூங்காவின் ஒவ்வொரு அம்சத்தையும் இயற்கை தன்போக்கில் வடிவமைத்துக் கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் எதன்பொருட்டு அன்றிரவு வந்திருந்தோமோ அதற்கு இயற்கை மனது வைப்பதாய் தெரியவில்லை. மாலை முதலே கோடை மழைக்கென வானம் இருட்டி வந்ததால் அன்று தெளிவான வானம் அமையவில்லை. இரவுப் பூங்கா செயல்படும் நேரம் மாலை ஏழு மணி முதல் இரவு பதினோரு மணி வரை. நாங்கள் சென்றவுடனேயே அலுவலர்கள் சொல்லிவிட்டார்கள், இன்றைக்கு வான் நோக்குவது தொன்னூரு சதம் சாத்தியமில்லை என்று. இருப்பினும் ஏதேனும் நிகழ்ந்துவிடாதா என நாங்கள் ஒன்பது மணிவரை காத்திருந்தோம். இறுதிவரை நிலவும் வியாழனும் மட்டுமே நல்ல ஒளியுடன் தெரிந்தன, அதுபோக மங்கலாக ஒன்றிரண்டு நட்சத்திரங்கள். ஒருகட்டத்தில் வியாழனின் ஒளியும் குன்றத் தொடங்கியதால் இதற்கு மேல் ஆகாது என்ற நிலைக்கு வந்திருந்தோம்.


நாங்கள் ஏற்கனவே இணையம் வழியாக பதிவு செய்திருந்ததால் கட்டணம் திரும்பி வரவும் வாய்ப்பில்லை. எங்கள் நிலையை கண்டு வன அலுவலர் சத்யராஜ் அவராகவே முன்வந்து ஒரு சலுகையை முன்வைத்தார். நாளைக்கு ஏழு மணிக்கே வந்துவிடுங்கள், தெளிவான வானம் அமைந்தால் இதே நுழைவுச்சீட்டை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்றார். மேலுமோர் இரவு மலையில் செலவிடுவதற்கான வாய்ப்பு, நான் உடனே ஒப்புக் கொண்டேன். அவர்களிடம் விடைபெற்று வனத்துறை குடிலுக்கே கிளம்பினோம். திரும்பி வரும் வழியில் அப்பா தன் நீண்ட நேர அமைதியை உடைத்து டீ குடிக்கலாம் என்றார். அவருக்கு இந்த வாழ்வில் உள்ள பிடிமானங்களில் ஒன்று டீ. சிறுவயதில் நாங்கள் ஊருக்கு போகும் போதெல்லாம் பேருந்து எந்த ஊரில் நின்றாலும் அப்பா பத்து நிமிடம் காணாமலாகிவிடுவார். தேடிப் பார்த்தால் அருகில் எங்காவது டீக்கடையில் நின்றிருப்பார். அவர் ஒவ்வொரு ஊரையும் டீயின் வழியாகவே உறிஞ்சிப் பார்ப்பதாகத் தோன்றும். டீ குடிக்கிறார் என்றால் அவர் சமநிலைக்கு வந்துவிட்டார் என்று அர்த்தம். டீ குடிக்கும் போது மொத்தமாக என்னதான் முடிவுகள் வந்திருக்கிறது என கேட்டறிந்து கொண்டார். கேட்டு முடித்ததும் இன்னொரு டீ சொன்னார்.


அடுத்தநாள் காலை நாங்கள் அதிகாலையே எழுந்தால் தான் ஆகாயகங்கை அருவிக்கு இறங்கி ஏற முடியும். வெயில் ஏறிவிட்டால் சிரமம். எனவே குடிலுக்கு திரும்பியதும் அனைவரும் உறங்கப் போனோம். எப்போதாவது அரசியல் பேசும் பள்ளி, கல்லூரி நண்பர்களின் அழைப்புகள் சில வந்திருந்தன. நான் எதையும் எடுக்கவில்லை. பக்கத்து குடிலில் இருந்தவரும் வன அலுவலர் ஒருவரும் மாலை முதலே போனில் உரக்க பேசியபடி தேர்தல் முடிவுகளை அலசிக் கொண்டிருந்தனர். மீண்டும் மீண்டும் ஒரே விஷயம். எப்படி நடந்தது, எப்படி நடந்தது.. யாரும் எதிர்பாக்கலையே.. ரெண்டு கட்சிக்கும் பணம் போச்சே.. எண்ணிக்கை கணக்குகள்.. இத்யாதி இத்யாதி. கதவை அடைத்தாலும் பனிரெண்டு மணி வரையிலும் அங்கலாய்ப்புகள் ஓயவில்லை. 


காலையில் நாங்கள் புறப்பட ஏழு மணி ஆகிவிட்டது. அருகில் கிடைத்த பணியாரங்களை ஆளுக்கு ரெண்டு விழுங்கிவிட்டு மூவரும் இறங்கத் துவங்கினோம். அப்பாவுக்கு சென்ற வருடம் தான் இதய அறுவை சிகிச்சை செய்திருந்ததால் அவர் மலர்வனத்திலேயே தங்கிவிட்டார். ஆகாயங்கை அருவிக்கு தொல்லாயிரம் படிக்கட்டுகள் என்கிறார்கள். சில இடங்களில் செங்குத்தாக இறங்கும். வெயில் ஏறிவிட்டால் திரும்ப ஏறுவது சற்றே கடினம். ஓரளவு ஆரோக்கியம் உள்ள எவரும் இறங்கி ஏறிவிடலாம். தீவிர உடல்நல சிக்கல் உள்ள வயதானவர்கள் மட்டும் தவிர்ப்பது நல்லது. பாப்ப்பவுக்கும் கால் மூட்டில் ஒரு மாதமாக பிரச்சனை இருந்தது. என்ன காரணத்தாலோ மூட்டில் உள்ள ஜவ்வு கிழிந்து விட்டதென்றும் சரியாக பார்த்துக்கொள்ளாவிட்டால் அறுவை சிகிச்சை வரை சென்றுவிடும் என மருத்துவர் பயமுறுத்தியிருந்தார். ஆனால் அவளுக்கு ஆகாயகங்கை தனிப்பட்ட முறையில் நெருக்கமானது. முதன்முதலாக அவள் அடைந்த பயண அனுபவங்களில் ஆகாயகங்கையும் ஒன்று. விடுமுறைதான் இன்னும் இரண்டு வாரம் இருக்கிறதே, படுத்துவிட்டால் பார்த்துக் கொள்ளலாம் என கிளம்பி வந்துவிட்டாள். அம்மா வருடாவருடம் பழனி பாதயாத்திரை செல்பவர், எனவே ஒரு பிரச்சனையுமில்லை.


பாதையின் இருபுறமும் நெடிதுயர்ந்த குல்முகர் மரங்கள் விதானம் அமைக்க இறங்கத் தொடங்கினோம். சின்னக் குக்குறுவானின் (White Cheeked Barbet) ஒலி. சென்ற வருடத்தின் நினைவுகளா அல்லது இப்போது ஒலிக்கிறதா என ஒருகணம் குழம்பினேன். சென்றவருடம் இங்கு வந்திருந்தபோதுதான் குக்குறுவானின் குரலை தெளிவாக அறிந்து கொண்டேன். அதிலும் இந்த சின்ன குக்குறுவான் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கும். எங்கோ வான் உரையாடல் போலக் கேட்கும். உடல் அதிகமும் பச்சை நிறத்தில் அமைந்த சிறிய பறவை என்பதால் தேடிப் பார்த்தாலும் அதிகம் கண்ணிலேயே படாது. குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மலைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழி என்றால் அது குக்குறுவானின் குரல் வழியாகத்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மலைப்பகுதிக்கும் அதற்கான குக்குறுவான்கள் உண்டு. நான் பார்த்தவரை தமிழகத்தை ஒட்டிய மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் சின்ன குக்குறுவான்களே அதிகம் ஒலிக்கின்றன.



கைப்பிடிச்சுவரில் அமர்ந்திருந்த சிறிய கருப்புநிற ஓணான் போன்று தோற்றமளித்த ஒன்றை அம்மா காட்டினாள். அருகில் சென்று படமெடுத்தேன். ஓணான் அல்ல, பாறைபல்லி அல்லது பாறையோந்தி (Black agamon) என்று சொல்கிறார்கள். ஆழ்ந்த சிந்தனையில் அமைந்திருந்தது. தற்போது இது தன் நிறத்தை மாற்றிக் கொள்ளுமா.. லேசாக மஞ்சளும் சிகப்பும் கூடுகிறதா? இதுவரை பேசிவந்த  கோட்பாடுகள் எல்லாம் பொருளிழந்துவிட்டதை எண்ணி திகைத்து நிற்கும் அரசியல் விமர்சகரைப் போல உறைந்து நின்றது. தேர்தல் முடிவுகள் வந்து ஓர் இரவு மட்டுமே தாண்டியிருக்கிறது. அதற்குள்ளாக விரிவான அலசல்களுடன் பொருட்படுத்தக்கூடிய இரண்டு கட்டுரைகளையேனும் நண்பர்கள் நிலைத்தகவல்களில் பகிர்ந்திருந்தார்கள். ஏன் இந்த அவசரம் என்ற சலிப்புதான் எனக்கு முதலில் எழுந்தது. ஒருமாதம் கழித்து எடுத்துப் பார்த்தால் இதில் எத்தனை பதிவுகளுக்கு மதிப்பிருக்கும்? மொத்த சமூகத்தில் ஒரு ஆள் கூட விடாமல் இந்த விஷயத்தை இருபத்தி நான்கு மணிநேரமும் பேசித்தான் ஆக வேண்டுமா? அப்படியில்லை. நடந்திருப்பது ஓர் அரிய நிகழ்வு, ஒருவேளை பெரும் திருப்புமுனை ஒன்றின் தொடக்கமாக இருக்கலாம். இருக்கட்டுமே. நவீன ஜனநாயகத்தில் ஓர் ஆட்சிமாற்றம் தனிமனிதனின் வாழ்வில் எந்தளவு பாதிப்பை செலுத்திவிட முடியும்? எந்த விதத்திலும் பாதிக்காமல் இருப்பதே ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். நாம் அப்படிப்பட்ட ஜனநாயகத்தை அடைந்துவிட்டோமா? 


நான் தற்போது செய்து கொண்டிருப்பது மட்டும் என்ன? தப்பி வந்த இடத்தில் ஒவ்வொன்றிலும் அதையே பார்க்கிறேன். இந்தப் பயணமே ஒருவகை எதிர்வினை தான். எத்தனை ஆக்கப்பூர்வமாக இருந்தாலும் எதிர்வினைகளுக்கு மதிப்பில்லை. அவ்வாறில்லை, மனம் என்பதே ஒரு பாவனை. அதை பழக்க முடியும், பழக்க வேண்டும். எதற்கு வந்தோமோ அதை மட்டும் செய்ய வேண்டும். இனி இப்பயணம் முடியும் வரை அரசியல் சிந்தனைகள் அறவே கூடாது.

 


மீண்டும் குல்முகர்கள். இறங்கும் பாதை என்பதால் பல இடங்களில் மரங்களின் உச்சியில் அமைந்த மலர்ச்செறிவை மிக அருகிலென கண்டேன். மலர்கள் கைவிரித்துக் கூவி தங்கள் இருப்பை அறிவித்துக் கொண்டன. என்னை அழைத்தன. மலர்களின் வழியே என்னை மீட்டுக்கொண்டேன். சுற்றிலும் இருந்த மலைமுடிகள் தலைக்கு மேல் எழுந்து வளர்ந்தன. நாங்கள் மேற்பரப்பின் சலனத்திலிருந்து ஆழத்தின் அமைதி நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தோம். பாறையிடுக்கில் ஊர்ந்து கொண்டிருந்த சிவப்புநிற பூச்சி இணையை பாப்பு சுட்டிக்காட்டினாள். இரண்டின் பின்பக்கங்களும் ஒட்டிக்கொண்டிருந்தன. அதில் சற்றே பெரிதாக இருந்த பூச்சி சிறியதை இழுத்துக் கொண்டு சென்றது. சிறியதும் மறுப்பேதும் சொல்லவில்லை. இழுத்த இழுப்புக்குச் சென்றது. புருஷன் பொஞ்சாதியாக இருக்கும். பொதுவாக ஆண் தான் பெரிதாக இருக்கும், இழுத்துக் கொண்டு போவது ஆண் என்றேன் நான். வாய்ப்பே இல்லை என்றாள் பாப்பு. ஆண் பெண் விவகாரங்களில் ஒருமுறைக்கு மேல் அவளிடம் நான் எதையும் மறுப்பதில்லை. எனவே அவ்விவாதம் அந்தரத்தில் நின்றது.



அருவியை நெருங்க நெருங்க இந்த சிவப்பு இணைகள் அதிகம் தென்பட்டன. கடைசியாக பார்த்த ஒரு ஜோடி மட்டும் பிரிந்து சென்று ஒன்றையொன்று தேடி அலைந்தன. படிக்கட்டுகள் முடிந்து பாறைகளில் தொற்றி ஏறத் துவங்கும் இடத்தில் அருவியின் முழுக்காட்சியையும் பார்க்கலாம். அருவியில் கூட்டம் அதிகமில்லை. அன்றைய முதல் பத்து நபர்களுக்குள்ளாக நாங்கள் வந்திருந்தோம். மேலிருந்து விழும் நீர் அருவியின் முன்பக்கம் தேங்கி அப்பால் சென்றது. நீர்தேக்கத்தை கடந்து செல்ல நல்ல தடிமனான கயிறு போட்டிருந்தார்கள். சில இடங்களில் மார்பளவு வரை ஆழம் கொண்ட அத்தேக்கத்தில் நீருக்கடியில் ஒரே பாறைகளாக இருக்கும். கயிற்றை பற்றிக்கொண்டு அருவியை சென்றடைந்தோம். இது கடந்த வாரம் பெய்த கோடை மழையால் உயிர்பெற்ற அருவி. வழக்கமான அளவில் பாதிகூட இருக்காது என்றனர். ஆனால் எங்களால் இதிலேயே நிற்க முடியவில்லை. நெருங்கும் போதெல்லாம் பின்மண்டையிலும் முதுகிலும் அறைந்து வெளித் தள்ளியது. காதின் மேற்பகுதியை கூரிய நீர் அம்புகள் துளைத்தன. மையத்தை நெருங்காமல் பாதுகாப்பு கம்பியை பிடித்தபடி விளிம்பின் சாரல்களிலேயே மாறி மாறி நின்றோம். குளிர் நீரில் சீக்கிரமே எனக்கு நடுக்கம் எடுத்துவிடும். ஒரு கட்டத்தில் நல்ல பாறை இடுக்காக பார்த்து அருவியினுள் ஒளிந்து அமர்ந்து கொண்டேன். வெளிஉலகு முற்றிலும் மறைந்துவிட நான் நீர்த்திரை அமைத்த குளிர்ந்த கூட்டினுள் தனித்து அமர்ந்திருந்தேன்.


விழித்து எழும் போது மதியம் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அருவியில் குளித்துவிட்டு வந்து படுத்ததில் மலைநிலத்திற்கே உரிய ஆழ்ந்த உறக்கம். மதியம் சாப்பிட்டுவிட்டு நேரம் இருந்ததால் சீக்குப் பாறை எனும் காட்சிமுனை சென்றோம். சென்ற ஆண்டு இந்த இடத்திற்கு வரும் வழியில் அதிகம் பார்த்த ட்ரம்பெட் (Trumpet) மலர்களுடன் மனம் சீக்கு பாறையை அடையாளம் வைத்திருந்தது. இம்முறையும் குல்முகருக்கு அடுத்தபடியாக கொல்லிமலையில் நாங்கள் அதிகம் பார்த்த மலர் இந்த ட்ரம்பெட் மலர்கள் தான். சாலையெங்கும் மனிதர்களுக்கு கேட்காத அலைவரிசையில் எதையோ இசைத்துக் கொண்டிருந்தன. சென்ற ஆண்டு பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த காட்சி கோபுரம் இம்முறை மூன்று தளங்களுடன் முழுமை பெற்றிருந்தது. முற்றிலும் இரும்பாலான கட்டுமானம், அகலமான சதுர வடிவில்  ஒவ்வொரு தளத்தையும் அமைத்திருந்தார்கள். மற்ற மூவரும் கீழேயே தங்கிவிட நான் மட்டும் கோபுரத்தின் உச்சிக்கு சென்றேன். மேலே காற்று வாங்கியபடி ஒரு பக்கம் மலைகளையும் மறுபக்கம் ஆழத்தில் கிடந்த நகரத்தையும் வேடிக்கைப் பார்த்தேன். நகரத்தின் கட்டிடங்கள் செப்பு சாமான்களாய் சிதறிக் கிடந்தன. சமநிலத்தை துச்சமாகக் காணும் அனுபவத்திற்காகவே ஒவ்வொரு முறையும் மலை ஏறி வரலாம்.



அங்கிருந்து கிளம்பி மாலை ஐந்து மணிக்கெல்லாம் வான்வெளி பூங்கா அமைந்த இடத்திற்கு வந்துவிட்டோம். அங்கேயே தங்கியிருக்கும் ஒரு வன அலுவலர் மட்டும் இருந்தார். ஏழு மணிக்குத்தான் அலுவலர் சத்யராஜ் வருவார் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டுமென்றார். அது ஏற்கனவே எங்களுக்கு தெரிந்த விஷயம் தான். மாலையை அந்த திறந்தவெளியில் செலவிடலாம் என்பதற்காகவே முன்கூட்டி வந்திருந்தோம்.


நேற்றிரவு தவளைகளின் ஓசை கேட்ட குட்டையை முதலில் சென்று பார்த்தேன். நன்றாக பாசி படர்ந்து நீர்த் தாவரங்களும் பூச்சிகளுமாய் அடர்பச்சை நிறத்தில் இருந்தது. நான் நெருங்கும் போதே கரையோரமாக இருந்த தவளைகள் ஒவ்வொன்றாக நீர்பரப்பின் மேல் தத்தித் தத்தி தாவி சென்று குட்டைக்குள் மறைந்து கொண்டன. நீர்பரப்பில் சறுக்கி சென்ற விதத்தை வைத்துப் பார்க்கும் போது அவை ஆழமற்ற நீர்நிலைகளில் காணப்படும் நீர்தத்தி தவளைகளாக (Common Skittering Frog) இருக்க வேண்டும். நாய்களும் குழந்தைகளும் ஒரு புதிய இடத்திற்கு சென்றால் அவ்விடத்தை தன் வசப்படுத்திக் கொள்ளும் பொருட்டு எல்லா பக்கமும் சென்று சரிபார்த்து தன் எல்லைகளை வகுத்துக் கொள்ளும். அதுமாதிரி அப்பகுதியெங்கும் சுற்றிவர ஆரம்பித்தேன். தொலைநோக்கி வைக்கும் தளத்தை சுற்றியிருந்த பாறைப்பரப்பில் ஆங்காங்கே சிறிய மரக்கழிகளை பாறைக்குள் ஊன்றியிருந்தார்கள். தரைக்கு மேலே அரையடி உயரம் மட்டுமே வெளித்தெரிந்தது. அப்பெகுதியெங்கும் கூடாரம் அமைத்து இரவு தங்குவதற்காக அக்கழிகள் நடப்பட்டுள்ளன என பாப்பு சொன்னாள். 


அங்கிருந்த சாலை ஏதோவொரு மலைக்கிராமத்திற்கு சென்று சேர்வதற்கானது. எப்போதாவது ஒருசில வாகனங்கள் நாளை முடித்துக் கொண்டு ஊருக்கு திரும்பின. அந்த வழியில் அனைவருமாக மாலை நடை சென்றோம். நான் வாழும் சிதல் புற்றை ஓரிடத்தில் கண்டேன். சிதல் உலகின் கட்டுமானம் மும்முரமாய் நடைபெற்று வந்தது. வாழும் புற்றை பார்க்கும் ஆர்வத்தில் நான் ரொம்பவும் அருகில் சென்றுவிட்டேன். உள்ளே பாம்பு இருக்கலாம், வேண்டாம் என்றாள் அம்மா. வாழும் புற்றுகளில் பாம்பு இருக்குமா என்ன? எனக்கும் உறுதியாகத் தெரியவில்லை. நடையை தொடர்ந்தோம். கொஞ்ச தூரத்தில் ஒரு மொட்டை மரக்கிளையில் குண்டு கரிச்சான் அமர்ந்திருந்தது. ஆண் பறவை பளபளக்கும் கருப்பு வெள்ளை நிறத்தில் நீண்ட வாலுடன் இருக்கும். ராபின் (Robin) வகையைச் சேர்ந்தது. பொதுவாக ராபின்கள் அனைத்துமே புகைப்படக்காரர்களுக்கு ஏற்ற பறவை. உள்ளூர் அரசியல்வாதியைப் போல நன்றாக பார்வையில் படக்கூடிய இடத்தில்தான் அமரும். மொட்டைக் குச்சியிலோ வேலிக் கம்பிகளிலோ அமர்ந்துகொண்டு சத்தம் கொடுக்கும். என்னைப் பார், என் புட்டத்தைப் பார் என வாலை நன்றாகத் தூக்கி ஆட்டி ஆட்டி நாலாபக்கமும் காண்பிக்கும். அந்த குண்டு கரிச்சான் எங்களையும் அந்திச் சூரியனையும் மாறி மாறி பார்த்து சத்தமிட்டது. இயற்கை சமைத்தளித்த அன்றைய மாலைக்கான வெளியை நாங்கள் அனுபவித்து முடிக்கையில் அந்தியும் முடிவுக்கு வந்திருந்தது.


சரியாக ஏழு மணிக்கு சத்யராஜ் சார் வந்ததுமே சொல்லிவிட்டார். நேற்றை விட இன்றைக்கு வாய்ப்பு குறைவு என்று. நன்றாகவே மேக மூட்டம் இருந்தது, வியாழன் கூடத் தெரியவில்லை. எதற்கும் அரைமணி நேரம் காத்திருக்கலாம் என்றார். ஆனால் அவர்கள் தொலைநோக்கியை வெளியே எடுக்கவே இல்லை. இங்கு வருவதற்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை தான் சரியான காலம் என்றார். தெளிந்த வானத்துடன் கூடிய நல்ல வெயில் நாளாக அமைய வேண்டும். மழைக்காலத்திலும் கூட நன்றாக மழை பொழிந்து முடித்த நாட்களில் தெளிந்த வானம் அமையும் என்றார். ஆனால் அதற்கு திட்டமிட முடியாது, தானாக அமைந்தால்தான் உண்டு. இணையத்தில் பதியாமல் நேரடியாக வந்தவர்களை இன்றைக்கு வான் நோக்குதல் சாத்தியமில்லை என திருப்பி அனுப்பிவிட்டனர்.


வான் நோக்குதல் சாத்தியப்படாவிட்டாலும் உங்களுக்கு வேறு சிலவற்றை காட்டுகிறேன் என தொலைநோக்கிகள் வைத்திருந்த கட்டிடத்தினுள் அழைத்துச் சென்றார். அங்கு உணவு மேசையின் வடிவத்தில் நல்ல அகலமான ஒரு தொடுதிரை இருந்தது. அதில் சூரிய குடும்பம் தொடங்கி பால்வெளியில் உள்ள ஒவ்வொன்றையும் விரிவான தகவல்கள் மற்றும் முப்பரிமாண படங்களுடன் பார்க்கலாம். நாங்கள் சூரிய குடும்பத்தை பார்த்து முடித்தவுடன் படத்தை சிறிதாக்கிக் கொண்டே சென்றோம். ஒரு கட்டத்தில் பால்வெளியின் ஒட்டுமொத்த வடிவமும் தெரிந்தது. சூரியன் பால்வெளியின் மையத்தில் இல்லாததை பாப்புவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பால்வெளியை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தால் தட்டையாக ஒரு படையாழி போல் இருந்தது.


அதற்குள் சத்யராஜ் அவர்கள் மெய்நிகர் அனுபவத்தை அளிக்கும் வி.ஆர். (VR) சாதனங்களை ஏற்பாடு செய்திருந்தார். கண்களில் மாட்டிக் கொண்டால் நாம் அந்த சாதனம் உருவாக்கும் உலகுக்குள் சென்றுவிடுவோம். தலையில் மாட்டிக் கொண்டவுடன் நான் விண்வெளியில் எங்கோ வியாழனுக்கும் சனிக்கும் இடையே நின்று கொண்டிருந்தேன். கையில் ஒரு கட்டுப்பாட்டுக் கருவியை கொடுத்து இருந்தார்கள். அதை அழுத்தினால் நம்மை சுற்றிக் கொண்டிருக்கும் எந்தக் கிரகத்தின் மீதும் கயிறு வீசலாம். பின்னர் கயிற்றை இழுத்தும் வீசியும் கிரகங்களை எப்படி வேண்டுமானாலும் பந்தாடலாம். சூரியனை தலையிலும் சனியை மடியிலும் பிடித்து வைத்துக் கொள்ளலாம். பூமியையும் செவ்வாயையும் மோதவிட்டு நமக்கான இரு வாய்ப்புகளையும் தவிடுபொடியாக்கலாம்.


மெய்நிகர் உலகு சலித்ததும் எங்கள் மனதில் தோன்றிய விண்வெளி சார்ந்த ஐயங்களையெல்லாம் சத்யராஜ் அவர்களிடம் கேட்கத் தொடங்கினோம். அவரும் பொறுமையுடன் ஓரளவு நிறைவுறும்படியான பதில்களை சொல்லிக் கொண்டிருந்தார். பாடத்திட்டத்தில் படித்த புளூட்டோ கிரகம் பின்னர் நீக்கப்பட்டது குறித்து பாப்பு நீதி கேட்டாள். அவர் சொன்ன விளக்கம் எனக்கு புரியாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும் படி இருந்தது. இறுதியாக எதிர்கால கிரகங்கள் குறித்த பேச்சு வந்தது. அவர் சூரியனுக்கு அருகில் இருக்கும் ஆல்பா செண்டாரி (Alpha Centauri) குடும்பத்தைப் பற்றி சொன்னார். அதுவொரு இரட்டை நட்சத்திரமாம் (Binary Star). அதன் குடும்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் பூமியை ஒத்திருப்பதாகச் சொன்னார். கிட்டத்தட்ட நான்கரை ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. ஓரளவு எட்டக்கூடிய தூரம் தானோ என்று நினைத்தேன். ஆனால் அவர் இப்போதைக்கு அங்கு செயற்கைக்கோள் செல்வது கூட சாத்தியமில்லை, எதிர்காலத்திலும் கூட ஒளியின் வேகத்திற்கு அருகே செல்லும் தொழில்நுட்பம் பெரும்பாலும் சாத்தியமில்லை என்றார். அதற்குள் இரவு பதினோரு மணி ஆகிவிட்டதால் நாங்கள் விடைபெற்று கிளம்பினோம்.


காரை எடுத்துக் கொண்டு கீழே இருக்கும் வேறொரு உலகுக்கு நாங்கள் செல்ல வேண்டியிருந்தது.

சீக்குப்பாறை


(மேலும்)


வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

Comments

Post a Comment

Popular posts from this blog

கொல்லிமலை பயணம் - அருகிருக்கும் ஷம்பாலா

தேர்தல் முடிவுகள் வரும்போது ஊரில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. என் வாழ்வில் நான் மிக முக்கியமானதாக கருதும் எழுத்துப் பணி ஒன்றை எனக்கு நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விசையை தக்கவைத்துக் கொள்ள

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?  ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,  “முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு. இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் ...

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

காதல் கவி தேவதேவன்

நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி